தொடர்கள்
அழகு
திருநங்கைகளுக்கு தனி விடுதி - மாலா ஶ்ரீ

2026917084445133.jpg

நாடு முழுவதிலும் உள்ள திருநங்கைகள், தங்களின் அடிப்படை அங்கீகாரம் மற்றும் அடையாளங்கள் பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கைகளை ‘மூன்றாம் பாலினம்’ என்ற பாலின அடையாளத்தை அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அவர்களை இன்னும் பல்வேறு சமூகங்கள் அங்கீகரிக்கவில்லை என்பது வேதனையானது.

முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர் ரூத் ஜான் பால்:

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் கொய்யாலா ரூத் ஜான் பால். சிறந்த மதிப்பெண்களுடன் மருத்துவ மாணவியாக 3-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் திருநங்கையாக மாறியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினரால் அவமதிக்கப்பட்டு, வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்டு உள்ளார். பின்னர், இதையே மனதில் சவாலாக உறுதியேற்று, பல்வேறு சமூக போராட்டங்களுக்கு இடையே தனது எம்.பி.பி.எஸ் எனும் இளங்கலை மருத்துவ படிப்பையும், தற்போது எம்.டி எனும் முதுநிலை மருத்துவ படிப்பையும் ரூத் ஜான் பால் வெற்றிகரமாக முடித்து சாதித்து காட்டியுள்ளார்.

முன்னதாக, எம்.பி.பி.எஸ் படிப்பை நிறைவு செய்து டாக்டரான ரூத் ஜான் பால், கடந்த 2023-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் முதுநிலை அவசர மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இதன் தேர்வு முடிவுகள் வெளியானதில், சிறந்த மதிப்பெண்களுடன் திருநங்கை ரூத் ஜான் பால்

தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, தன்னை ‘இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர்’ என்று அங்கீகரிக்க ரூத் ஜான் பால் உரிமை கோரியுள்ளார்.

202691708450738.jpg

இதுகுறித்து டாக்டர் ரூத் ஜான் பால் கூறுகையில், “நாட்டின் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பெரும்பாலான திருநங்கைகள் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலிலும் தள்ளப்பட்டு உள்ளனர். எனது சொந்த காலில் நிற்க உறுதியேற்று நான் சாதித்து உள்ளேன். நான் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக உணர்ந்து போராடினேன். திருநங்கைகள் அனைவரும் கடினமாக உழைத்தால், அவர்களுக்கான வாய்ப்புகள் தானாகவே தேடி வரும்!” என்று கூறி உறுதியளித்தார்.

2026917084528222.jpg

முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ:

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் பகுதியில் பிறந்தவர் சத்யஸ்ரீ. இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்புகளை பரமக்குடியில் முடித்தார். பரமக்குடியில் பெற்றோருடன் இருந்து, கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்தார் சத்யஸ்ரீ‌ பின்னர், தான் ஒரு திருநங்கையாக மாறுவதை உணர்ந்து, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அருகே நடராஜபுரத்தில் வசித்து வந்த திருநங்கை சர்மிளா என்பவரின் ஆதரவில், தனது வாழ்க்கையைத் துவக்கினார் சத்யஸ்ரீ.

மேலும், தனக்கு ஆதரவளித்து அடைக்கலம் தந்த திருநங்கை சர்மிளாவுக்கு மதிப்பளிக்கும் வகையில், தனது பெயருக்கு பின்னால் சர்மிளாவையும் சேர்த்துக் கொண்டார் சத்யஸ்ரீ‌.

இதையடுத்து, கடந்த

2007-ம் ஆண்டு சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சத்யஸ்ரீ ஆணாகவே இளங்கலை சட்டப்படிப்பை முடித்தார். தற்போது 36 வயதான சத்யஸ்ரீ, தன்னை ஒரு வழக்கறிஞராக முன்னிறுத்திக் கொள்ள சுமார் 11 ஆண்டுகள் காத்திருந்தார்.

பின்னர், திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 30-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் மன்றத்தில் தன்னை முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்யஸ்ரீ சர்மிளா பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற முதல் திருநங்கை வழக்கறிஞர் எஸ்.ராகவி:

டெல்லியைச் சேர்ந்த எஸ்.ராகவி, கடந்த 2023-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் கேம்பஸ் சட்ட மையத்தில் இளங்கலை சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட பல்வேறு பிரசித்தி பெற்ற சட்ட வல்லுநர்கள், முன்னாள் மாணவர்கள் இருந்தாலும், அதன் படிக்கட்டுகளை ராகவியால் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. திருநங்கை என்ற மூன்றாம் பாலின அடையாளம் காரணமாக, அவர் பல்வேறு வேலைவாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிடம் ஜூனியராக ராகவியால் சட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள, பல்வேறு நீதிமன்றங்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்துள்ளார். பின்னர், மூத்த வழக்கறிஞர்களிடம் சட்டப் பயிற்சி முடித்து வழக்கறிஞராக, LGBTQ+ சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற உந்துதலில் இருந்த ராகவி, ஒருபோதும் தனது முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை.

2026917084550390.jpg

பின்னர், இந்தியாவின் பல்வேறு மாநில முக்கிய நகரங்களில் திருநங்கைகள் சமூகம் எதிர்கொள்ளும் பரவலான பாகுபாட்டை எதிர்த்து போராடி, ‘இந்தியாவின் உச்சநீதிமன்ற முதல் திருநங்கை வழக்கறிஞர்’ என்கிற பெருமையையும் ராகவி அடைந்துள்ளார். தற்போது அவர் உச்சநீதிமன்ற பணிகளுக்கு இடையே, திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்து அறிந்து கொள்ள விழிப்புணர்வு பட்டறைகள் மற்றும் முகாம்களையும் நடத்தி வருகிறார்.

