தொடர்கள்
ஆன்மீகம்
நவராத்திரி கொலுவும்..!! மஹா பெரியவாளும்…!!! - ஆரூர் சுந்தரசேகர்.

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!

இன்றைய நவராத்திரி கொலுவில் காஞ்சி மஹா பெரியவா அவர்களின் திருவுருவ பொம்மைகளை (களிமண் அல்லது பேப்பர் மேஷ்) குருவின் ஆசீர்வாதமாகவும் ஞானத்தின் அடையாளமாகவும் கொலுப் படிகளில் வைக்கும் வழக்கம் பக்தர்களிடையே அதிகமாக உள்ளது.
காஞ்சி மஹா பெரியவா (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்) நவராத்திரி கொலு வைப்பது மற்றும் கொலு பொம்மைகளின் முக்கியத்துவம் குறித்தும் மிகவும் அருமையான ஆன்மீகத் தத்துவங்களை வலியுறுத்தியுள்ளார். காஞ்சி மடத்தில் அவர் நடத்திய நவராத்திரி பூஜைகளும், அவர் பக்தர்களுக்கு அருளிய உபதேசங்களும் மிகவும் விசேஷமானவை.

ஒரு சிறுமியின் கேள்விக்காக ஒரு மணி நேரத்தில் காஞ்சி மடத்தில் கொலு வைத்த மஹா பெரியவா:

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!

ஒரு முறை நவராத்திரி சமயத்தில், மகா பெரியவா தங்கியிருந்த காஞ்சி மடத்திற்கு ஒரு சிறிய பெண் வந்தாள். மடத்தில் கொலு பொம்மைகளோ அல்லது கொலுப் படிகளோ வைக்கப்படவில்லை என்பதைக் கவனித்த அந்த சிறுமி, “பெரியவா... மடத்துல கொலு ஏன் வைக்கலை? பொம்மைகளே இல்லையா?" என்று கேட்டாள். குழந்தையின் அந்த எளிய கேள்வியில் இருந்த பக்தியைக் கண்டு உருகிய மஹா பெரியவா, உடனடியாக மடத்தின் பணியாளர்களை அழைத்து, ஒரு மணி நேரத்திற்குள் மடத்தில் கொலு வைக்க உத்தரவிட்டார். மடத்தில் இருந்த சில ஆன்மீகப் பொருட்களையும், பக்தர்கள் கொண்டு வந்த பொம்மைகளையும் கொண்டு உடனடியாகக் கொலு அமைக்கப்பட்டது. கொலு முடிந்த பிறகு, அந்த பொம்மைகளை அடுத்த வருடத்திற்காகப் பெட்டியில் பூட்டி வைக்காமல், அங்கிருந்த பக்தர்களுக்கே பரிசாக வழங்க உத்தரவிட்டார்.
"பொம்மைகள் என்பது வெறும் களிமண் அல்ல, அவை மகிழ்ச்சியையும் ஆன்மீகத்தையும் பரப்ப வேண்டியவை" என்ற தத்துவத்தை இதன் மூலம் உணர்த்தினார்.
தன் பக்தர்களின், அதுவும் ஒரு சிறு குழந்தையின் சின்னஞ்சிறிய ஆசையைக் கூட நிறைவேற்ற, மஹா பெரியவா எடுத்த இந்த முயற்சி அவரின் எளிமையையும் பேரன்பையும் உணர்த்துகிறது.

பாரம்பரிய கொலு வைக்கும் வழக்கத்தை மீண்டும் தொடங்கச் செய்த அற்புதம்:
பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது குடும்பக் கஷ்டங்கள் நீங்க மகா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். அவரது குடும்பப் பின்னணியை ஞானத்தால் அறிந்த பெரியவா, "உங்கள் வீட்டில் ஏதோ ஒரு காரணத்தால் நவராத்திரி கொலு வைக்கும் பாரம்பரிய வழக்கத்தை நிறுத்திவிட்டீர்கள், அதுதான் உங்கள் துன்பங்களுக்குக் காரணம். இந்த வருடம் முதல் மீண்டும் கொலு வைக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து செழிப்பு உண்டாகும்" என்று ஆசி வழங்கினார். மஹா பெரியவாளின் வாக்குப்படியே அந்த இளைஞர் கொலு வைக்க, குடும்பத்தின் அனைத்துப் பிணிகளும் நீங்கி வளம் பெருகியது.

