
அத்யாயம் 1:
" தன் ஃபேக்டரி அசிங்கத்தை எல்லாம் கொண்டு வந்து நம்ம தாமிரபரணியில் கலக்குறான் பாரு.
இவனெல்லாம் உருப்படவே மாட்டான். நாசமாப் போவான். "
என்று கெமிக்கல் ஃபேக்டரிக் கழிவை தாமிரபரணிஆற்றில் கலக்கும் முதலாளிகளைத் திட்டிக் கொண்டிருந்தாள் பங்கஜம் பாட்டி.
1970 வருஷம். மே மாசம்.
"சில பேர் வாக்கு நிச்சயம் பலிக்கும் என்பார்களே பாட்டி! அது நிஜமா?. நீயும் அந்த லிஸ்ட்ல உண்டா?
அல்லது சும்மா பயமுறுத்த சொல்லற கதையா?."
நல்லூர் மாலைப் பொழுதில் தாமிரபரணிப் படித்துறையில் எங்க பங்கஜம் பாட்டி வருஷாந்திர லீவுக்கு வந்திருந்த தன் பேரன் பேத்திகளுக்கு சாப்பிடக் கையில் தயிர் சாதமும் கீரைக் குழம்பும் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது மூத்த பேரனான நான் தான்இந்தக் கேள்வியைக் கேட்டேன்.
" அட, போடா. நான் ஏதோ ஆத்தாமை ல சொல்றேன். அதெல்லாம் நடக்கவா போறது.. ஆனா ஆண்டவன் ஒருத்தன் இருக்கான்.அவன் நிச்சயமா பாத்துப்பான்.
நீ சொல்ற மாதிரி ஒரு பையன் நல்லூரில் சில வருஷம் முன்னே இருந்தான். கொஞ்சம் புத்தி
சுவாதீனம் இல்லாத மாதிரி இருப்பான்.
. ஆனா திரிகாலஞானி மாதிரி அவன் சொன்னது எல்லாம் சரியாச்சு" "
என்று உற்சாகமானபாட்டி ஆதிசேஷனின் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
அது 1964 ம் வருஷம்.
பெருமாள் கோவில் வாசலில் இரு பக்கமும் திண்ணைகள் பரந்து விரிந்து இருக்கும்.. ஒவ்வொரு பக்கத்திலும் சௌகரியமாக பத்து பேர் படுத்துத் தூங்கலாம்.
கோவிலுக்கு வலப்பக்கத்தில் சற்று தூரத்தில் பொங்கி ஓடும் தாமிரபரணி நதி, தெற்கே பொதிகையிலிருந்து வரும் காற்றை தடவிக் குளிர்வித்து கோவில் பக்கம் அனுப்பிப் கொண்டிருக்கும்.
இடப்பக்கத் திண்ணையில் சற்று சாய்ந்து, ..அழுக்கான நாலு முழ வேட்டி , தோளில் பழுப்புத்
துண்டு, உச்சந்தலையில் ஆரம்பித்து இடுப்பு வரை படர்ந்த குடுமி.... இவற்றுடன் வழக்கமாக நின்று கொண்டிருப்பான் ஆதிசேஷன்.
அப்போ அவனுக்குவயது 20 பக்கம் இருக்கும்.
கச்சிதமான முகம் தான். ஆனால் சற்று அசடு தேங்கி இருக்கும் என்பார்கள் ஊர்க்காரர்கள்.
ஆதிசேஷன் கையில் ஒரு மண் உண்டியல். இது எப்போதும் கோவிலுக்கு நாலு ஆள் வரும்போது
நிச்சயம் அவன் கையில் இருக்கும்.
அந்த உண்டியல் ஒரு மண் சட்டி தான். தலைப்பக்கம் சுத்தமாக களி மண்ணால் மூடப்பட்டு மேலே நடுவில் நீள வாட்டில் காசு போடுவதற்காகஒரு மெல்லிய ஓட்டை மட்டும் இருக்கும்.
ஓட்டைக்குள் விழுந்த பணத்தை பானையை உடைக்காமல் எடுக்க முடியாது.
பானையை குலுக்கி கொண்டே ஆதி கோவிலுக்கு வருபவர்களிடம் உண்டியலில் ஒரு ரூபாய் போட சொல்லுவான்.
1964ல் ஒரு ரூபாய் என்பது பெரிய பணம் .
"ஏலே பைத்தாரா! உனக்கு ஒரு ரூபா வேண்டி இருக்காலே. பெரிய ஜமீன்தார் பரம்பரையோ?."
என்று கேட்போர் கிட்ட,
" எங்க பாட்டி தான் சேர்த்து வைக்க சொல்லி இருக்கா.
அவளுக்கு மொத்தம் 31 ரூபாய் சேர்த்து நான் கொடுக்கணும்."
