கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா பயணிகளை வலுக்கட்டாயமாக கவர்ந்து இழுக்கும் ஒரு வயல் வெளி கிராமம் தான் குமரகத்தில் உள்ள மலரிக்கல் வயல்கிராமம்.

இந்த கிராமம் முழுவதும் நூற்றுக்கணக்கில் நெல் விளையும் நிலங்கள் சூழ்ந்துள்ளன,
இந்த பெரிய வயல் வெளியினுடே செல்கிறது நீண்ட காயல்கள்.
இந்த வயல்வெளிகளில் ஆண்டுதோறும் நெல் அறுவடை முடிந்த பிறகு தென்மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டி தீர்க்கும் அதை தொடர்ந்து வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் தேங்கி பெரிய ஏரிகள் போல வயல் வெளிகள் மாறிவிடும்.
ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்த படர்ந்த வயல் வெளி ஏரியில் இருந்து எட்டி பார்க்கும் தாமரை போல இளஞ்சிவப்பு மலரான ஆம்பல் மலர்கள்.
இவை அல்லி மலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மறைந்து போன ஆம்பல் மலர்களும் பறந்து விரிந்து மிதக்கும் இலைகள் தண்ணீருள் மறைந்து விடும்.

சேற்றில் புதைந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஆம்பல் மலர்களின் விதைகள் ஜூன் மாத கடைசி வாரத்தில் முளைத்து தானாக தேங்கி இருக்கும் மழை நீரின் மேல் எழுந்து நின்று பூக்க ஆரம்பிக்கும்.
ஜூலை மாதம் பூக்கும் இந்த மலர்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் ஆயிரம் ஏக்கர் கணக்கில் பறந்து காணப்படும் வயல் முழுவதும் இளம்சிவப்பு கம்பளம் விரித்தது போல செக்கசெவேரென்று கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கிறது.

இந்த அழகிய ஆம்பல் மலர் கண்காட்சி வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்தது.
இங்கு வாழும் விவசாயிகளுக்கு வயல் வெளி வேலையில் இருந்து ஓய்வு எடுத்து இந்த மலர்களை ஜஸ்ட் பார்த்து ரசித்து வந்தனர்.
அதே சமயம் சில வருடங்களுக்கு முன் ஒரு புகைப்பட கலைஞர் வெட்டிங் ஷூட் எடுக்க தம்பதிகளுடன் இங்கு வந்து படம் பிடித்து அதை இன்ஸ்டாகிராம், பேஸ் பூக்கில் பதிவு செய்ய, புகைப்பட கலைஞர்களின் படையெடுப்பு துவங்கியது.

இந்த வயல்வெளிகளுக்கு செல்ல கிராமத்து விவசாய மக்கள் தங்களின் வள்ளங்களில் (சிறிய படகுகளில் ) அழைத்து சென்று வர துவங்கி பின் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க இந்த பயணம் மூன்று மாதங்களுக்கு ஒரு தொழிலாகவே மாற்றி தங்களின் விவசாய வேலைக்கு ரெஸ்ட் எடுக்கும் தருவாயில் ஒரு வருமானத்தை ஈட்டிதருகின்றது இந்த அதிசிய மலர்கள் !.
நாமும் இந்த அதிசய மலர்களை பார்த்து வர கோட்டயத்தில் இருந்து மலரிக்கல் கிராமத்திற்கு பயணித்தோம்.
அந்த கிராமத்தினுள் செல்லுமுன் சிலர் நம் காரை தடுத்து நிறுத்தி " நீங்க வந்தது ரொம்ப லேட் ஆம்பல் பூ மறைந்து விட்டது திரும்பி போங்க " என்று கூற, நாம் ஜஸ்ட் கிராமத்தை பார்த்துவிட்டு செல்கிறோம் என்று கூறி கடந்து சென்றோம்.
மலரிக்கல் கிராமத்திற்கு செல்ல சாலை ஓரத்தில் உள்ள வயலில் தேங்கிய நீரெல்லாம் பம்ப் செய்து எடுத்து நெல் சாகுபடிக்கு ரெடியாகி கொண்டிருந்தது.

நம்மை இன்னும் நீர் வெளியேற்றப்படாத இடத்திற்கு அழைத்து செல்கிறோம் என்று ஒரு விவசாயி தன் வள்ளத்தில் அழைத்து சென்றார்.
பெட்ரோல் மோட்டர் வள்ளத்தில் ஒரு மணிநேர பயணம் காலை 6. 30 மணிக்கு அழகிய காயலில் மிதந்து சென்றோம்.

இருபக்கமும் அந்த கிராமத்தின் குடியிருப்புகள் பல் துலக்கி, முகம் கழுவி, குளியல் மற்றும் துவைத்தல் எல்லாமே இந்த காயல் ஓடும் நீரில் தான்.
அந்த அதிகாலை வேளையில் கை குழந்தையை கூட அந்த ஆற்றில் குளிக்க வைத்துக்கொண்டிருந்தனர் அம்மாமார் !.

இரண்டு வாத்து கூட்டம் பட படவென்று நம் படகை சூழ்ந்து கொண்டு கடந்து சென்றது. 'நாடோடி தென்றல்' படம் நம் நினைவுக்கு வந்து சென்றது.

