பொது
இறங்காத சந்திராயன்2..இஸ்ரோவின் இறுக்க முகங்கள்! – ஆர்.ராஜேஷ் கன்னா

20190810083845823.png

சந்திராயன் -2 விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் நிலவிற்கு ஜீலை 22 அன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிறகு, 3,84,000 கி.மீ தூரம் பயணம் செய்து நிலவின் சுற்று வட்ட பாதையில் நுழைந்து, 5 முறை புவி வட்ட பாதையில் உயர்த்தப்பட்டு, நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் 35 கி.மீ தூரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2 தேதி... சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பில் பயணிக்கத் தொடங்கியது. விக்ரம் லேண்டரின் வேகத்தினை உள் உந்து விசை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு நிலவின் சுற்று வட்ட பாதைக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்கப்பட்டு, நிலவை நெருங்கி வரசெய்தனர். லேண்டரில் இருந்த அதி நுட்ப காமிராவில் இருந்து நிலவின் தென் துருவத்தில் லேண்டர் இறங்க வேண்டிய மான்சின்ஸ்–ஸி, சிம்பிலியஸ்-எஸ் பள்ளங்களை படம்பிடித்து பெங்களூரிலுள்ள இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியது.

லேண்டர் துல்லியமாக எடுத்த புகைப்படம் ஏற்கனவே நிலவின் தென் துருவத்தில் இறங்க வேண்டிய இடம், சரியாக மேட்ச் ஆனாது. நிலவின் தென் துருவத்தில் 70 டிகிரி கோணத்தில் லேண்டர் நிலவின் தரையில் மிகவும் மென்மையான முறையில் செப்டம்பர் 7 அதிகாலை 2 மணியளவில் நிலவின் தரைக்கு 400 மீ. தூரத்தில் வரும் போது, லேண்டரின் அனைத்து சிக்னல்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் துண்டிக்கப்பட்டது.

20190810084321797.jpg

அடுத்த நொடி...பெங்களூர் இஸ்ரோ மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் முன்பு இருந்த கம்பியூட்டர் திரையில் இருந்த கிராஃப்கள் எல்லாம் லேண்டரின் செயலிழப்பை காட்டியதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் துடிதுடித்துப் போய்விட்டனர். எமர்ஜென்சி காலத்தில் எடுக்கப்படும் அத்துனை நடவடிக்கைகளையும் எடுத்து, விக்ரம் லேண்டரை தேடும் முயற்சியில் இறங்கினர். லேண்டரிலிருந்து எந்த வித சமிக்கைகளும் வராததால், இஸ்ரோவின் தலைவர் சிவன், விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதற்கு முன்பு செயலிழந்து மறைந்துவிட்டது என்ற தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகளின் சிறப்பு மாடத்தில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு இஸ்ரோ சிவன் சோகத்துடன் சென்று சொன்னார்.

இஸ்ரோவில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிரங்கும் நேரடி நிகழ்வினை பிரதமர் மோடியுடன் பார்த்துக்கொண்டிருந்த 70 சிறுவர்கள் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்ற தகவலை கேட்டதும், அதுவரை உற்சாகத்துடன் இருந்த சிறுவர்கள் சோகமும், கண்ணீருமாக வருத்தப்பட ஆரம்பித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளை அழைத்த பிரதமர், எதற்கும் கவலைப்பட வேண்டாம்... இந்தியாவும் நானும் உங்களுடன் இருக்கிறோம். மீண்டும் காலை 8 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பேசுகிறேன் என்று கூறி அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்.

20190810084446712.jpg

நிலவின் தென் துருவத்தில் குளிர் புதை மணல் பள்ளங்கள் அதிகளவில் இருக்கலாம். நிலவில் செயலிழந்த விக்ரம் லேண்டர் நமது வீட்டில் டைனிங் டேபிள் அளவில் இருக்கும். சந்திராயன் 2 ஆர்பிட்டர் 2379 கிலோ அதாவது 3 நானோ காரின் எடை, விக்ரம் லாண்டர் 1471 கிலோ அதாவது 10 சுமோ மல்யுத்த வீரர்களின் எடை, பிரக்யான் ரோவர் 27 கிலோ அதாவது 960 டீ பேக் எடை கொண்டதாக இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் விகரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இறங்கும் நிகழ்வினை காண உலக முன்னனி தொலைகாட்சிகள் நேரடி ஒளிப்பரப்பினை செய்து வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழவதும் நிலவின் தென் துருவத்தில் லேண்ட் ரோவர் இறங்கும் நேரடி காட்சியை இரவு முழவதும் கண்விழித்து பார்த்த இந்திய மக்களின் ஆர்வத்தினையும் லேண்ட் ரோவர் தகவல் தொடர்பு துண்டிப்பு என்ற செய்தி வந்ததும், இந்திய மக்களின் இதய துடிப்பும் நாட்டு மக்கள் ஒன்றினைந்து இஸ்ரோவிற்கு ஆதராவக நின்றது தன்னை வியக்க வைத்த மாபெரும் நிகழ்வு என்று பிரதமர் மோடி பெருமையாக பேசினார்.

