தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் - 4. ஜி.ஏ பிரபா

20260404095335925.jpeg

4) கலிதோஷ ஹரா

கலிதோஷஹரா கஞ்ஜலோசனா கம்ர விக்ரஹாI

​கர்மாதிசாக்ஷிணீ காரயித்ரீ கர்மபல ப்ரதா II

​நம் கலி தோஷங்களை நீக்குபவள் அம்பிகை. கலி கல்மஷ நாசினி என்றே லலிதா நாமம் போற்றுகிறது. அன்னையைப் பொறுத்தவரை எந்த ஜாதி, மத வேறுபாடு கிடையாது. அனைவரும் அவள் குழந்தைகள். அது மட்டுமே அவள் கவனிக்கிறாள்.

​வேறுபாடுகளால்தான் வாக்குவாதங்கள், போராட்டங்கள், பகைமை உண்டாகிறது. அம்பிகையை ஆராதிப்பவர்கள் எந்த வேறுபாடுகளும் பார்க்க மாட்டார்கள். அவர்களை அன்னை கனிவோடு பார்க்கிறாள். ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்யா லஹரியில் உன் முகத்தில் இருக்கும் மீன் போன்ற இரு கண்கள் அங்கும், இங்கும் சுழன்று பக்தர்களை, அவர்கள் கோரிக்கைகளை உன் காதுகளில் கூறுகிறது என்கிறார்.

​நீலோத்பவம் , போன்ற கண்களால் நீ என்னைப் பார்க்கலாகாதா என்றே மீனாட்சியிடம் நீலகண்ட தீட்சிதர் வேண்டுகிறார். நீரில் தோன்றுவது நீலோத்பலம், தாமரை போன்ற கண்களை உடையவள். கம் என்றால் நீர், கஞ்சம் என்றால் ஜனிப்பவள் என்பதை விட, பிரம்மாண்டம் என்றும் பொருள். தன் தாமரை போன்ற கண்களால் பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்து காப்பவள்.

​இந்தப் பிரபஞ்சமே அவளின் கண் அசைவில் உண்டாவது. அம்பிகையின் காரியமாக ஈசன் இருக்கிறார், அம்மையப்பன் உயிர்மெய் வடிவம். மெய், ஈசன் எனில் உள்ளிருக்கும் உயிர் அம்பிகை. அவளின் கடைக்கண் பார்வையினாலேயே இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி, உயிர்களை ரட்சிக்கிறாள் அம்பிகை.

​அநேககோடி பிரும்மாண்ட ஜனனி என்றுதான் அம்பிகை குறிக்கப்படுகிறாள். அதிக வனப்புடையவள். மனத்தைக் கவரும் தோற்றம் உடையவள் அம்பிகை. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி என்றே அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார். கம்பீரம், தைரியம் நிறைந்த அதி கர்வித வடிவமானவள். ஈசனின் பாதி.

உலகமே அவள் காலடியில் எனும்போது அவளின் கர்வத்திற்கு காரணம் இல்லாமல் இருக்குமா?

​பண்டாசுரனை அழித்தவள். கோடி யோகினிகளால் போற்றப் படுபவள். அந்த கர்வத்தினாலேயே ஆனந்த ஸ்வரூபமாக விளங்குகிறாள் அம்பிகை.

​நம் கர்மங்களுக்கு சாட்சியாய் அவளே இருக்கிறாள். மனிதன் செய்யும் காரியங்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைக்கிறோம். ஆனால் அவளே அனைத்து கர்மங்களுக்கும் சாட்சியாய் இருந்து நன்மை, தீமைகளுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்குகிறாள். மன சாட்சியாய் நின்று தவறுகளை உணர்த்துகிறாள்.

​மகாபாரதத்தில் கிருஷ்ணன் கூறுகிறான் “ உன் செயல்களுக்கு நீயே சாட்சி ஆகிறாய்” என்று. சக்தி என்று நாம் போற்றும் அம்பிகைதான் நமக்குள் மனசாட்சியாக இருக்கிறாள். அவளை மறைத்து விட்டு நாம் எதுவும் செய்ய முடியாது. அவள்தான் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அனைத்தையும் செய்விக்கிறாள். எனவேதான் த்ரிசதீ காரயித்ரீ என்கிறது அம்பிகையை. நாம் செய்யும் காரியங்களுக்கு உள்ளிருந்து சக்தியாக இயக்குபவள் அவளே.

​நம் கர்மங்களுக்கான பலனை அவள்தான் அளிக்கிறாள். கர்ம வினையின் காரணமாகவே நாம் பிறவி எடுக்கிறோம். அதில் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப, பலன்களை அனுபவிக்கிறோம். அம்பிகையை பூசிப்பதன் மூலம் நம் தீய வினைகளுக்கான பலன்களைக் குறைத்து, நல்ல வினைப்பயனை அழைத்து, மோட்சம் என்னும் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்கிறாள்.

​அம்பிகை லக்ஷ்மி வடிவானவள். எனவேதான் ஸ்ரீ சங்கரர், அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம் உன் தாமரை மலர் போன்ற பார்வை படுவதால் விலகும் என்கிறார்.

​“கமலோதர தீப்திரிஷ்டாம், புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா” என்று துதிக்கிறார். அருள் பொழியும் மேகமாய் அன்னையின் கண்களே விளங்குகிறது.

​பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் இரண்டாவது எழுத்தான “ஏ” என்ற ரூபமாக இருக்கிறாள் அம்பிகை. ஏ என்னும் எழுத்து, பிராண ரூபமாய், பரப்பிரம்மத்தை குறிக்கும். அந்தப் பரப்பிரம்மமே அம்பிகைதான். சிருஷ்டியில் கலைமகள், செல்வத்தை வழங்கி, வளத்தைத் தருவதில் அலைமகள், வீரம், தைரியம், துணிவில் மலைமகள் என்று முப்பெரும் தேவியாய் விளங்குகிறாள் அம்பிகை.

​கமலமுகம் மலர, மீன்கள் நெளியும் கண்களால் என்னைப் பார் தாயே என்று வேண்டுகிறார் ஸ்ரீமுக கவி. அவளை அம்மா என்று அழைத்தல் அமுதம் நிறைந்த வதனத்துடன் ஓடி வந்து தன் கடைக்கண் பார்வையாலேயே ரட்சிப்பாள் கமலாக்க்ஷி