தொடர்கள்
கதை
பதிர்பேணி பத்மனாபன் - கி.ரமணி

20260409071148134.jpg
பரிசாரகர் (அல்லது சமையல்காரர்) பத்மநாபனைத் தெரியாதவர்கள் 1960களில் நல்லூரில் ரொம்ப பேர் இருந்திருக்க முடியாது.

அஞ்சரை அடி உயரம். சிகப்பான தேகம். ஒட்டின வயிறு. அழுக்கா, பழுப்பா என்று கண்டுபிடிக்க முடியாதபடி மடித்துக் கட்டிய வேட்டி. அடுப்புப் புகையிலேயே வாழ்ந்து கருப்பான துண்டு.... இந்த பத்து என்ற பத்மநாபனின் வயது 35 இருக்கலாம்.

வலது காதுக்குள் நத்தை மாதிரி உருவத்துல ஒரு ஹியரிங் எய்டு வைத்திருப்பார்.
அது ரொம்ப வேலை எல்லாம் செய்யாது. சும்மா ஒரு மதிப்புக்குத் தான். நல்ல பரிசாகர்களுக்கு காது கேட்காமல் இருப்பது அந்த காலத்தில் சாதாரணம் மட்டுமில்லை.
அவர்களுடைய சமையல் திறமைக்கு ஒரு மாதிரி அளவுகோலாகவும் அவசியமாகவும் இருந்தது.

ஒருவேளை காது கேட்காதது, அவர்களுக்கு அனாவசிய சப்தங்களை தவிர்த்து, அவர்கள் மிகவும் ரசிக்கும் சமையல் கலையில் முழு கவனத்தையும் செலுத்த உதவி யிருக்குமோ என்னமோ!

நான் பத்தாவது லீவில் நல்லூர் வந்த சமயம்,எதிர்வீட்டு நாணாவின் மனைவியின் சீமந்தம் நடந்தது. நான் மட்டும் எங்கள் வீட்டில் இருந்து சீமந்த சாப்பாடு சாப்பிட சென்றிருந்தேன். அந்தச் சமையல் என்னை அசத்தியது.

வாழையிலை மூலையில் முதலில் ஒரு ஸ்வீட் போட்டார்கள். என் வாழ்நாளில் அத்தகைய சமாச்சாரத்தை சாப்பிட்டது கிடையாது. எனக்கு சாதாரணமாக தெரிந்த லட்டு,அல்வா, ஜிலேபி, பாதுஷா, போன்ற இனிப்புகளை எல்லாம் தாண்டி அவற்றின் தலையில் சிம்மாசனம் போட்டு உட்காரக்கூடிய தகுதி இந்த இனிப்புக்கு இருந்தது.

சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டுக்கு போய் என் பாட்டியிடம் நான் கேட்டேன் அந்த ஸ்வீட்டின் பெயர் என்ன என்று.
" எப்படிடா இருந்தது அந்த ஸ்வீட்டு? "
சின்ன பூரி மாதிரி இருந்தது பாட்டி. "கடிச்சா கரகரன்னு தித்திப்பா பொடி ஆச்சு. கொஞ்சம் ஜீரால முக்கின பாதுஷா போல இருந்தது."

"அதுக்கு பேர் பதிர்ப்பேணிடா. இன்னைக்கு அங்க பத்மநாபன் தானே சமையல். அவன் பெயரே பதிர்ப்பேணி பத்மநாபன் தானே!
இந்த இனிப்புக்கு வேலை அதிகம். மைதா, நெய், சக்கரை, பாதாம் னு செலவாகும். பணக்கார ஸ்வீட். இந்த பக்கத்திலேயே பதிர்ப்பேணி ன்னா பத்மநாபனை மிஞ்ச ஆளே கிடையாது. "

"உனக்கு தெரியுமா பாட்டி அவரை?"

"தெரியுமாவாவது. எனக்கு மருமகன் முறை வேணும்."

பாட்டி பத்மநாபனின் பின்னோட்டத்தில் மூழ்கினாள்.

"அவன் அம்மா கோதை எனக்கு ஒண்ணு விட்ட தங்கை. அவளும் ஒரு பரிசாரகனைத் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஒரே பிள்ளை பத்து. அவளோட வீட்டுக்காரருக்கு குடி, சீட்டு எல்லாம் உண்டு பத்துக்கு பத்து வயசா இருக்கும் போது அவன் அப்பா போயிட்டார்.

