தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 21 : “இன்று மட்டும் இருந்து போ வறுமையே! ” – மோகன் ஜி

20260408103408707.jpg

அந்நாளில் தொண்டை மண்டலத்தில் மதுர கவிராயர் என்ற புலவர் இருந்தார். புலமைக்கும் வறுமைக்கும் நெருங்கிய உறவு உண்டு அல்லவா?

திருநின்றவூரில் வாழ்ந்து வந்த காளத்தியப்பர் என்னும் வள்ளலைப் பற்றி மதுர கவிராயருக்கு தெரிய வந்தது. அவரை நாடிச் சென்றவர்கள் வெறுங்கையோடு திரும்பியதே இல்லையாம்.

அந்த வள்ளலைக் கண்டு, தன் நிலையைச் சொல்லி புகழ்ந்தும் பாடி விட்டால், இந்த இல்லாமை இல்லாது போகுமே என்று மதுர கவிராயர் தீர்மானித்தார்.

அடுத்த நாளே அவரை சந்திக்க முடிவு செய்தபின் அவருடைய மனம் தெளிந்தது. அந்தக் கணமே ஒரு வெண்பாவும் அவரிடமிருந்து புறப்பட்டது.

நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல

நாளைக் கிருப்பாயோ நல்குரவே ? – காளத்தி

நின்றைக்கு சென்றக்கால் நீயெங்கே நானெங்கே?

இன்றைக்கே சற்றே இரு.

பொருள் ;

நீங்காத நிழல்போன்று நெடுங்காலம் என்னோடு திரிந்துழல்கின்ற வறுமையே!

நாளைக்கு நான் திருநின்றவூர் சென்று காளத்தி வள்ளலை சந்தித்து விட்ட பின்பு உனக்கும் எனக்கும் என்னதான் உறவு எஞ்சியிருக்கும்?

போகட்டும். இன்று மட்டும் என்னோடு சிறிது நேரம் இருந்து விட்டு போ!