
இயக்குநர் மகேந்திரன் தந்து உதிரிப்பூக்கள் படத்தின் இமாலய வெற்றி பற்றி தொடர்ந்து பேசுகிறார்...
"இதற்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேண்டியது 'சிற்றன்னை' படைத்த அமரர் புதுமைப்பித்தன் அவர்களுக்கே!
உதிரிப்பூக்கள் வெள்ளிவிழா நடந்து முடிந்த பிறகு ஒரு நாள், அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆருக்கு, நடிகர் சங்க வளாகத்தில் உள்ள தியேட்டரில் உதிரிப்பூக்கள் படத்தின் பிரத்யேகக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார், இதயம் பேசுகிறது பத்திரிகை ஆசிரியர் மணியன். தன் துணைவியாருடன் வந்த எம்.ஜி.ஆர், என்னைக் கண்டதும் அவசரமாக என் கைகளைப் பற்றிக் கொண்டார். அதற்கு முந்தைய நாள் பார்த்த முள்ளும் மலரும் குறித்து பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கப் பேசத் தொடங்கினார். சினிமா, அரசியல் இரண்டிலுமே எக்காலத்திலும் மறக்க முடியாத சரித்திரம் படைத்த அவர், எனது முதல் திரைப்பட இயக்கத்தைப் பற்றி மனம் திறந்து பாராட்டியதை என்னால் எப்படி மறக்க முடியும்?
முள்ளும் மலரும் பற்றி அவர் பாராட்டியது இப்படித்தான்... "மகேந்திரன்... எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. இந்தப் படத்தின் மூலம் தமிழ்
சினிமாவில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியிருக்கிறீர்கள். என்னைப் போன்றவர்கள் ஆசைப்பட்டாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறீர்கள். பத்திரிகைகள் பாராட்டியது இருக்கட்டும். இப்போது நான் சொல்கிறேன். சினிம ஒரு விஷுவல் மீடியா என்பதை இந்தப் படத்தின் மூலமாகப் பொட்டில் அறைந்த மாதிரிச் சொல்லி, மகத்தான வெற்றியும் கண்டிருக்கிறீர்கள். அன்றைக்கு அழகப்பா கல்லூரியில் என் முன்னால், ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று பேசினீர்கள். அதை இன்றைக்குச் செயல் மூலம் நீங்களே நீருபித்துக் காட்டிவிட்டீர்கள்.
'சினிமாவின் டூயட் பாடுவது யதார்த்தத்துக்கு மாறான அபத்தம்' என அன்றைக்கு கூறினீர்கள். இன்று அந்த அபத்தம் இல்லாமல் படம் எடுத்து
ஜெயித்திருக்கிறீர்கள்! ரஜினி முதல் அத்தனை நடிகர்களையும் மிக யதார்த்தமாக நடிக்க வைத்து, அதுவும் குறைவான வசனத்தாலும்.. பல
காட்சிகளின் வசனமே இல்லாமலும் கூட அத்தனை பேரையும் அற்புதமாக நடிக்க வைத்து, என்னைக் கலங்கடித்து விட்டீர்கள். இதற்கு முன்னால் அண்ணன் – தங்கை பாசத்தை வைத்து தமிழில் வெளிவந்த படங்கள் எல்லாம் நாடகத்தனமாக இருந்தன. நான் நடித்த படங்கள் உட்பட. இந்த முள்ளும் மலரும் படம் பழைய பாணிப் படங்களிலிருந்து முழுக்க விலகியும், நிஜத்திலும் உயர்ந்தும் நிற்கிறது.
அதுவும் படத்தின் கடைசிக் காட்சி தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே புதிது. தனக்குப் பிடிக்காத ஒரு இன்ஜீனியருக்கு தன்
தங்கையைக் கைப்பிடித்துக் கொடுத்த பிறகும் கூட, ‘இப்பக் கூட உங்களை எனக்கு பிடிக்கலை சார். ஆனால், என் தங்கச்சிக்கு உங்களைப் பிடிச்சிருக்கு’ என்று ரஜினி சரத்பாபுவிடம் சொன்னபோது எனக்கு எழுந்து நின்று கைதட்டத் தோன்றியது. ரஜினி மிகமிக யதார்த்தமாகவும் அற்புதமாகவும் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவரது திரைப்பட வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும்.
