
இவரை சேலையூர் ரமணா ஹோட்டல் சந்தித்தேன். அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் எடுத்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் மிகுந்த புன்முறுவலோடு அந்த பரபரப்பான நேரத்தில் இயங்கிக் கொண்டிருந்தார். நான் எனது வேலை சம்பந்தமான வாடிக்கையாளர் இருவரை சந்திக்க அங்கு அமர்ந்திருந்தேன். மதிய உணவு நேரமானதால் அதிக கூட்ட நெரிசல் இருந்தது. அதை திறமையாக சமாளித்துக் கொண்டிருந்தார். அதில் நான் குறிப்பாக கவனித்தது நிறைய தெரிந்த வாடிக்கையாளர்கள் அங்கு அமர்ந்திருந்தார்கள். ஏனென்றால் அவர் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தார். அதை சொல்லியே செய்தார் "சார் இன்னைக்கு சுண்டைக்காய் போட்டு வத்த குழம்பு உங்களுக்காக தான் கொண்டு வந்தேன்" என்று ஒருவரிடம் சொன்னார். "மாமி போன வாரம் கேட்டீங்களே வாழைக்காய் தேங்காய் போட்ட பொறியல் அதான் உங்களுக்கு இந்த கப்ல கொண்டு வந்தேன்", இது போல் அவருடைய விசாரிப்புகள் தொடர்ந்தன. நான் என்னுடைய பேச்சின் இடையிடையே அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கி ஒரு ஒரு மணி நேரம் கழித்து பார்த்தபோது, கூட்டம் குறைந்து இருந்தது. அவர் அங்கும் இங்குமாக அலைந்து உணவு பொருள்களை கொடுத்துக் கொண்டிருந்தார். மணி மூன்றறையை கடந்து விட்டிருந்தது. காபி சாப்பிடலாம் என்று என்னுடைய வாடிக்கையாளர்கள் சொன்னதால் அவரை அழைத்தேன். "மேடம் இங்க வாங்க" என்றவுடன் அதே சிரிப்போடு வந்தார். "சொல்லுங்க சார் நீங்க எதோ பேசிக்கிட்டு இருந்தீங்க அதனால தான் உங்களிடம் வந்து நான் ஆர்டர் கேக்கல" அப்படின்னு சொன்னார் எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்ன ஒரு இங்கிதம் தெரிந்த பெண்மணியாக இருக்கிறார் என்று. நாங்கள் நான்கு பேர் இருந்தோம் காபி என்று சொன்னவுடன் ஒவ்வொருத்தருக்கும் எப்படி வேண்டும் என்று தனி தனியாக கேட்டுக் கொண்டார் "சக்கர போடணுமா ? வேண்டாமா ?ஸ்ட்ராங்கா லைட்டா என்றெல்லாம் கேட்டுக் கொண்டு ஐந்து நிமிடத்தில் சரியாக கொண்டு வந்து அவர் அவர்கள் கேட்ட விதமாக அந்த காபியை கொண்டு வந்து வைத்தார். நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன் "உங்கள பாத்துட்டு இருக்கேன் பரபரப்பா சுத்திகிட்டு இருந்தீங்க, சாப்டீங்களா நீங்க", "இல்ல சார் இனிமே தான் சாப்பிடணும்" இன்னும் சாப்பிடலையா ? பசியா இருக்குமே, ஏன் சாப்பிடாம இருக்கீங்க? ,
" இல்ல சார் என்னுடைய இந்த டியூட்டி நாலு மணிக்கு முடியும் அதுக்கப்புறம் தான் நாங்க எல்லாரும் போய் சாப்பிடுவோம் அதுக்கப்புறம் நான் நாலரை மணிக்கு கிளம்புவேன் வீட்டுக்கு "என்று சொன்னார்.