கொலுவில் மஹா பெரியவா செய்த அற்புதங்கள்:
மஹா பெரியவா அவர்களின் திருவுருவ பொம்மையை நவராத்திரி கொலுவில் வைத்த பக்தர்களின் இல்லங்களில், மஹா பெரியவா பல ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். களிமண்ணால் ஆன தனது பொம்மையிலும் தான் சாந்நித்தியமாய் (உயிரோட்டமாய்) எழுந்தருளி இருப்பதை உணர்த்திய சில நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவங்கள்..!!

தானே படியிறங்கி வந்த மஹா பெரியவா:

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!

ஒரு பக்தரின் வீட்டில் நவராத்திரி கொலுவிற்காக மஹா பெரியவாளின் களிமண் பொம்மையை வாங்கி வந்திருந்தனர். அந்த வீட்டு மருமகளுக்கு மஹா பெரியவா மீது அசாத்திய பக்தி. எனவே, வழக்கமான சம்பிரதாயப்படி மகான்களின் பொம்மைகளை ஏழாவது படியில் வைக்காமல், தன் அன்பின் காரணமாக எட்டாவது படியில் (தேவர்கள் வைக்கும் இடத்தில்) மஹா பெரியவா பொம்மையை வைத்தார்.இதைப் பார்த்த அவளது மாமியார், "நவராத்திரி கொலுவில் மகான்களை ஏழாவது படியில்தான் வைக்க வேண்டும், தேவர்கள் படியில் வைக்கக் கூடாது" என்று சற்றே கோபப்பட்டு, மஹா பெரியவா பொம்மையை எடுத்து ஏழாவது படியில் மாற்றி வைத்தார். மருமகள் தன் மாமியாரிடம் வாதிட முடியாமல் மன வருத்தத்துடன் தூங்கச் சென்றாள்.
மறுநாள் காலை நடந்த அற்புதம்:

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!


விடியற்காலையில் மருமகள் கொலுவறைக்குச் சென்று பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்து போனாள். ஏழாவது படியில் மாமியார் வைத்த மஹா பெரியவா பொம்மை, தானாகவே மீண்டும் எட்டாவது படிக்கு ஏறி அமர்ந்திருந்தது.. பதறிய மாமியார், இது மருமகளின் வேலை தான் என்று நினைத்து மீண்டும் பெரியவாளை ஏழாவது படிக்குக் கொண்டு வந்தார். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் யாரும் தொடாமலேயே பெரியவா பொம்மை தானாகவே எட்டாவது படிக்கு இடம் மாறியது. அன்றைய விடியற்காலையில் மாமியார் கண்ட சொப்பனத்தில் மருமகளின் குரு பக்திக்குக் கட்டுப்பட்டு மகானே அங்கு அற்புதம் செய்ததை உணர்ந்த மாமியார், மருமகளின் பக்தியை மெச்சி தன் தவற்றை உணர்ந்தார். மாமியாரின் சொப்பனத்தில் வந்து காஞ்சி மகான் நடத்திய திருவிளையாடலை நினைத்து மனமுருகி காஞ்சி மடம் இருக்கும் திசையை நோக்கி நமஸ்கரித்தாள்.

கொலுப் பொம்மை வடிவில் நோய் தீர்த்த மகான்:

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!

மஹா பெரியவாளின் தீவிர பக்தை ஒருவரின் வீட்டில் கடுமையான பண நெருக்கடி மற்றும் அவரது மகனுக்குத் தீராத உடல்நலக் குறைவு இருந்தது. அந்த வருடம் நவராத்திரிக்குப் பொம்மைகள் வாங்கக்கூட அவர்களிடம் போதிய பணம் இல்லை. எனினும், ஒரு சிறிய களிமண்ணால் ஆன மஹா பெரியவா பொம்மையை மட்டும் வாங்கி, தனது வீட்டில் அமைத்த சிறிய கொலுவின் நடுவில் வைத்தார். நவராத்திரி ஒன்பது நாட்களும் அந்தத் தாய், மஹா பெரியவா பொம்மையின் பாதத்தில் மஞ்சள், குங்குமம் இட்டு உருகி வழிபட்டார். நவராத்திரி முடிந்த மறுநாள், அந்தப் பெண்மணிக்கு ஒரு சொப்பனம் வந்தது. அதில் மஹா பெரியவா நேரில் தோன்றி, கொலுவில் தான் அமர்ந்திருந்த இடத்தைக் காட்டி, "அங்கே இருக்கும் பிரசாதத்தை உன் மகனுக்குக் கொடு" என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டு விழித்த அந்தத் தாய் கொலுவறைக்குச் சென்று பார்த்தபோது, மஹா பெரியவா பொம்மையின் பாதத்தின் அருகே சிறிதளவு குங்குமமும், இரண்டு துளசி தளங்களும் விழுந்து கிடந்தன. அந்தப் பிரசாதத்தை மகனுக்குக் கொடுக்க, பல மாதங்களாகக் குணமாகாத அவனது நோய் சில நாட்களிலேயே முற்றிலும் குணமடைந்தது. தங்களைக் காக்க மஹா பெரியவா கொலுப் பொம்மை வடிவிலேயே அற்புதம் செய்ததை எண்ணி. அந்தக் குடும்பம் உணர்ச்சிவசப்பட்டது.