காலை சூரிய உதயம் என்று இயற்கையை ரசித்த வண்ணம் ஆம்பல் மலர் கூட்டத்தின் வயல் அருகில் சென்று படகில் இருந்து கரையில் ஏறி பின் வேறு ஒரு வள்ளத்தில் இடம்பெயர்ந்தோம்.
ஸ்லோ மோஷனில் மிதந்து செல்ல ஆ ஆ... கண்கொள்ளா காட்சி தான்.
சூரியன் மேலே வர வர ஆம்பல் மலர்கள் விரிந்து நம்மை சிரித்து வரவேற்றன.
அந்த காலை வேளையில் சிகப்பு ஆம்பல் மலர்கள் மிக சுறு சுறுப்பாக எட்டி பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்து திகைத்து போனோம்.
ஒரு சிகப்பு கடலை பார்ப்பது போல இருந்தது.

இந்த மலர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லுவதற்கு முன் நாம் சென்று அந்த அதிசயத்தை பார்த்தது ஒரு வரப்பிரசாதம் தான்.
விவசாயிகளோ அல்லது தோட்டக்கலை நிபுணர்களின் முயற்ச்சி இல்லாமலே தானாக வளர்ந்து அன்னைவரையும் கவர்ந்து மறைந்து கொள்ளும் அற்புத மலர்களை பார்த்து மெய்சிலிரித்து போனோம் !.
' லில்லி மலருக்கு கொண்டாட்டம் உன்னை பார்த்தத்திலே ' என்ற பாடல் நம்மை அறியாமலே முணுமுணுக்க செய்தது.
ஜோடிகள் மற்றும் குடும்பத்துடன் இந்த ஆம்பல் மலர்களை காண வள்ளத்தில் மிதந்து படங்கள் எடுத்து கொண்டிருந்தனர்.
சூரியன் மேலே மேலே வர ஆம்பல்கள் விரிந்து சிரிப்பதை பார்க்க முடிந்தது.
கோட்டயத்தில் இருந்து தன் நண்பர்களுடன் ஆம்பல்களை ரசித்து கொண்டிருந்த சந்திரசேகரிடம் பேசினோம்,
" மலர்கள் பூக்கும் சீசன் ஜூலை மாதத்தில் துவங்குகிறது.
அக்டோபர் மாதம் வரை காலையில் மட்டும் பூத்து குலுங்கும் அழகிய ஆம்பல் மலர்கள். அதன் பின் தேங்கி இருக்கும் தண்ணீர் முழுவதும் பம்ப் செய்து வெளியேற்றப்பட்டு நெல் விளைச்சலுக்கு இந்த பரந்த வயல் வெளி ரெடியாகும். இங்கு உள்ள விவசாயிகளுக்கு மூன்று மாதம் சுற்றுலா பயணிகளின் வருகையால் தான் வருமானம் கிடைக்கிறது. இங்கு வந்து இந்த மலர்களை ரசிப்பதே ஒரு கிபிட் தான் " என்கிறார்.
ஆம்பல் பூக்கள் பூத்து குலுங்கும் வயலினுள் காலை சுற்றுலா பயணிகளை படகில் அழைத்து செல்லும் சுக்ரு நம்மிடம் கூறும் போது,

" வருஷத்தில் மூன்று மாதம் ஆம்பல் பூ வாட்டர் லில்லி சீசன். இந்த பகுதி முழுவதும் வயல். நெல் அறுவடை முடிந்த பின் மழையால் வெள்ளம் இங்கு முழுவதும் சூழ்ந்து விடும்.
ஆகஸ்ட் மாதம் முதல் ஆம்பல் பூ பூக்க துவங்கி தினமும் காலை மலர்கள் விரிந்து சூரிய வெளிச்சத்திற்கு அழகு மிளிர காட்சி அளிக்கும்.
250 ஏக்கர் முழுவதும் பூ நிறைந்து காணப்படும் தினமும் ஆயிரம் கணக்கில் ஆட்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்
மூன்று மாசம், இந்த பூக்கள் படகு ஓட்டுபவர்கள், வாகனங்கள், ஹோட்டல்கள் மற்றும் எங்களை போன்ற விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
அக்டோபர் மாதத்திற்கு பின் இந்த மலர்கள் வாடி இந்த வயலினுள் மறைந்து விடும். நாங்கள் இங்கு மீண்டும் விவசாயம் தொடங்கிவிடுவோம், மீண்டும் இந்த அழகிய அதிசிய மலர்களை பார்க்க ஒருவருடம் காத்திருக்க வேண்டியது தான் " என்கிறார்.
ஆம்பல் அற்புத மலர்களை பார்த்து ரசித்து விட்டு கையில் பறித்த மலர்களுடன் அதே படகில் திரும்பினோம்.
ஆம்பல் மலரின் தாவரவியல் பெயர் the Nymphaea nouchali என்பது தான்.
ஆம்பல் வசந்தம் என்று கேரளா சுற்றுலா இயற்கை விழாவாக இந்த மூன்று மாத மலர் காட்சியை கொண்டாடுகிறது.
தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்கானிஸ்தான், தைவான் மற்றும் வட ஆஸ்திரேலியாவில் பூக்கிறது. இது அலங்கார குளத்து பூ என்று அழைக்கிறார்கள்.
பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்காவின் தேசிய மலர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கேரளா கோட்டயத்தில் உள்ள மலரிக்கல் கிராமத்து வயல் வெளியில் மட்டும் தான் இளம்சிவப்பு ஆம்பல் மலர்கள் கடல் போல மூன்று மாதம் மட்டும் காலை பூத்து குலுங்கி அனைவரையும் மயக்கவைத்து மறைந்து விடுகிறது இந்த அதிசிய ஆம்பல் மலர்கள்.

Leave a comment
Upload