தொடர்கள்
அழகு
தமிழ்நாட்டில் முதல் ‘பசுமை தேர்தல்’ - தர்மபுரியில் சரித்திர நிகழ்வு- ப ஒப்பிலி

20260409073114512.jpg


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகளில் இந்தமுறை தேர்தல் வித்தியாசமாக அமைந்தது. வாக்களிப்பு மட்டுமின்றி, சுற்றுச்சூழலை காக்கும் உறுதிமொழியும் அங்கே எதிரொலித்தது. மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்திய ‘பசுமை தேர்தல்’ திட்டம் தமிழகத்திலேயே முதன்முறையாக செயல் படுத்தப்பட்டது.


உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுப் பார்வையாளர் ஹீரா லால் இந்த முயற்சிக்கு முன்னின்று வழிநடத்தினார். தேர்தல் நடைமுறையில் மக்காகாத கழிவுகளை முற்றிலுமாக ஒழிப்பதே இதன் முதன்மை நோக்கம் என்று அவர் தெரிவித்தார். “இந்த முயற்சி கார்பன் வெளியீட்டைக் குறைக்க உதவும்” என்றும் அவர் கூறினார்.

2026040907314797.jpg

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் முதல் ஐந்து வாக்காளர்களுக்கு விதை உருண்டைகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. வாக்குச்சாவடிகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவு பசுமை வளயமாக அறிவிக்கப்பட்டது.

முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேர்தல் அலுவலர்களுக்கு விதை பேனாக்கள், அதாவது, பயன்படுத்திய பின் மண்ணில் புதைத்தால் செடியாக முளைக்கக்கூடிய சிறப்பு எழுதுகோல்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் ஆர் சதீஷ் இந்தப் பசுமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு பசுமை டி-சர்ட்டுகள் வழங்கி கௌரவித்தார். வாக்குச்சாவடிகளை அலங்கரிக்க தென்னை மற்றும் வாழை மரங்களின் பூக்கள் பயன்படுத்தப்பட்டன.

மக்காகாத கழிவுகளே இல்லாமல் நடைபெற்ற இந்தத் தேர்தல், தமிழகத்தில் முன்னுதாரணமான ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.​​