படத்தில் நடித்த அனைவருமே யதார்த்த நடிப்பின் அழகை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது பார்க்கவிருக்கும் ‘உதிரிப்பூக்கள் படத்தைப் பற்றி நான் படித்தது, கேட்டது ஆகியவை எல்லாம் என்னைப் பெருமைப்பட வைத்தன. என் மகேந்திரன் சாதாரண ஆள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே போனவரிடம், நான் இரண்டு முறை குறுக்கிட முயன்ற போதும், என் வாயை அடைந்த்துவிட்டார். 'தன்னடக்கம் போதும், இது வரை எவருக்கும் தெரியாதது, உங்களுக்கு தெரிந்திருந்து, அதன் மூலம் தமிழ் சினிமாவை உயர்த்தியிருக்கீறீர்கள் என்றுதான் சொல்கிறேன்' என்று மறுத்துப் பேசினார்.
தியேட்டருக்குள் நுழையமுன் மீண்டும் திரும்பி நின்று என்னிடம் "மகேந்திரன் இன்னொரு விஷயம்... படத்தில் ரஜினி நடிக்கிறப்ப எல்லாம் எனக்கு என்னவோ உங்களைப் பார்க்கிற நினைப்பு அப்பப்ப வந்துச்சு. அநாதை நாடக ரிகர்சலின்போது, நீங்கள் பாடத்தை (வசனத்தை) நடித்துக் காட்டும் போது உங்களிடம் நான் பார்த்த அதே முகபாவங்கள், அப்படியே ரஜினியிடம் இருந்தன" என்றார். அதைக் கேட்டதும் எனக்கு விவரிக்க முடியாத வியப்பு. பல வருடங்களுக்கு முன்பு அவருக்காக நான் எழுதின அநாதைகள் நாடக ஒத்திகையின்போது என்னை அவர் எவ்வளவு உன்னிப்பாக கவனித்திருக்கிறார் என்பது அப்போது எனக்கு விளங்கியது. இப்பேர்ப்பட்டவர் தனது அத்தனை படங்களையும் வித்தியாசமான வெற்றிப்
படங்களாக்கி, மக்கள் மனதில் எங்கள் வீட்டு பிள்ளையாகத் திகழ்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?! தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னரான அவர், முள்ளும் மலரும் பற்றி பாராட்டிய உன்னத அனுபவம். ‘திரைக்கதையின் முன்பகுதிக் காட்சிகளுக்கும் பிற்பகுதிக் காட்சிகளுக்கும் தொடர்பிருக்க வேண்டியது அவசியம். அது போன்றுதான் நமது வாழ்க்கையும்’ என்று அவர் முன்பு ஒரு தடவை சொன்னது, அப்போது எனது நினைவுக்கு வந்தது.
உதிரிப்பூக்கள் தொடங்குவதற்கு முன்பாக நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி படங்களிலிருந்து இரண்டு பாடல்களை மட்டும் அவருக்கு திரையிட்டுக்
காட்டினேன். பிறகு உதிரிப்பூக்கள் தொடங்குவதற்கு முன் என்னை அருகில் வந்து உட்காரச் சொன்னார். நானோ அவர்கள் இருவரும் தனித்த மனநிலையில் படம் பார்க்கட்டும் என்று கருதி, முன்வரிசையில் ஒர் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன். படம் தொடங்கியது. திரை பரப்பிய வெளிச்சத்தில் அவ்வப்போது பின்னால் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்தபடி இருந்தனர்.
படம் முடிந்தது. போகும் போது எம்.ஜி.ஆர் என்ன சொன்னார்?
(தொடரும்)

Leave a comment
Upload