
தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று தான் ஆரம்பத்தில் ஜோசப் விஜய் அரசு சொல்லிக் கொண்டிருந்தது. அதன் பிறகு அமைச்சர்களின் நிருபர்கள் சந்திப்பில் மின்வெட்டு, அமைச்சர்களின் பொதுக்கூட்டத்தில் மின்வெட்டு, கோட்டையில் அமைச்சர்கள் இருந்த அறையில் மின்வெட்டு இப்படி தொடர் மின்வெட்டுக்குப் பிறகு ஆமாம் மின்வெட்டு இருப்பது உண்மைதான் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டார். தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு இன்று வரை தொடர்கிறது. மின்வெட்டை கண்டித்து சாலை மறியல், பஸ் மறியல் என்று மக்கள் வீதிக்கு வந்து இந்த அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மின்வெட்டுக்கு காரணம் பழைய டிரான்ஸ்பார்மர்கள் என்று முந்தைய திமுக ஆட்சி மீது பழி போட்டார். இன்னும் ஒரு படி மேலே போய் திமுகவினர். இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மின் உருகிகளை திருடுகிறார்கள் என்றார். ஆனால், இதை எல்லாம் பொதுமக்கள் நம்பவில்லை .மின்வெட்டு இதற்கான மக்கள் குரல் மற்றும் எதிர்க்கட்சி போராட்டம் என்று பெரிதான பிறகு அமைச்சர் நிர்மல் குமார் "தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கவும், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் வெளிச்சந்தையில் இருந்து குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஏலம் கோரியுள்ளது .தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் அதிகபட்சமாக ரூபாய் 35 வரை கொடுத்து வாங்கப்பட உள்ளது "என்றார்.
முந்தைய குறைந்த விலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு தற்போது இவ்வளவு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது நிர்வாக திறமையின்மை அல்லது மிகப்பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைச்சர் இது ஒரு குறுகிய காலம் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே. மின் நுகர்வோர் அதிகம் உபயோகிக்கும் நேரமான மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே இந்த மின்சாரத்தை பயன்படுத்த போகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக மின்வாரியத்தில் நடந்த சீர்கேடுகளை சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம் என்றும் விளக்கி இருக்கிறார்.
மின்வெட்டை எதிர்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை மின்சாரம் வாங்கியதில் இதுவே அதிகபட்ச விலை 2022 -ஆம் ஆண்டு யூனிட் 24 வரை கொடுத்து மின்சாரம் வாங்கியதே அதிகபட்ச விலையாக இருந்தது. சென்ற ஆண்டு உச்சபட்ச மின் தேவை 16 ஆயிரத்து 800 மெகா வாட்டாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது 21,700 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. எல் நினோ தொடர்பான வானிலை சூழல் இதற்கு ஒரு முக்கிய காரணம். காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவு இல்லை. மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் பற்றாக்குறை என்பதால் மின் தேவையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அமைச்சர் தொடர்ந்து விளக்கம் சொல்லி வருகிறார். அது மட்டுமல்ல மத்திய மின் தொகுப்பிலிருந்து என்.எல்.சி நிறுவனத்தின் 1,850 மெகாவாட் மின்சாரமும் காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. மொத்தம் 4850 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை என்பதால் மின்வெட்டை தவிர்க்க இந்தக் குறுகிய காலக் கொள்முதல் அவசியம் என்றும் சொல்கிறார் அமைச்சர்.
மின் தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதால் அதற்கான கொள்முதல் ஏற்பாடுகளை முன்கூட்டியே இந்த அரசு செய்திருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். மின்வெட்டு பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எச்சரித்தும் அரசு அலட்சியம் செய்ததுதான் முக்கிய காரணம் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய போது இன்றைய மின்துறை அமைச்சர் அன்றைய கட்சி நிர்வாகி 2023-ஆம் ஆண்டு திமுக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூபாய் 20-க்கு வாங்கிய போது விமர்சனம் செய்தார். இப்போது 35 ரூபாய்க்கு அவரே வாங்குகிறார் என்கிறார் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "மின்சார வாரியம் ஏற்கனவே பெரும் கடன் சுமையில் இருக்கிறது. ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடிக்கு அதிகமாக வட்டி மட்டும் செலுத்துகிறது. அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது கடன் சுமையை மேலும் அதிகரிக்கும்" என்கிறார். அன்புமணி ராமதாஸ் சொல்வது உண்மை என்பது போல் தான் அமைச்சரின் கருத்தும் இருக்கிறது. அக்டோபர் 12 முதல் 31 வரையிலான 20 நாட்களை கணக்கிட்டால் ஒரு நாளைக்கு ஐந்து கோடி என்று 20 நாட்களுக்கு 100 கோடி செலவாகும் என்கிறார். எந்த ஆட்சி வந்தாலும் நீண்ட காலத் திட்டங்கள் பற்றி யோசிக்காமல் இலவசங்களை மட்டும் கவனத்தில் கொண்டு வாக்கு வங்கி அரசியலுக்கு ஆட்சி நடத்தினால் மக்களுக்கு ‘ஷாக்தான்' அடிக்கும்.

Leave a comment
Upload