"ரொம்ப சிரிச்சுக்கிட்டே இருக்கீங்களே எப்பவுமே இப்படித்தான் இருப்பீங்களா? " என்று கேட்டேன், அதற்கு புன்முறுவலையே பதிலாக தந்தவர் "இன்னிக்கு கொஞ்சம் அதிகமா சிரிச்சிட்டேன்னு நினைக்கிறேன் சார், இன்னிக்கு என்னோட பிறந்த நாள்" என்றார் எனக்கு ஒரு நிமிடம் ஆச்சரியமானது, பிறந்த நாளை இப்படியும் கொண்டாட முடியுமா என்று நினைத்துக்கொண்டேன். அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றி என் பையில் இருந்து 100 ரூபாய் தாளை எடுத்து அவரிடம் நீட்டி" தப்பா நினைச்சுக்காதீங்க உங்க ஹோட்டல் ஸ்வீட்ட வாங்கி உங்ககிட்ட கொடுக்கிறது அவ்வளவு நல்லா இருக்காது, இது என்னுடைய பிறந்தநாள் பரிசு" என்று சொல்லிக் கொடுத்தேன் இரு கைகளையும் நீட்டி பணிவாக வாங்கிக் கொண்டார் ரொம்ப நன்றி சார் என்று அதற்கும் கீழே குனிய போனவரை தடுத்து நிறுத்தினேன். "அதெல்லாம் வேண்டாமா ஒரு சின்ன பரிசு அவ்வளவுதான்" என்றேன் கண்டிப்பாக .
" சார் இன்னிக்கு வீட்டுக்கு போகும்போது ஜாங்கிரியும் முறுக்கு வாங்கிட்டு போவேன்" என்றார்.
" உங்களுக்கு குழந்தைகள் இருக்காங்களா ? அவங்களுக்கு வாங்கிட்டு போறீங்களா" என்று கேட்டேன்.
" இல்ல சார் என்னோட மச்சினன், மச்சினி இருக்காங்க என்னுடைய கணவரோட சித்தி பிள்ளைகள்" என்றார் எனக்கு மிகவும் ஆச்சரியம் . "உங்கள் கணவருக்கு அவ்வளவு சிறிய தம்பி தங்கையா" என்று கேட்டேன்.
" இல்ல சார் அவங்களுக்கு 40, 42 வயசு ஆகுது அவங்க எல்லாம் எங்க கணவர் கூட ஒண்ணா வளர்ந்தவங்க பிறந்ததிலிருந்து" என்று சொல்லிவிட்டு அந்த இருவருக்கும் பிறவியிலேயே பார்வை கிடையாது பேச முடியாது கேட்கும் திறனும் இல்லை என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்து போய் சாப்பிடும் காப்பியை அப்படியே கீழே வைத்து விட்டேன். மற்றும் மூன்று பேரும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான் இருந்தார்கள். அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத ஒரு மௌனம் அங்கே நிலவியது.
"எப்படிம்மா அவங்க கிட்ட உங்களால பழக முடியுது?" என்று தயங்கி தயங்கி கேட்டேன்.
"அவங்களுக்கு எது புரியுமோ அந்த மாதிரி அவங்களுக்கு உணர்த்த கத்துக்கிட்டேன் சார், என் ஹஸ்பண்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டார். நாங்க மூணு பேரும் ஒண்ணா தான் வளர்ந்தோம் இவங்க எங்க கூட இருக்குறதுல உனக்கு ஆட்சேபனை இல்லையே அப்படின்னு கேட்டார். அதனால என்ன இவங்க எங்க கூட இருக்கட்டுமே என்று சொல்லிட்டேன், இவங்கள கவனிக்கணும் அப்படிங்கிறதுனால நாங்க எங்களுக்குன்னு குழந்தை எதுவும் பெத்துக்கல" என்று சொன்னார்.
எனக்கு மிகவும் ஆச்சரியம் இந்த உலகத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? இதுபோல அன்பு காட்டும் ஜீவன்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று ஒரு நிமிடம் நினைக்கத் தோன்றியது. தன்னுடைய அன்பால் தியாகத்தால் என் மனதில் மிக உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டார் "சுமதி" ஆமா அதுதான் அவர் பெயர். மறக்க முடியாமல் தங்கிவிட்ட அவரை இனி அந்த பக்கம் எப்போது போனாலும் நிச்சயம் சந்திக்க வேண்டும் என்ற முடிவோடு அங்கிருந்து கிளம்பினேன் புன்முறுவலோடு "ரொம்ப நன்றி சார் மீண்டும் பார்க்கலாம்" என்று சொல்லி என்னை வழிய அனுப்பி வைத்தார். கனத்த இதயத்தோடு நான் ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன். அதற்கு மேல் அன்று என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சுமதி மட்டும் தான் என் மனது முழுதும் நிறைந்திருந்தார்,
இதோ அவரை உங்களுக்கும் அறிமுகப்படுத்தி விட்டேன்.

Leave a comment
Upload