பத்துவை வளர்த்து இன்டர்மீடியட் வரை படிக்க வச்சா கோதை. சிவகாசியில் ஒரு பட்டாசு ஃபாக்டரில சூப்பர்வைசர் வேலை கிடைத்து. சேர்ந்துட்டான்.

ஃபாக்டரில வெடி விபத்து ஏற்பட வெடிச்சத்தத்தில் பத்துவோட காதுகள் முக்காலே அரைக்கால் வாசி போச்சு. அப்புறம் வேலையும் செய்ய முடியாமல் போச்சு. வயிற்றுப் பிழைப்புக்கு கடைசியில் பரம்பரைத் தொழில்தான் உதவியது. அவன் அப்பா மாதிரி பத்மநாபன் சமையல்காரன் ஆயிட்டான். அவனுக்கு கல்யாணத்தில் ஆசை இல்லை. அம்மாவும் அவனும் தான் அவனோட வாழ்க்கை.

இப்ப கிட்டத்தட்ட கோதைக்கு 55 வயசு இருக்கும். பத்மநாபனுக்கு 35 வயசு இருக்கும். பத்துக்கு அம்மான்னால் உசுரு. வெளியூருக்கு சமைக்கப் போனாலும் வேலை முடிஞ்ச உடனே கிளம்பி அம்மாவைப் பார்க்க போயிடுவான்."

பாட்டி பேசி முடித்த சமயத்தில் மடித்து கட்டின வேட்டி, தோளில்
துண்டு சகிதம் கையில் ஒரு மஞ்சள் பையுடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு பத்து நடந்து போய்க்கொண்டிருந்த போது, பாட்டி எதிரில் சென்று கைகாட்டி நிறுத்தி அழைத்து காப்பி கொடுத்தாள்.

நானும் பத்து அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாக தன் காது மடலை ஒரு கையால் வளைத்து பேச்சு வரும் திசையை நோக்கித் திருப்பிக் கேட்டார்.

அக்கறையுடன் பாட்டியை விசாரித்தார்

என்னிடம் (தனக்கு பதில் புரியுமா என்பது பற்றிக் கூடக் கவலைப்படாமல்) நிறைய கேள்வி கேட்டார்.
எனக்கும் பத்மநாபனை ரொம்பப் பிடித்து விட்டது.

சிரித்த முகத்தோடு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி கிளம்பினார் பத்து என்கிற பதிர்ப்பேணி பத்மநாபன்.

பன்னிரெண்டு வருடங்கள் ஓடிப்போயின.. சென்னையில் படிப்பு முடித்து நானும் வேலையில் சேர்ந்து விட்டேன்.

பாட்டி தாத்தா இன்னும் நல்லூரில் தான் இருந்தார்கள். தாத்தாவின் சதாபிஷேகம் நல்லூரில் நடக்க, என் பெற்றோர் உட்பட எல்லோரும் அங்கு சென்று இருந்தோம். நிறைய விருந்தினர்கள்.

அங்கு பத்மநாதனின் சமையல் தான். தன்னோட குழுவோடு அங்கு வந்திருந்தார்.

வயதால் ஏற்பட்ட கோடுகள் பத்து முகத்தில் கொஞ்சம் தெரிந்தன. உருவத்தில் கொஞ்சம் வசதி தெரிந்தது, வேட்டியில் பழைய அழுக்கு குறைந்து ஜரிகை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
காதில் ஹியரிங் எய்டு இல்லை.

பத்மநாபனிடம் சென்று பேசினேன். குள்ளமான மனிதர் ஒருவர்.. அவர் உதவியாளராம்..பெயர் சம்பத்... கூட இருக்கும் அவர், நான் சொல்வதைக் கேட்டு பத்து காதருகில் போய் சத்தமாக பேசுவார். பத்து,எனக்கு பதில் பேசுவார்.
இது எதற்கு என்று கேட்டபோது

" கஸ்டமரோட பேசும் போது ரொம்ப எளிதாகி விடுகிறது அவர்கள் சத்தம் போட்டு பேச வேண்டாமே.சம்பத் என் சித்தி பையன்." என்றார்.

