தொடர்கள்
கதை
Inn(t)erview  - பா.அய்யாசாமி 

2026917084241501.jpeg


இன்னும் கிளம்பலையா நீங்க..ராகு காலம் வரப் போகிறது சீக்கிரம் ஆகட்டும், நாம பெண்பார்க்கப் போறது எதிராத்து அம்பி மகேஷ்க்குத்தான், உமக்கில்ல அலங்காரம் என்ன வேண்டியிருக்கு என விரட்டினாள் அய்யாசாமியை ருக்கு. குர்தா, பைஜாமா சகிதம் வந்த அய்யாசாமியோடு, எதிர்வீட்டு நண்பர் சுந்தரம்,கீதா,மகேஷ்,அவனின் தங்கை ஜனனீ ஆகியோர் கிளம்பினார்கள் உமையாள்புரம் எனும் கிராமத்திற்கு.

சுவாமிமலை வந்ததும் ஆலயக் கோபுரத்தைப் பார்த்த சுந்தரம், முருகா! எல்லாம் நல்லபடியாக அமையணும் என வேண்டினார்.
கவலைப்படாதே சுந்தரம்,நீ எத்தனை பெண் ஜாதகம் பார்த்திருப்பே, நேரம் வந்துட்டாப் போதும் டக்குணு அமைஞ்சுடும் என்ற அய்யாசாமி, எங்காத்திலே ஒரே ஜாதகம்தான் எனக்கு பார்த்தார்கள்,
'முடிந்து விட்டது' என அழுத்திச் சொன்னதும்

'இல்லைணா நடிகை மீனா வந்து வாக்கப் பட்டிருப்பாளாக்கும்' உமக்கு, என கேலிச் செய்ததில் அனைவரும் ரசித்து சிரித்தனர்.

ருக்கு! என்ன நீ கேலி பேசறதைப் பார்த்து மகேசு மனைவினாலே இப்படித்தான் இருப்பாளோன்னு கல்யாணம் செய்துக்கவே பயந்துடப் போகிறான் என்றார் அய்யாசாமி.

உங்களைப்போல வருமா?! நீங்க இரண்டு பேரும் என்னதான் உங்களுக்குள்ளேகேலிசெஞ்சுண்டாலும் உங்களுக்குள்ளே இருக்கிற பரஸ்பரம் அக்கரையும்,அன்பும் பண்பும் எங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாள் கீதா, ஆமாம் என ஆமோதித்தனர் அனைவரும்.

உமையாள்புரம் என எழுதிய மஞ்சள்நிற போர்டு வந்ததும், ரைட் எடுத்து தெருவிற்குள் நுழைந்து பெண் வீட்டின் முன்னாள் நின்றது வாகனம்.

வாங்க..வாங்க..என வரவேற்று அமர்ந்ததும்,நான் அய்யாசாமி,
இது ருக்கு, இவாளுக்கு எதிராத்திலே இருக்கோம், இது பிள்ளையோடு அம்மா,அப்பா,தங்கை என அறிமுகப்படுத்தி சங்கோஜத்தை உடைத்து இடத்தை சகஜமாக்கினார் அய்யாசாமி.

அவாளெல்லாம் வந்தாச்சு, சீக்கிரமாக வா என தன் பெண்ணை போனில் சொன்ன அம்மா, அவளுக்கு work from home இதோ வந்திடுவாள் என்றாள்.

பையனுக்கு வேலை சென்னையிலே என சொன்னார்கள் என்ன வேலை, சம்பளம் எவ்வளவு என கேட்டாள் பெண்ணின் அம்மா சொன்னதும் சந்தோஷம் என்றாள்.

பெண்ணின் தந்தையைக்கவனித்த அய்யாசாமி, அவர் கவனம் கையில் இருந்த பட்சணத்தில் இருந்ததைக்கண்டு. 'மதுரையோ' என்றார் அவரிடம்

இல்லை 'மானாமதுரை' என்றார் வாய் நிறைய மிக்சருடன்..
ஓகே..ஓகே என்ற அய்யாசாமி,

அது என்னன்னா மானாமதுரை என ருக்கு கேட்டதற்கு,

களிமண் பேமஸ்டீ அங்கே என்றார் அய்யாசாமி.

அவ்வழியே சென்ற வேலைக்காரப் பெண்மணியை கூப்பிட்டு
இதெல்லாம் உள்ளே எடுத்துப்போம்மா என அய்யாசாமி சொன்னதும்,
அவர்களை முறைத்தபடி உள்ளே எடுத்துச்சென்றாள்.

மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா ? கேட்டது பெண்ணின் அம்மா.
ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி, சென்னையில் வீட்டைவாங்கி
வச்சிருக்கான், கல்யாணம் ஆனதும் இரண்டு பேருமாக சேர்ந்து அடைக்கணும் என்றார் அய்யாசாமி.

இல்லை, அவர் தமாஷ் பண்றார், இனிமேதான் வாங்கணும் என்றார் சுந்தரம்.

எல்லா அம்மாக்களும் கேட்கிறதுதானே, ஏன் கோபிக்கிறேள் என்றாள் பெண்ணின் அம்மா.