மேலும், திருநங்கைகள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து பெறவேண்டிய பல்வேறு சட்ட வசதிகள் பற்றி அறிந்து கொள்ள, பல்வேறு அரசு துறை நிறுவனங்களுடன் இணைந்து களப் பணியாற்றி வருவதாகவும் ராகவி தெரிவித்தார். இதுதவிர, கடந்த 2019-ம் ஆண்டு திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கும், பாகுபாடுகளைத் தடுப்பதற்கும் இயற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை ராகவி துணிச்சலுடன் எடுத்துரைத்தார்.

மேலும், திருநங்கை சமூகத்தினருக்கு எதிரான பாகுபாட்டைப் போக்க, அரசு அவர்களை இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். அவர்களுக்கென தனி கழிப்பறைகள் மற்றும் தனி வசதிகள் செய்து தரவேண்டும். திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வி நிறுவனங்களில் சேருவது மற்றும் அவர்களின் ஆவணங்களை மாற்றுவது தொடர்பாக நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இதுதவிர, அவர்கள் ஒருவரைத் தத்தெடுக்க விரும்பினால், அவர்கள் அதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். திருநங்கைகளை மேம்படுத்தும் செயல்களில் தொடர்ந்து பணியாற்றியதற்காக ராகவிக்கு, சமீபத்தில் ‘லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கர் மகிளா சம்மான் விருது’ வழங்கப்பட்டு உள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.

அசாமில் திருநங்கைகளுக்கு தனி விடுதி கட்டிய ஸ்வாதி:

அசாம் மாநிலத்தை சேர்ந்த திருநங்கை ஸ்வாதி பிதான் பரூவா, லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பிறகு அப்பொறுப்பில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் (Airports Authority of India, AAI) வழக்கறிஞராக ஸ்வாதி செயல்பட்டு வருகிறார். முன்னதாக, திருநங்கைகள் வழக்கமாக சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் சந்தித்து, வீட்டைவிட்டு வெளியேறினார்.

பின்னர், தான் சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற நிலையில் ஸ்வாதி இருந்தபோது, இதை அவரது பெற்றோர் எப்படியோ அறிந்து, ஸ்வாதி சிகிச்சை பெறவிருந்த மருத்துவமனை மீதே வழக்கு தொடுத்தனர். இதனால் தனது ஒட்டுமொத்த சேமிப்பையும் அந்த வழக்குக்காக ஸ்வாதி செலவழித்து, முடிவில் நல்ல தீர்ப்பையும் பெற்றுள்ளார். இதையடுத்து, அவரை பெற்றோர் ஏற்றுக்கொண்டு, உறுதுணையாக நின்றனர்.

இதையடுத்து கவுகாத்தி சட்டக்கல்லூரியில் திருநங்கை ஸ்வாதி படித்து வழக்கறிஞராகி, அரசு வழங்கிய அங்கீகாரமான லோக் அதாலத் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். எனினும், லோக் அதாலத் நீதிபதிக்கு அரசு அளிக்கும் மாதாந்திர மானியம் மிகக் குறைவு என்பதால், அப்பணியிலிருந்து விலகி, தனியே வழக்கறிஞராக ஸ்வாதி பணியாற்றத் துவங்கினார்.

இதுகுறித்து ஸ்வாதி கூறுகையில், “நமது சமூகத்தில் திருநங்கைகள் பற்றிய புரிதல் மிக குறைவு. இதற்கு படித்தவர், படிக்காதவர் என யாருமே விதிவிலக்கு அல்ல. பொதுவாழ்வில் திருநங்கைகளுக்கான முழு அங்கீகாரமும் சுதந்திரமும் தேவை. அதற்கு முதலில் எங்களை மத்திய-மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். திருநங்கைகள் மசோதா 2019ன் அடிப்படை விஷயங்களில் தவறாக இருக்கிறது. இம்மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்!

மேலும், கடந்தகால கொரோனா ஊரடங்கு ஒட்டுமொத்த மக்களுக்கும் சவாலாக இருந்தது. சாதாரண நாட்களிலேயே அடிப்படை தேவைகளுக்காக போராடும் திருநங்கைகளின் நிலை இன்னும் மோசமானது. அவர்களுக்கு உணவு, இருப்பிடம் என எல்லாமே கேள்விக்குறியாகக மாறிவிட்டது. அவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பையாவது தரவேண்டும் என்ற நோக்கில், அசாம் மாநில அரசோடு இணைந்து ‘த்ரிதியோ நிவாஸ்’ எனும் திருநங்கைகளுக்கான தனி விடுதியை நாங்கள் துவங்கியிருக்கிறோம்.

இதுதான், இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்காக துவங்கப்பட்டிருக்கும் முதல் முழுநேர தனி விடுதியாகும். இங்கு உணவு, தங்குமிடத்துடன் திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சியும் வழங்கப்படுகிறது!” என்று உணர்ச்சி பெருக்குடன் கூறிய ஸ்வாதி பிதான் பரூவா, தற்போது திருநங்கைகளுக்கான பல்வேறு செயல்திட்டங்களோடு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலாஶ்ரீ