சம்பத் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். " பத்து அண்ணா எனக்கு கடவுள் மாதிரி. " என்றார்.
மேலும் பேசும்போது "பத்து அண்ணா தன் அம்மாவை ரொம்ப மதிச்சு உசரமான இடத்தில் வைத்திருக்கிறார்" என்றார்.

" சம்பத் இருப்பதால் கல்யாண மண்டபங்களில் நிறைய பேருக்கு, எனக்கு காது கேட்காத விஷயமே தெரியாது. " என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பத்து.

"எப்போ திரும்பி போறீங்க?" சம்பத்து வழியாக நான் பேசியது கேட்டு பத்மநாபன் சொன்னார்.

" இன்னைக்கு ராத்திரி சமையலையும் முடிச்சிட்டு நாளைக்கு காத்தால ஒன்பதரை மணி பஸ்ல தான் போறேன். அம்மா ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருக்கா. "

" அம்மா உடம்பெல்லாம் நல்லா இருக்கு இல்லையா?"

" ஆஹா பேஷா இருக்கு. அவளுக்கு ஆயுசு நூறு. ஜோசியர் சொல்லிட்டார்.. " வெற்றிலை தெறிக்க சிரித்தார் பத்து.

தாத்தாவின் எண்பதாவது கல்யாணம் அழகாக முடிந்தது. பாட்டிக்குப் பெருமை. அம்மா
கோதையை நல்லூருக்கு கூட்டி வராததற்கு பத்மநாபனிடம் செல்லமாக கடிந்து கொண்டாள் பாட்டி.

மிகச் சிறப்பான சாப்பாடு. வழக்கம்போல மணி மகுடத்தின் மீது பதித்த வைரம் போல் பதிர்ப்பேணி தான் அமைந்தது.


சாப்பாடு முடிந்த கையோடு பத்து வின் அசிஸ்டன்ட் சம்பத் கிளம்பி விட்டார்.

" ஏண்டா இப்படி அண்ணாவை தனியா விட்டுட்டு போற? " என்று பாட்டி கேட்டதற்கு.. "ராத்திரி மட்டும் வீட்ல இருக்கிறவங்களுக்கு சாப்பாடு பண்ணணும். அவ்வளவுதானே? அண்ணா பார்த்துப்பார்.எனக்கு நெல்லையில் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. போறேன்" என்று கிளம்பி விட்டார்.

மத்தியானம் ரெண்டு மணிக்கு போஸ்ட் மாஸ்டர் நாராயணசாமி எங்க தாத்தா வீடு தேடி வந்து" உங்க வீட்டுல யாரு பத்மநாபன்? அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஒரு போன் வந்தது." என்றார்.

வாசலில் இருந்த ஒருவர் " உள்ள பொழக்கடை பக்கத்துல அதோ இருக்கானே அவன் தான் பத்மநாபன் என்கிற பத்து. போய் சொல்லுங்கோ ."

போஸ்ட் மாஸ்டர் உள்ளே போய் பத்மநாபனி டம் பேசிக் கொண்டிருந்தது எல்லாருக்கும் வாசல் வரை தெரிந்தது. கொஞ்ச நேரத்துக்கு மேல் திரும்பத் திரும்ப போஸ்ட் மாஸ்டர் ஏதோ சொல்ல, பத்து சிரித்துக்கொண்டே போஸ்ட் மாஸ்டரின் தோளில் தட்டிக்கொடுத்தார்.

பிறகு போஸ்ட் மாஸ்டர் கிளம்பி விடு விடு என்று திரும்பிப் போய்விட்டார்.

இரவு சாப்பாட்டிற்கு பிறகு எல்லாரும் தூங்கியாச்சு.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு போஸ்ட் மாஸ்டர், தாத்தா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த என்னை கூப்பிட்டுக் கேட்டார்.

"உங்க வீட்டுக்கு சமையலுக்கு வந்து இருக்கற பத்மநாதன் சுத்த அயோக்கியனா இருக்கானே!
நேத்து மத்தியானம் அவனுக்கு ஒரு டெலிபோன்ஸ்ரீவில்லிபுத்தூரி
லிருந்து வந்தது. ஒருத்தர் பத்மநாபனோட அம்மா மாரடைப்புல திடீர்னு போயிட்டான்னு சொன்னார். உடனே பத்மநாபனை அங்க வர சொன்னார்.
இவன் கிட்ட போய் சொன்னேன். இந்த மனுஷன் சிரிக்கிறான். திரும்பச் சொன்னேன். என் தோளில் தட்டிக் கொடுத்து "மாமா அப்புறம் வந்து உங்களை பார்க்கிறேன். இப்ப நான் ரொம்ப பிஸி"ன்னு சொன்னான்.