என்று சொல்லிவிட்டு,கேள்வி கேட்டவர் ஒரு ஓட்டை காலணா போட்டால் கூட லாபம் என்று உண்டியலில் வாங்கிக் கொள்வான்.
அப்படித்தான் ஐந்து வருடமாக உண்டியலில் பணம் சேர்த்து வருகிறான்.
ஆதிசேஷன் சானம்மாப் பாட்டியின் பேரன் போல என்பார்கள். உண்மையில் அப்படி எல்லாம் இல்லை.
சானம்மா ஒரு வயசான விதவை.குழந்தை குட்டி கிடையாது. பெற்றோர்களும் மறைந்த பின் காரைக்குறிச்சியில் இருந்து
நல்லூருக்கு ஒரு சாக்குப் பையோடு வந்து கிழக்கோர கிருஷ்ணனின் பாதி இடிந்த வீட்டில் குடி வந்தாள் சானம்மா. அவளுக்கு அப்போ வயசு 65 இருக்கலாம். இது நடந்தபோது 1954னு நினைக்கிறேன்
வீட்டில் முன் இரும்பு அழியுடன் கூடிய ரேழி. உள்ளே ஒரு சிறிய கூடமும் சமையல் அறையும், மட்டும்தான் பாக்கி. மத்த பகுதி எல்லாம் இடிஞ்சுபோய் கொஞ்சம் எருக்கம் செடிகளும் பாம்புப் புற்றும் தான் உள்ளே இருந்தது.
வீட்டு சொந்தக்காரர் கிருஷ்ணனே கூட அவளிடம் வந்து" வாடகை கொடு" என்று கேட்கும் படியான நிலையில் வீடு இல்லாததும் சானம்மாவுக்கு சௌரியமாக போச்சு.
வீட்டுக்கு பின்பக்கம் ஓடும் தாமிரபரணி.ஆறு.
சானம்மா புத்திசாலி, தைரியசாலி. தனியாகத்தான் வீட்டில இருந்து வந்தாள்.
மேலத் தெருவில் ஒரு வீட்டில் திவசம் நடந்த போது சமையல் செய்வதற்கு வந்த ராமண்ணா தன் கூட ஒரு பத்து வயசு பையனை உதவிக்காக கொண்டு வந்தார்.
ஒல்லியா குடுமியுடனும் அழுக்கு நிஜாருடனும் பரிதாபமாக நின்றான் சிறுவன் ஆதி.
ராமண்ணா சானம்மாவுக்கு உறவு.
"சானம்மா இந்த பையனும் அனாதை தான். என்னோட நன்னா வேலை செய்கிறான்.பத்து வயசு ஆறது.. பேரு ஆதிசேஷன்.. ஆனா நான் போகும் ஊருக்கெல்லாம்
இவனையும் கூட்டிண்டு போறது கஷ்டமா இருக்கு. நீ வேணும்னா இந்த பையனை இங்கே வச்சுக்கோயேன் . கூடமாட ஒத்தாசயா துணையாக இருப்பான். இருக்கிற வரைக்கும் இருந்துட்டு போகட்டுமே. உனக்கும் நல்லது. நீ சாப்பிட போற ஒரு வாய் சாதத்தை அவனுக்கும் போடப் போறே. அவ்வளவு தானே. பையன் ரொம்ப நேர்மையானவன். ரொம்ப அப்பாவி. வேலைக்கு அஞ்சவே மாட்டான் என்ன சொல்றே."என்றார்.
சானம்மா பாட்டி சாமர்த்தியசாலி
தன் உடம்பு அடிக்கடி ரிப்பேர் ஆவதால் இந்த பையன் பாட்டுக்கு வீட்டோட இருந்துட்டு போகட்டுமே. சாப்பாடு நிறைய போடணுமே என்று அவசியம் இல்லை கோவில் பிரசாதம் இருக்கவே இருக்கு, தவிர ஊரில் யாராவது தர்ம சிந்தனையோடு,அப்பப்போ சாப்பாடு போட்டு விடுவார்கள்... என்று எண்ணினாள்.
அதற்குப் பின் ஆதி பாட்டி வீட்டில் ஒரு அங்கம் ஆயிட்டான். பாட்டிக்கு எல்லா வேலையிலும் உதவி செய்வான். காலையில் எழுந்து தாமிரபரணியிலிருந்து வீட்டுக்கு வேண்டிய தண்ணீரைக் குடம் குடமாக கொண்டுவந்து கொட்டுவது, வீட்டை பெருக்கி மொழுகுவது போன்ற வேலைகளை செய்வான்.பாட்டி வருஷத்துக்கு ஒரு முறை ஒரு நாலு முழம் வேட்டியும் அதிசயமாக எப்பவாவது ஒரு சட்டையும் கொடுப்பாள்..அதுவும் ஆதியை பார்த்து பரிதாபப்பட்ட யாராவது அவளிடம் கொடுத்த பழசாக இருக்கும். அவனுக்கும் பெரிசாக எதுவும் தேவைப்பட்டதே கிடையாது.
