தொடர்கள்
விகடகவியார்
தேர்தல் ஆணைய சர்ச்சைகள் !!! எழுப்பப்படும் கேள்விகள்? -விகடகவியார்

2026917081629712.jpeg

சில வாரங்களுக்கு முன்பு ' தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை தான் எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் ஆதாரம்.

இதை வைத்துக் கொண்டுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இப்போது நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் ,தர்ணா , உச்சநீதிமன்றத்தில் வழக்கு எல்லாமே ஞானேஷ் குமாரை சுற்றித்தான் இருக்கின்றன.

தலைமை தேர்தல் ஆணையர் அவருடன் இணைந்து பணியாற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரின் முடிவுகளில் தங்களது ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த பத்து மாதங்களில் குறைந்தது 14 முறை ,தேர்தல் ஆணையத்தின் பெயரில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு முறையாக தங்களது ஆட்சேபனையை தெரிவித்து பதிவு செய்திருக்கிறார்கள்.

புதிய வாக்காளர்கள் பதிவு செய்தல் ,வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்குதல், மற்றும் மீண்டும் சேர்த்தல், வாக்காளர் தரவுத்தளப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் ஆணையம் ஒருமித்த கருத்துகொண்டு முடிவு செய்யப்படவில்லை என்பதை தான் அந்த பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டு இருந்தது.

சில விவகாரங்களில் தங்களுக்கு தெரிவிக்காமலே முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை சொல்கிறது.

ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை 'அதிகாரமற்றதும் மற்றும் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது.

தேர்தல் ஆணையம் இந்த செய்திகளை மறுத்தது. தேர்தல் சம்பந்தமான முடிவுகள் மூவரால் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட செய்தித்தாள் வெளியிட்டிருக்கும் கருத்து வேறுபாடு சம்பந்தப்பட்ட செய்தி சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் மத்திய அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பிய கடிதங்கள், பணியிட மாற்றத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி தொடர்பானவை.

அவற்றிற்கும் தேர்தல் ஆணையத்தின் கொள்கை முடிவுகளுக்கும், அல்லது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தேர்தல் முறைகேடுகள் மற்றும், வாக்குத்திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியும் கரப்பான் பூச்சி கட்சியும் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் ஏற்கனவே பலமுறை மறுத்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சௌகத் ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.ஏ.பேபி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இ டி முகமது பஷீர் ஆகியோரும் மனுதாரராக இணைந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இடையிலான வழக்கு என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள பிற சிறப்புத்தீவிர திருத்தம் தொடர்பான மனுக்களுடன் இணைந்து இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர். நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவை ராகுல் காந்தியின் மனுவுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது அந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்து மாநிலங்களின் விவகாரங்களையும் ஒரே பொதுவான வழக்காக விசாரிப்பதற்கு பதிலாக ஒவ்வொரு விவகாரத்தையும் தனித்தனியாக ஆராய விரும்புவதாகஉச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தலைமை நீதிபதி சூர்யகாந் இந்த வழக்கின் போது ' நீதிமன்றத்தை யாராலும் அழுத்தத்துக்கு உள்ளாக்க முடியாது ;அரசியல் தலைவர்கள் வெளியே என்ன பேசுகிறார்கள், நீதிமன்றத்திற்குள் என்ன பேசுகிறார்கள் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும் என்றும் சொன்னார்.

ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த எஸ்.ஐ.ஆர் தொடர்பான மனு மீது உச்சநீதிமன்றம் இதுவரை எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகளிடம் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த சிக்கல்யை முதலில் கையில் எடுத்தது கரப்பான் பூச்சிக் கட்சிதான்.

அவர்கள் இதை பெரிய போராட்டமாக கொண்டு சென்றார்கள். அதன் பிறகு தான் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த சிக்கலை கையில் எடுத்துக் கொண்டார்கள்.

இதில் திமுக இவர்களுடன் இணையாமல் தனியாக நின்று தேர்தல் ஆணையத்தை கண்டிக்கிறது.

பாரதிய ஜனதா மூத்த தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா "காங்கிரஸ் கட்சி கடைசியாக ஆட்சியில் இருந்த மாநிலங்களில் தமிழ்நாட்டில் 59 ஆண்டுகள், மேற்குவங்கத்தில் 49 ஆண்டுகள், சிக்கிம் 42 ஆண்டுகள் ,உத்தரப்பிரதேசம் 37 ஆண்டுகள், பீகார் 36 ஆண்டுகள், திரிபுரா 33 ஆண்டுகள், குஜராத் 30 ஆண்டுகள், ஒடிசா 26 ஆண்டுகள், நாகாலாந்து 12 ஆண்டுகள், மகாராஷ்டிரா 12 ஆண்டுகள் ஆந்திரா 12 ஆண்டுகள் இப்படி நீண்ட பட்டியலிட்டு இத்தனை ஆண்டுகளாக இத்தனை மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாததற்கு காரணம் வாக்குத் திருட்டுதானா ?" என்று கேட்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை வாக்காளர் சேர்த்தல், நீக்குதல். சிறப்பு வாக்காளர் திருத்தம்போன்ற பணிகளை அந்தந்த மாநில அரசு அதிகாரிகளை வைத்து தான் செய்து வருகிறது.

அவர்கள் பணியை மேற்பார்வை செய்வதோடு சரி. தேர்தல் ஆணையம் நாளுக்கு நாள் அதன் பணியை விழிப்புணர்வுடன் செய்து கொண்டுதான் இருக்கிறது. 60கள் மற்றும் 70களில் வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போன்றவை பெரும்பான்மை நிகழ்வுகளாக இருக்கும் பீகார், உத்திரபிரதேசம் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நியாயமாக நடைபெற்றது என்று சொல்ல முடியாது.

அப்படி எதுவுமே நடக்காமல் கிட்டத்தட்ட 99 சதவீதம் தேர்தல் நியாயமாகத்தான் நடக்கிறது .

வாக்குக்கு பணம் என்பதைத்தான் தீவிர கண்காணிப்புக்கு பிறகும் தேர்தல் ஆணையத்தால் சரிவர செயல்படுத்த முடியவில்லை.

வாக்காளர்கள் எல்லா கட்சியிலும் பணம் வாங்கிக்கொண்டு யாரோ ஒருவருக்கு தான் வாக்களிக்கிறார்கள்.

பணம் கொடுத்த மற்ற கட்சிக்காரர்களுக்கு அவர்கள் செய்யும் இந்த துரோகத்தை அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டால் தான் ஓட்டுக்கு பணம் என்பது நிறுத்தப்படும்.

புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் நாங்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்று ஆரம்பத்திலேயே சொல்லி அதை கிட்டத்தட்ட செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள். தோல்வி அடைந்தால் தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம் என்பது தொடர்கதை தான்.

ஆரம்பத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது கூட காங்கிரஸ் புகார் சொன்னது உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு போட்டது.

வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதில் எந்த முறைகேடுகளுக்கும் வாய்ப்பில்லை என்று சொல்லி தான் தீர்ப்பளித்தது.

வாக்காளர் பட்டியல் சேர்த்தல் நீக்கல் போன்றவற்றில் ஏதாவது முறைகேடு நடந்தால் அதற்கான சாத்தியம் மாநில அதிகாரிகளால் மட்டுமே நடக்கக்கூடும்.

அப்படி ஏதாவது முறைகேடுகளை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்தால் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து இருக்கிறது.