என்ன செய்வது என்று தெரியவில்லை. பிள்ளைக்கு தெரியாதா தன் கடமையைன்னுட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்.

இப்ப ஆறு மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து யாரோ உறவுக்காரன் போன் பண்ணி கத்துறான் "பத்மநாபன் இன்னும் அங்கு வரலைன்னு ."

என்று முடித்தார் போஸ்ட் மாஸ்டர்.

உதவியாளன் சம்பத் இல்லாத போது தனக்கு காது நன்றாக கேட்கும் என்று நடித்திருக்கிறார் பத்மநாபன். பாவம்.!

ஒரு பேப்பரில் விஷயத்தை எழுதி பத்துவிடம் கொண்டு போய் கொடுத்தேன். படித்துவிட்டு அப்படியே கீழே சாய்ந்து விட்டார். பாவம்.
பத்மநாபனுக்கு ஆறுதல் சொல்லி ஒரு டாக்ஸியைக் கூப்பிட்டு கூட இருவருடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்தேன்.

அம்மா காரியம் முடிந்த விஷயத்தை பத்து பின்னர் ஒரு லெட்டர் எழுதி நன்றி கூறி இருந்தார்.
அதற்குப் பின் பத்துவை நான் பார்க்கவே முடியவில்லை. கல்யாணம் போன்ற விழாக்களுக்கு வெளியூருக்கு போய் அவர் அதற்கு அப்புறம் சமையல் பண்ணதாக நான் கேள்விப்படவே இல்லை.

2003ல் என் மனைவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று இருந்தேன். ஆண்டாள் தரிசனத்துக்கு பின்னர் கோவிலுக்கு பக்கத்தில் புதுசா பிரபலமாக இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.


இலையில் முதலில் ஸ்வீட் ஒன்று வைத்தார்கள். பார்த்தால் பதிர்ப் பேணி. வழக்கமாக வைப்பார்களாம். ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்ட போது கரைந்து பத்துவை நினைவூட்டியது.


சாப்பிட்டுவிட்டு எழுந்தபின் கல்லாவுக்கு சென்றேன். சாட்சாத் பத்மநாபன் தான் கல்லாவில் வயதானவராக அமர்ந்திருந்தார். காதில் ஹியரிங் எய்ட் இல்லை.

ஹோட்டலின் பெயர் "கோதை விலாஸ்" இப்போது தான் உறைத்தது.

"என்னை ஞாபகம் இருக்கா?" என்று சத்தம் போட்டுக் கேட்டேன்.

" அட நம்ம நல்லூர் ரமணியா?வாப்பா" என்றார்


" நல்லா இருக்கேளா? " என்று சத்தமாக கேட்டேன்.

"ஆஹா "என்று பதில் கூறிவிட்டு "இனிமே பேசுற போது இவ்வளவு சத்தம் போட்டு நீ பேச வேண்டாம். எனக்கு ரெண்டு காதும் பிரமாதமா கேட்கிறது.


மதுரையில பெரிய ஈ என் டி சர்ஜன் கிட்ட அஞ்சு வருஷம் முன்னாடி ஆபரேஷன் பண்ணிட்டேன். காதுக்குள்ள ஏதோ சின்ன எலும்பு பிராப்ளம் தானாம். என்னைக்கோ சரி பண்ணிக் கொண்டிருந்
திருக்கலாமாம். ஆனால் நம்ம பிராப்த்தம் இப்பதான் காது சரியா ஆகணும்னு இருக்கு " என்று சிரித்தார்.

பின்னர் ஒரு பணியாளரை அழைத்து" சாருக்கு ஒரு கிலோ பதிர்ப்பேணி பார்சல் பண்ணிக் கொடு. சார் நமக்கு ரொம்ப வேண்டியவர்." என்று சந்தோஷத்துடன் சொன்னார் பதிர்ப்பேணி பத்மநாபன்!!