
கர்நாடக இசை பல பரிணாமங்களைக் கண்டிருந்தாலும், மரபு வழி வந்த சங்கீதத்தைக் கேட்கும் பொழுது ஏற்படும் சுகமே அலாதி தான். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, எம்.எல். வசந்தகுமாரி, ஜி.என்.பி என சங்கீத உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்து புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் ஏராளம்.
இவர்கள் வரிசையில், தனக்கே உரிய பாணியில், தனது காந்தக் குரலால் கேட்போரை கிறங்கச் செய்யும் இசையை அளிப்பவர் சுதா ரகுநாதன் அவர்கள். எம்.எல். வசந்தகுமாரியின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில் இவரது கச்சேரி எப்பொழுதும் அமைந்திருக்கும்.
அக்டோபர் 10ஆம் தேதி லண்டனில் அமைந்துள்ள பாரதீய வித்யா பவனில் இவரது இசைக் கச்சேரியைக் கேட்ட அனைவரும் இசை மழையில் நனைந்து திளைத்தார்கள் என்றே கூறலாம்.
லால்குடி ஜெயராமன் அவர்களது புகழ்பெற்ற சாருகேசி வர்ணமான, "இன்னும் என் மனை அறியாதவர் போல" என்ற பாடலோடு சுதா ரகுநாதன் தனது கச்சேரியைத் துவங்கினார். நிரவல், ராக ஆலாபனை என மிக அற்புதமாக இந்தப் பாடல் அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து "ஜெய ஜெய விட்டலா" என்ற புரந்தரதாஸரின் கீர்த்தனம் மூலம் கேட்பவர்களை உருகச் செய்து பண்டரிபுரத்திற்கே அனைவரையும் அழைத்துச் சென்றார்.

நவராத்திரியை முன்னிட்டு ஷ்யாமா சாஸ்த்ரிகள் அவர்களின், "நன்னு ப்ரோவோ லலிதா" என்ற லலிதா த்ரிபுரசுந்தரியின் பாடல் மூலம் அம்பாளின் அருளை மனமுருகி வேண்டினார். சுதாவிற்குப் பக்க பலமாக பாலு ரகுராம் அவர்களின் வயலினும், சோமசுந்தர தேசிகர் அவர்களின் மிருதங்கமும் அமைந்தன. இருவருமே தனி ஆவர்தனத்தில் தங்களது திறமைகளை நிரூபித்தனர்..
“கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதையா” என்ற நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான முருகன் பாடலோடு, ரசிகப்பிரியா ராகத்தில், "கோடீஸ்வரா அருள் செய்ய வேணுமய்யா" என்கிற மற்றுமொரு முருகன் பாடலையும் பாடிய பொழுது, அவரது தமிழ் உச்சரிப்புக்கும், பாடல் பாடும் திறனுக்கும் மயங்காதவர் இல்லை.

கன்னட மொழியில், வித்தியாசமான நாட்டுப்புற பாணியில் அமைந்த ஒரு பாடல், "அக்கா கேளவா நான் ஒந்து கனசு கண்டேன்". இந்த கன்னட வசனத்தை இயற்றியவர் அக்கம்மா தேவி; தான் எவ்வாறு பரமசிவனிடம் ஐக்கியமானேன் என்பதை, தான் கண்ட கனவின் மூலம் விளக்கும் அந்தப் பாடலை மிக அழகாகப் பாடி பாடலின் உட்கருத்தையும் அழகாக விளக்கி கூறினார்.
"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" என்று அவர் பாடத் தொடங்கிய பொழுது அரங்கமே ஆர்ப்பரித்தது. அபங் மற்றும் தில்லானா பாடி முடித்த இந்த இசை நிகழ்ச்சி இடைவெளி இன்றி தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு நிகழ்த்தப்பட்டது.
விழா முடிந்தவுடன், ஆவலோடு வந்த ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் பேசி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது, சுதா ரகுநாதனின் பெருந்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்த ஆண்டு நவராத்திரி விழா லண்டன் வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்குமே சுதா ரகுநாதனின் கச்சேரி ஓர் இனிதான அனுபவத்தைத் தந்தது..

Leave a comment
Upload