ஏழைச் சிறுமிக்குக் கொலுப் படிகள் தந்த மஹா பெரியவா:

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!

ஒரு முறை மஹா பெரியவா முகாமில் தங்கியிருந்தபோது, ஏழைச் சிறுமி ஒருத்தி தனக்குக் கொலு வைக்க ஆசை ஆனால் படிகள் அமைக்க வீட்டில் வசதி இல்லை என்று பெரியவாளிடம் வந்து வருத்தப்பட்டாள். மஹா பெரியவா அவளிடம், "உன் அகத்தில் (வீட்டில்) இருக்கும் ஒரு சின்ன மரப் பலகையை எடுத்துத் துடைத்து வை. அதன் மேல் ஒரு துணியைப் போடு. உன்னிடம் இருக்கும் ஒரு பொம்மையை வை, நான் அங்கே வருகிறேன்" என்றார்.
அச்சிறுமி தன் ஏழ்மையான வீட்டில் ஒரே ஒரு பலகையை வைத்து, அதன் மேல் தன்னிடம் இருந்த ஒரு பழைய கிருஷ்ணர் பொம்மையை மட்டும் வைத்து வழிபட்டாள். அன்று மாலை, காஞ்சியிலிருந்து ஒரு பெரிய பணக்கார பக்தர் பெரியவாளைத் தரிசிக்க வந்தார். பெரியவா அவரிடம், "இதோ இந்த அட்ரஸில் ஒரு சிறுமி இருக்கிறாள். அவளது வீட்டிற்குப் போய் ஐந்து கொலு படியும், நிறைய பொம்மைகளும் கொடுத்துவிட்டு வா" என்று கட்டளையிட்டார்.
மஹா பெரியவாளின் அருளால் அந்த ஏழைச் சிறுமியின் இல்லத்தில் அந்த வருட நவராத்திரிப் பண்டிகை பெரும் கோலாகலமாக, அற்புதமாக அரங்கேறியது.

மஹா பெரியவா உபதேசித்த நவராத்திரி வழிபாட்டு முறைகள்:

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!

நவராத்திரி வழிபாட்டில் ஆடம்பரத்தை விடப் பக்தியும் மனத்தூய்மையுமே முக்கியம் என்று மஹா பெரியவா கூறுவார். வசதி இல்லாதவர்கள் எளிய முறையில் அம்பாளுக்கு ஒரு பூ அல்லது பழம் சமர்ப்பித்து, தூய அன்போடு வழிபட்டாலே தேவியின் அருள் கிட்டும்.
நவராத்திரியின் போது சிறுமிகளை (கன்னியர்) மற்றும் சுமங்கலிப் பெண்களை அம்பாளின் சொரூபமாகப் பாவித்து, அவர்களுக்குத் தாம்பூலம், ஆடை, மங்களப் பொருட்கள் வழங்கி உபசரிப்பது மிக உன்னதமான புண்ணியத்தைத் தரும்.
அம்பாளுக்குச் சமர்ப்பிக்கப்படும் சுண்டல் மற்றும் பிரசாதங்களை அக்கம் பக்கத்தினருக்கும், குறிப்பாக வறியவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் மாலையில் வீடுகளில் லலிதா சஹஸ்ரநாமம்அல்லது மஹிஷாஸுர மர்தினி ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது குடும்பத்திற்குப் பாதுகாப்பையும், தீய சக்திகளிடமிருந்து விடுதலையையும் தரும் என்று மஹா பெரியவா அறிவுறுத்தியுள்ளார்.

Navarthiri Koluvum..!! Maha Periyavalum…!!!

மஹா பெரியவா காட்டிய வழியில் நவராத்திரி திருநாட்களில் அம்பாளையும், குருவையும் தியானிப்பது நம் மனதைத் தூய்மைப்படுத்தி, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் இறைவனின் வடிவமாகப் பார்க்கும் உன்னதமான வழிபாடாகும்.
இவை அனைத்தும் நம் இல்லங்களில் அமைதியையும் மங்கலத்தையும் நிலைநிறுத்தும்..!!