அதான் கோபமே, பெண்கள் எதையும் கேட்பதில்லை, இந்த காலத்து பெண்ணின் அம்மாக்கள் எதிர்பார்க்கிறது ரொம்ப ஓவராக இருக்கிறது என்றவர், அதெப்படி மாமி 27 வயசுப்பையன்கிட்டே சொந்தமாக வீடு இருக்கும், இருந்தாலும் அவனோட அப்பாவோ, அம்மாவின் பெயரிலேதானே இருக்கும் அதுவும் அவர்களுக்காக அவா சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்கும் என்றாள் ருக்கு.

கல்யாணத்திற்குப் பிறகு தனியாக ஜாகை வைப்பேளா, அவா கூடவே நீங்களும் இருப்பேளா ?! கேட்டாள் பெண்ணின் அம்மா.

இதைதான் முதலில் கேட்பேள்னு நான் எதிர்பார்த்தேன் என்றார் அய்யாசாமி.

அது அவர்களது விருப்பம் என்றார் சுந்தரமும் கீதாவும்.

தனி ஜாகையாக இருந்தால் நாங்கள் சென்று அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்போம், அதற்காகத்தான் கேட்டேன் என்றாள் பெண்ணின் அம்மா.

அதாவது கல்யாணத்திற்குப் பிறகு பிள்ளையாண்டான், அப்பா அம்மாவை மறந்திடனும் அதானே, என்றார் அய்யாசாமி.

பெண்ணைப் பெத்தவங்க நாங்க, இதெல்லாம் தெரிஞ்சாத்தானே நிம்மதியாக இருக்க முடியும் என்றவள் கடைசியாக ஒரு கேள்விதான்,

கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்கோ, பிள்ளைக்கு ஏதாவது கெட்டப்பழக்கம் உண்டா என கேட்டவள், ஏன் கேட்கிறேன்னா,
காலம் கெட்டுக் கிடக்கோள்யோ, கறிவேப்பிலை கொத்து மாதிரி எனக்கு ஒரே பொண்ணு என்றாள்.

ஆமாம் மாமி, காலம் கெட்டுத்தான் கிடக்கு. ஆனால் நாங்க புள்ளையை ஒழங்காக வளர்த்திருக்கோம் என்றாள் கீதா.

கறிவேப்பிலையாகவே இருந்தாலும் காலம் வந்தவுடனே போட்டுடணும், வச்சிருந்தால் வாடிவிடும் என்ற அய்யாசாமி, கல்யாணத்திற்குப் பிறகு புள்ளையாண்டானுக்கு எந்த கெட்டப் பழக்கமும் வராமல் இருப்பது உங்கள் பொண்ணு கையிலத்தானிருக்கு என்றார்.

மாமா எடக்கு மடக்காகவே பேசறேள்! என்றதும்,

நீங்க கேட்கிற கேள்விகளெல்லாம் அப்படி இருக்கு என்றார் அய்யாசாமி.

பெண்ணுக்கு இதெல்லாம் தெரியாது பாருங்கோ, நாமதானே நல்லது கெட்டது பார்த்து செய்யணும் என்றாள் பெண்ணின் அம்மா.

இந்த காலப் பெண்களுக்கா ஒன்றும் தெரியாது?! எல்லாம் தெரியும், அம்மாக்கள் தனியாக விடறதில்லை, பாசம் அக்கரைங்கிற பெயரிலே உங்களுக்கு கடித்த நல்ல கெட்ட அனுபவங்களை வைத்து அவர்களை வழி நடத்துறேள், காலம் மாறிவிட்டது நம்ம காலம் போலில்லை உண்மைதான், தற்போதைய காலத்திற்கேற்ப அவர்களுக்கு நீங்கதான் எல்லாவற்றையும் சொல்லித் தரணும் என்றார் அய்யாசாமி.

இதோ அவளை காபியோடு வரச் சொல்கிறேன் என உள்ளே சென்று பெண்ணை அனுப்பி வைத்தாள்.

காபியோடு வந்தப் பொண்ணை அதிர்ந்து போய் பார்த்தனர் நால்வரும்.

வேலைக்காரி என நினைத்தது பெண்ணைத்தானா !.அதே உடையில் தலைவாரி முகம் கழுவி வந்திருந்தாள்.

நீங்கள் தனியாக ஏதாவது பேசனும்னா பேசிவிட்டு வாங்கோ,
உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே என பெண்ணின் அப்பாவிடம் ருக்கு கேட்க, இல்லை என தலையை ஆட்டினார் வாயில் லட்டுவின் உதிரிப் பூந்தியைப் போட்டபடி.

பெண்ணை இழுத்துண்டேப் போனாலும் கண்டுக்கமாட்டார் போல என அய்யாசாமி கிண்டலடித்ததும் காதில் விழுந்து அவரும் சிரித்தார்.

ருக்கு, சத் ஆத்மாடி இது. இது போல சிவனேனு இருந்துட்டா குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை பாரு என்றார் அய்யாசாமி. அதற்கும் சிரித்தார் அவர்.

