
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலு பொம்மைகளின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னைப் பெருநகரைச் சுற்றி வருகையில் நம் கண்களையும் கருத்தையும் கவர்ந்த சில கொலுக்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக வைக்கிறோம்
பெரம்பூர் எஸ்.பி.ஆர் சிட்டி (Market of India) பன்னடுக்கு குடியிருப்பு மால் (பழைய பின்னி மில் கட்டிடத்தின் பெரும்பகுதி):

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் வணிக வளாகங்கள் அடங்கிய பிரமாண்டமான மாலின் நடுப்பகுதியில் முதன்முதலாக, 48.1 அடி உயரத்தில் ‘நம்ம சென்னை’ எனும் தலைப்பில் சுமார் 3,700க்கும் மேற்பட்ட விதவிதமான பொம்மைகளுடன் நவராத்திரி கொலு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பிரமாண்ட நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி லண்டனில் உள்ள வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்டில், உலக சாதனை படைக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இக்கொலுவில், சுமார் 7 அடி உயரத்தில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்களின் பிரமோற்சவம் போன்ற சென்னையின் பாரம்பரிய நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்கொலு கண்காட்சியை கடந்த 11-ம் தேதி முதல் வரும் 20-ம் தேதி வரை மொத்தம் 10 நாட்களுக்கு நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம் . .

கிண்டி ஆளுநர் மாளிகை (மக்கள் பவன்):
சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் கடந்த ஆண்டுகளைப் போல், நடப்பாண்டில் 10 நாள் பிரமாண்ட நவராத்திரி கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில், மதுரையில் வரலாற்று பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை மையமாகக் கொண்டு கொலு பொம்மைகள் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியுடன் சேர்த்து நாள்தோறும் பல்வேறு பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. வரும் 20-ம் தேதிவரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயிலை ராமகிருஷ்ணா மிஷனின் மாணவர் இல்லம்

கடந்த 11-ம் தேதி நவராத்திரி உத்சவ் விழா மற்றும் பல்சுவை அம்சங்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகள் வரும் 19-ம் தேதிவரை நாள்தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர் இல்ல நிர்வாக அழைப்பின் பேரில் ஒவ்வொரு நாளும் நாமும் பங்கேற்று ரசித்தோம். 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை காலை நேரங்களில் ஶ்ரீமான் அக்காரகனி யு.வி.ஶ்ரீநிதி சுவாமிகளின் சுந்தர் காண்டமும், இடைப்பட்ட 3 நாட்களில் சுவாமி ஹரிவரத்னாந்தாஜி மகராஜின் சுவாமி விவேகானந்தரும் ஶ்ரீ ஆஞ்சநேயரும் எனும் பக்தி பிரசங்க நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஜி.கே.எம் காலனி நவராத்திரி கோயில்,கொளத்தூர்,
ஜி.கே.எம் காலனி, 36-வது தெருவில் அமைந்துள்ள நவராத்திரி கோயிலில் நடப்பாண்டு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளுடன் பிரமாண்ட நவராத்திரி கொலு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், இந்து புராணக் கதைகளை அச்சு அசலாக பிரதிபலிக்கும் வகையில் பொம்மை காட்சிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, விநாயகர் மாம்பழத்தைப் பெறுவதற்காக சிவன்-பார்வதியை வலம் வருவதும், அதைப் பார்த்து முருகன் கோபித்து செல்லும் காட்சியும், சிவபெருமானுக்கு விநாயகரும் முருகனும் இணைந்து அபிஷேகம் செய்யும் காட்சிகளும் தத்ரூபமாக பொம்மைகள் மூலம் நகரும் வடிவில் விளக்கப்பட்டு இருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வி.ஜி.பி மரைன் கிங்டம் (VGP Marine Kingdom) பொழுதுபோக்கு பூங்கா:,ஈஞ்சம்பாக்கம்

இங்கு , நீருக்கடியில் பிரமாண்ட கொலு கண்காட்சி (Underwater Golu) அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனித்துவமான கண்காட்சியை, கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் துவக்கிவைத்தார்.
சென்னை வேளச்சேரி உள்பட புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பழவந்தாங்கல், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனித்தனி வீடுகளிலும் வித்தியாசமான நவராத்திரி கொலு பொம்மைகளின் அணிவகுப்பை காண முடிகிறது. .. உதாரணமாக பூரி ஜெகநாதர் யாத்திரை, வைகுண்டம் (மேகக் கூட்டங்களுக்கு நடுவே உள்ள காட்சி) மற்றும் காஞ்சிபுரம் கருட சேவை போன்ற புதிய ஆன்மீக கொலு பொம்மைகளின் செட்களும் வீடுகளில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி பெண்களின் திருவிழா. இவ்விழாவுக்கே உரிய அழகும்,பரபரப்பும், மங்கல பரிசுகளும் என பரபரப்பாக இருக்கிறது. எல்லோருக்கும் நிறைவான மகிழ்ச்சியை இந்த விழாக்காலம் தர வேண்டும்
அனைவருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துக்கள்

Leave a comment
Upload