ஆதிக்கு சமத்து போறாது என்பது ஊர் பிரசித்தம்.ஆனா அவன் இப்படி இருப்பது சானம்மா பாட்டிக்கு சவுக ரியமாகத் தான் இருந்தது. என்ன வேலை சொன்னாலும் செய்வான்.
யார் மீதாவது எரிச்சல் வந்து சானம்மா இவனைத் திட்டினால் பேசாமல் பொறுப்பாக வாங்கிக் கொள்வான் குப்பைக் கூடை போல்.
.ஆதி எந்த ஸ்கூலிலும் படிக்கலை. படிக்கணும்னு சானம்மா நினைக்கல.
கூட்டல் கழித்தல் போட மட்டும் ஆதிக்கு கற்றுக் கொடுக்க வகை செஞ்சாள் . ஆதியின் அந்த அறிவு அவளுக்கும் தேவையா இருந்தது.
பாட்டி விசேஷங்களுக்கு ஊர்ல மத்த வீடுகளுக்கு பட்சணம் பண்ணிக் கொடுப்பாள்.
அப்பளாம், வடாம் இடுவாள்.
ஆதி வீடு வீடாக தூக்கில் எடுத்துசென்று கொடுத்து பணத்தை எண்ணி வாங்கி வந்து பாட்டியிடம் கொடுத்து விடுவான்.
இப்படி கொஞ்ச நாள் காலம் போச்சு.
ஆதிக்கு இப்போ 15 வயசாச்சு.
அவனுடன் சாதாரணமா வந்து யாரும் பேச மாட்டார்கள். அப்படி பேசினால் ஊருக்கு புதுசாக வந்தவர்களாகவோ இவன் தலையில் கை வைத்து ஏதாவது ஆதாயம் பார்க்கலாமா என்ற எண்ணம் உள்ளவர்களாகவோ தான் இருப்பார்கள்.
அப்படி வந்த சில பையன்களுடன் ஆதி பழக நேர்ந்தது.. ஒரு நாள் சானம்மா பாட்டிக்கு தெரியாமல் சேரன்மகாதேவிக்கு ஆதியை கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள்.
பின் ஆதியையே டென்ட் கொட்டாயில் கூட வந்த நாலு பேருக்கும்சேர்த்து ஆளுக்கு ஒரு அணா தரை டிக்கெட் வாங்கவும் வைத்து விட்டார்கள்.
அப்படி எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படம் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு ,வீட்டுக்கு வந்து பாட்டியிடம் உளறி விட்டான் ஆதி.
சானம்மா திட்டோ திட்டு என்று திட்டினாள்.
"உன்னை போனால் போறதுன்னு வீட்ல வச்சு வளர்க்கிறேன். சாப்பாடு போடுறேன். துணிமணி வாங்கித் தரேன். நீ என்னடான்னா என் காச எடுத்து கொண்டு போய் ஊராருக்கு எல்லாம் செலவழிச்சு சினிமா பாக்குறேங்குற. நீ வீட்டை விட்டு வெளியே போடா. " என்று சொல்லி விட்டாள்.
சானம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அப்போதான் சானம்மா சொன்னாளாம்.
"இவ்வளவு நாளா உனக்காக மட்டும் நான் எவ்வளவு ரூபாய் செலவு பண்ணி இருக்கேன் தெரியுமா.? 30 ரூபாய்க்கு மேல இருக்கும். எல்லாத்தையும் சேர்த்து என்கிட்ட திருப்பி கொடு. அப்புறம் உன்னை மன்னிக்கிறேன். அதுவரைக்கும் இந்த மாதிரி ஊர் சுத்துற வேலை, தண்ட செலவு எல்லாம் வச்சுக்காத... " என்று!!
"இனிமே சினிமாவே போக மாட்டேன்." என்று சானம்மாவிடம் சத்தியம் செய்தான்ஆதி.
அடுத்த நாளிலிருந்து ஆதி உண்டியல் குலுக்க ஆரம்பித்து விட்டான்..
ஆனால் பணம் தான் உடனே சேர மாட்டேன் என்றது.
இப்படியே கதை போய்க் கொண்டிருக்கும் போது தான் ஆதிக்கு திடீரென்று ஒரு நாள் அந்த அபூர்வ சக்தி வந்தது." என்று கூறி கதை சொல்வதை
நிறுத்தினாள் பங்கஜம் பாட்டி.
(தொடரும் )

Leave a comment
Upload