தொடர்கள்
வலையங்கம்
தேவை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை

2026917080729638.jpeg

விலைவாசி உயர்வு நடுத்தர வர்க்கத்தையும் தாண்டி மேட்டுக்குடி மக்களையும் தற்சமயம் பாதிப்படைய செய்திருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு ஆளுங்கட்சி கூட்டணி கட்சியான காங்கிரஸ் பாரதிய ஜனதா மீது பழி சுமத்துகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் மளிகை கடைக்கு முதல்வரை போக சொல்கிறார். உணவுத்துறை அமைச்சர் நான் ரேஷன் கடையில் பொருட்கள் ஏற்கனவே வாங்கி இருக்கிறேன் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் நகர்ப்புற பகுதிகளில் தான் விலைவாசி உயர்வு அதிகம் என்கிறார். அப்படி என்றால் கிராமப்புற பகுதிகளில் விலைவாசி குறைவு என்று அர்த்தமாகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. விலைவாசி உயர்வு என்பது கிராமம் நகரம் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை . அமைச்சர் நகர்ப்புறத்தில் மற்றும் விலைவாசி உயர்வு என்கிறார். இது வேடிக்கையாகவும் வேதனையாக இருக்கிறது.

அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு என்றால் ஆட்சியாளர்கள் செய்யும் ஒரே வேலை நியாய விலை கடைகளில் குறைந்த விலைக்கு வழங்குவோம் என்பது. இது உண்மையில் ஒரு சம்பிரதாய சடங்கு பிரச்சனைக்கு தீர்வு அல்ல. வெங்காயம் விலை உயர்ந்ததும் நியாய விலைக் கடைகளில் 30 ரூபாய்க்கு வெங்காயம் வழங்கப்படும் என்றார் அமைச்சர் பல நியாய விலைக் கடைகளில் முறையாக வெங்காயம் விற்பனை இல்லை. விற்பனை செய்யும் நியாய விலைக் கடைகளிலும் அழுகிய வெங்காயம் விற்பதாக புகார். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்றாலும் அரசின் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும். விலைவாசி உயர்வு என்பது மக்களின் ஆக்கபூர்வமான பிரச்சனை. இதற்கு யார் பொறுப்பு மத்திய அரசா ? மாநில அரசா என்ற தேவையற்ற சர்ச்சைகளை ஒதுக்கிவிட்டு மக்களின் தேவை அறிந்து இந்த அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படட்டும்.