தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 35 – மோகன் ஜி

20260714102941609.jpg

சிற்றிலக்கிய வகைமையில் கலம்பகம் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்ததாகும். இவற்றுள், காலத்தே மூத்தது நந்திக் கலம்பகம். இதை எழுதிய புலவர்ப் பெருமகனார் எவரென அறியக் கிடைக்கவில்லை. இது எழுதப்பட்ட காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும்.

கிபி 830 முதல் 854 வரை அரசாண்ட மூன்றாம் நந்திவர்ம பல்லவ மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து இயற்றப்பட்ட நூல் இது.

இந்த மன்னனுக்கு தெள்ளாறெறிந்த நந்தி, விடேல் விடுகு, அவனி நாராயணன் முதலான பல பட்டப் பெயர்களும் உண்டு. இந்த நந்தி வர்மன் சிவநெறிச் செல்வன். நீதி மான். பெருவீரன்.

கலம்பகம் என்பது பலவித மலர்களை கோர்த்துக் கட்டிய மாலை போல, பலவகை யாப்பு வகைகள் மற்றும் உறுப்புகளைக் கோர்த்து பாடிய பாமாலை என்று பொருள்படும். புய வகுப்பு, மதங்கு, களி, சித்து போன்ற 18 வகை உறுப்புகளை வைத்து பாடப் பெற்றதும், அந்தாதி தொடையில் அமைந்ததுமான அற்புதமான நூல்.

நந்திக்கலம்பகமே பிற்காலத்தில் எழுதப்பட்ட கலம்பக நூல்கள் பலவற்றுக்கும் வழிகாட்டி என்று கூறலாம்.

இந்த நந்திக்கலம்பகத்தை பற்றி இன்னொரு கர்ண பரம்பரை கதையும் உண்டு. மூன்றாம் நந்தி வர்ம பல்லவ மன்னனை போரிட்டு வெல்ல முடியாத தாயாதிகள், அறம் பாடுதல் என்ற முறையில் வஞ்சின வார்த்தைகளால் நூறு பாக்களை தொடுத்தனராம். நந்தி வர்ம பல்லவன் நகர்வலம் வருகையில், அவன் காதில் விழும்படியாக ஓரிரு பாடல்களை ஒரு கணிகையை வைத்துப் பாட செய்தனராம்.

பாடல்களின் நயம் கேட்டு சொக்கிய மன்னன் அந்த நூல் முழுவதையும் தனக்குப் பாடிக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு மந்திரி பிரதானிகளிடம் கட்டளையுமிட்டான்.

இந்தப் பாடல்கள் மன்னனுக்கு விளைவிக்கக் கூடிய தீங்கை உணர்ந்த அவர்கள் தடுத்துப் பார்த்தும் கேட்காமல், தன்னுயிர் போனாலும் நல்ல தமிழை கேட்டுவிட்டு போகட்டுமென்று அந்தப்பாடல்களைக் கேட்க விரும்பினான்.

இந்தப் பாடல்களைக் கேட்க வரிசையாக 100 கொட்டகைகளை எழுப்ப வேண்டும் என்றும் , ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கொட்டகையில் அமர்ந்து மன்னவன் பாடலைக் கேட்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஒரு கொட்டகையில் இருந்து பாடலை கேட்டுவிட்டு மன்னவன் அடுத்த கொட்டகைக்கு சென்றவுடன், முந்தைய கொட்டகை எரிந்து சாம்பலாகி விடும். கடைசிப் பாடலைக் கேட்கையில், கொட்டகையோடு சேர்ந்து மன்னனும் சேர்ந்து சாம்பலாகி விடுவான் என்றும் சொல்லப்பட்டது.

நந்தி வர்மனும் அந்த நிபந்தனைகளை ஏற்றான். தமிழைத் துய்க்கும் இன்பத்தைவிடவும் தன்னுயிர் பெரியதல்ல என்று மன்னவனும் கலம்பகத்தைக் கேட்டு தன் இன்னுயிரை துறந்ததாக அந்த செவிவழி கதை சொல்கிறது. இது சரித்திர சம்பவம் இல்லை என்று மறுப்போரும் உளர்.

நந்திக்கலம்பகத்திலிருந்து ‘புய வகுப்பு’ உறுப்பாக வைத்து பாடப்பட்ட பாடலை இன்று பார்ப்போம். புய வகுப்பு என்பதற்கு தோள்வலி என்று அர்த்தம் . மூன்றாம் நந்தி வர்ம பல்லவனின் புஜ பராக்கிரமத்தை புகழ்ந்து சொல்வதாக அமைந்த நயமிக்க பாடல் இது.

இனி பாடல் ;

மறமத கரிதிசை நிறுவின மணிநகை அவர்மனம் விழைவன

விறலர சர்கள்மனம் உழல்வன விரைசெறி களிமுலை பொருவன

திறலுடை இசைதொடை புனைவன திகழ்ஒளி மலையசம் ததைவன

நறுமலர் அணி தொடை முடியன நயபர நினதிரு புயமரோ

விளக்கம்;

நயபரன் என அழைக்கப் பெறும் எங்கள் நயமிகு மன்னவனே!

உன் தோள்களின் வலிமை திசைகளைக் காக்கும் வலிமைமிக்க மதயானைகளை எண்திசைகளிலும் நிறுத்த வல்லவை;

அதே தோள்களே முத்து போல் ஒளி விடும் பற்களையுடைய நங்கையரின் நெஞ்சங்களை உன்பாற் விழையச் செய்பவை.;

உன் திடமான தோள்களைக் கண்ட மாத்திரத்தில் பகையரசர்களை கிலி கொள்ளச் செய்பவை.

நறுமலர் மாலைகள் புரளும் காதல் மங்கையர்தம் கொங்கைகளுடன் பொருதுபவை.

புலவர்கள் தொடுக்கும் பாமாலைகளைச் சூடிக் கொள்பவை;

பிரகாசம் கொண்டு பளபளப்பவை;

அணி ஆபரணங்கள் சூடப் பெற்றவை .

மன்னவனின் தோள்களின் சிறப்பை அழகாக எடுத்துக் கூறும் இந்த புய வகுப்புப் பாடல் ரசிக்கத் தக்கதல்லவா?!