பெண்ணிடம் பேசிவிட்டுவந்த மகேசை தனியாக அழைத்துப்போனார் அய்யாசாமி,

என்னப்பா நீ என்ன சொல்கிறாய், பெண் ஓகே வா ? கேட்டதற்கு,

மாமா, corporate நேர்முகத்தேர்விற்கு கூட நான் இப்படி பயந்த்தில்லை, இந்த மாமி அடுத்து என்ன கேட்கப் போகிறாள்னு யோசித்துயோசித்து தலைவலி வந்திடுத்து.

பெண் தைரியமாக ஒகேங்கிறது, அம்மா எது சொன்னாலும் சரிங்கிறது, குடும்ப நிர்வாகம்,வரவு செலவுகள் பற்றி எதுவும் அவளுக்கு தெரியற மாதிரி எனக்குத் தெரியலை, அவளின் அம்மாவின் டாமினேசன்தான் தெரியறது என்றான் மகேசு.

உன் சார்பாக நான் இரண்டு கேள்விகளை நான் கேட்கிறேன் பெண்ணிடம், அதற்கு பிறகு நீ உன் முடிவினைச்சொல் என்று மகேசிடம் கூறினார் அய்யாசாமி.

என்ன சொல்கிறார் பையன் என்ற பெண்ணின் அம்மாவின் கேள்விக்கு,
நீங்கள் கேட்டு சில தகவல்களை பெற்றுக் கொண்டீர்கள், எங்களுக்கும் சில கேள்விகள் இருக்கு என்றதும் கேளுங்க என்றார் பெண்ணின் அம்மா.

பொதுவாக பெண்ணிடம் வயதையும்,சம்பளமும் கேட்க கூடாது என்பார்கள் என்ற அய்யாசாமியின் பீடிகையில்,
ஆமாம் என்றாள் பெண்ணின் அம்மா.
ஆனால் நாங்கள் கேட்போம், என்றவர் தற்போது உங்கள் பெண் என்ன சம்பளம் வாங்குகிறாள் ?

வருடத்திற்கு ஆறு இலட்சம் என்றாள் பெண்.

கல்யாணத்திற்குப் பிறகு பையன்கிட்டே சம்பளத்தைக் கொடுப்பாளா என கேட்டதும்,

அதெப்படி ? எங்களுக்கும் அனுப்பவேண்டுமே என்றாள் பெண்ணின் அம்மா..

ஆமாம்.. அதான் சரி உங்களையும் கவனிக்கத்தான் வேண்டும் என்றாள் ருக்கு.

உங்கள் பெண்ணுக்கு Financial literacy இருக்கான்னு தெரிஞ்சுக்கனும்,
சேவிங்லே எவ்வளவு இருக்கு என கேட்டவர் பட்ஜெட், செலவுகள் சேமிப்பு என கேள்வியால் துளைத்தார் அய்யாசாமி.
ஏம்மா, சொல்லும்மா என்றாள் பெண்ணின் அம்மா.
அதெல்லாம் எனக்கு தெரியாது, சேவிங்கெல்லாம் என்னிடம் ஏதுமில்லை என்றது பெண்.
மாதாமாதம் சம்பளப்பணம் கணக்கிலே வந்து விழும், அது தேய்க்கவும், காண்பிக்கவும் கழியும் அப்படிதானே ?! என்றவர்

உழைத்தக் காசினை கையில் சம்பளமாக வாங்கி எதிர்கலத்திற்குச் சேமித்து வைத்து, மீதத்தை தனது கைகளினால் எடுத்து செலவுச் செய்யும் போதுதான் பணத்தின் அருமைத் தெரியும், இவர்களுக்கு அந்த வாயப்பில்லை என்றார் .
குடும்பம் செய்யப்போறது பையன்தானே, இதெல்லாம் தெரிஞ்சுண்டு இவ என்ன பண்ணப் போறா ?! ஒருத்தருக்கு ஒருத்தர் மனத்தளவில் பிடித்தால் போதுமே என்ற பெண்ணின் அம்மாவிடம்,

மகிழ்ச்சி, அப்புறம் நாங்க கிளம்புகிறோம் சென்று சேர்ந்து யோசித்து பதில் சொல்கிறோம் என்றதும்,
அதுதான் சரி என்றார் பெண்ணின் அப்பா.
ஓய், பார்த்து முடித்து வைப்பேள்னு பார்த்தேன், நீர் என்னடான்னா இப்படி பண்ணிட்டீரே என்றார் சுந்தரம்.
நீயும் உன் பொண்ணு ஜனனீக்கு இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பியா என்றாள் ருக்கு கீதாவிடம்,

மாட்டவே மாட்டேன் என்றாள் கீதா.
நானும் "மாட்டவே மாட்டேன்" என்றான் மகேஷ் டைமிங்காக..
சுந்தரமும், கீதாவும்தான் இடம் அமையலையே என கவலைப்பட்டனர்,
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுனு தேற்றிக்கோ, வேற நல்லதொரு மகள் வருவாள் என்றாள் ருக்கு.