20190810085116228.jpg

விக்ரம் லேண்டர் நிலவின் தரைபரப்பிற்கு மேல் 2.1 கி,மீ தூரம் வந்த போது 70 டிகிரி சாய்வாக இறங்காமல் செங்குத்தாக இறங்கி நிலவின் தரையில் வேகமாக மோதி இருக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போன விக்ரம் லேண்டரை தேடும் பணியினை நிலவில் சுற்றும் ஆர்பிட்டர் தனது கேமிராவின் மூலம் பகலிலும் இரவிலும் துல்லியமாக தெர்மல் இமேஜிங் மூலம் கண்டுபிடித்து படமெடுத்து அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் தரையில் மோதிய வேகத்தில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. விக்ரம் லேண்டர் ஏற்கனவே 3.84 லட்சம் கிமீ தூரம் பயணித்து வந்த அதிர்வில் கூட லேண்டர் கருவியின் ஏதாவது ஒரு போல்ட் லூசாகி இருந்தாலும் அதிலிருந்து மிக முக்கிய வாயுக்கள் வெளியேறி இருந்தாலும் கடைசி நிமிடத்தில் லேண்டர் செயலிழந்து இருக்கலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். லேண்டரில் இருக்கும் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தனது ஆய்வினை தொடருவதற்கு எதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் நாட்களில் ஒரு வேளை சமிக்கைகள் கிடைத்து லேண்டர் வேலை செய்தால் அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வு செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் விட்டு போகவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் செயலிழந்த லேண்டரை செயல்பட வைக்க, இரவு பகலாக கண்விழித்து மீண்டும் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

அறுபது வருடங்களில் 109 தடவை நிலவிற்கு பூமியில் இருந்து செயற்கைகோள்கள் அனுப்பபட்டதில் 61 தடவை மட்டும் வெற்றியும் 48 தோல்விகளும் அடங்கும். இது நிலவிற்கு பூமியில் இருந்து சென்ற செயற்கோள் 60 சதவீதம் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பிப்ரவரி 2018-ம் ஆண்டு, இஸ்ரேல் நாடு நிலவின் தரைபகுதியை ஆய்வு செய்ய அனுப்பி வைத்த பெர்சீட் லேண்டர் ஏப்ரல் மாதத்தில் நிலவின் தரை பகுதியில் மோதி உடைந்து தோல்வியில் முடிந்தது. அமெரிக்கா ஆகஸ்ட் 17, 1958 ஆண்டு நிலவிற்கு பயணியர் 0 என்ற பூமியில் இருந்து ஆய்வு செய்ய தனது முதல் செயற்கைகோளை அனுப்பியது, தோல்வியில் முடிந்தது. நிலவிற்கு ராக்கெட்டை முதல் முறையாக ரஷ்யா நாடு லூனா 1 என்ற பெயரில் ஜனவரி 4, 1959 ஆண்டு செலுத்தி, வெற்றி கண்டது. முதல் ஐந்து தடவை நிலவிற்கு ராக்கெட் செல்லும்போது தோல்வியில் முடிந்து ஆறாவது முறையே ரஷ்யா வெற்றி கண்டது.

நிலவிற்கு அமெரிக்கா ரஷியா நாடுகள் 1958 முதல் 1959 வரையில் ஒரு வருடத்தில் 14 செயற்கைகோளை விடாமல் ஏவி வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ரஷியாவின் லூனா 1, 2, 3 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலவினை சுற்றி வந்தது.

நிலவில் அடியெடுத்து வைக்க அமெரிக்காவும், ரஷியாவும் கடும் போட்டியில் ராக்கெட்டுகளை அனுப்பி வந்தது. ரேஞ்சர் மிஷன் என்ற செய்ற்கைகோளை அமெரிக்கா நிலவிற்கு 1964 வருடம் அனுப்பி நிலவினை படம் பிடித்தது. அதன் பின் ரஷ்யா லூனா 9 என்ற செயற்கைகோளை ஜனவரி 1966 ஆண்டு அனுப்பி நிலவில் மென்மையான தரையிரக்கம் மூலம், தனது லேண்டரை தரை இறக்கியது. இதன் மூலம் தான் நிலவில் முதல் லேண்டர் தரையிரக்கம் செய்த நாடு என்ற பெருமையை ரஷ்யா தட்டி சென்றது. அமெரிக்காவின் அப்போலோ செயற்கை கோள் மனிதனை நிலவிற்கு அனுப்பி வெற்றிகரமாக தனது நாட்டு கொடியினை நிலவில் முதல் முறையாக பறக்க விட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் இரண்டு நபர்கள் நிலவிற்கு சென்று கால்பதித்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

நிலவிற்கு செயற்கைகோள்களை 1959 முதல் 1979 வரை 21 வருடங்கள் தொடர்ச்சியாக அமெரிக்காவும் ரஷ்ய நாடுகள் மட்டுமே 90 செயற்கை கோள்களை நிலவிற்கு அனுப்பி வந்தது, 1980 முதல் 1989 ஆண்டுகளில் நிலவிற்கு இரு நாடுகளும் எந்த செய்ற்கை கோள்களையும் அனுப்பவில்லை. ஐப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா, இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அதன்பின் தான் நிலவிற்கு செயற்கை கோள்களை அனுப்பியது. 2000 முதல் 2009 ஆண்டு வரை ஐரோப்பா, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆறு செயற்கைகோள்களை நிலவிற்கு அனுப்பியுள்ளது. 2009 முதல் 2019 ஆண்டுகளில் இந்தியா, அமெரிக்கா, ஐப்பான், இஸ்ரேல் நாடுகளிலிருந்து 10 செயற்கைகோள்கள் நிலவிற்கு சென்றுள்ளது. இதுவரை நிலவிற்கு சென்ற செயற்கைகோள்களில் 40 சதவீத செயற்கை கோள்கள் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது.

20190810085414363.jpg

இந்தியாவின் சந்திராயன் 1 நிலவில் நீர் இருப்பதை அறிந்து வெளியிட்டது. தற்போது சந்திரயாயன் ஆர்பிட்டர் ஆரோக்கியாமான நிலையில் நிலவின் மேற்பரப்பினை சுற்றி வருகிறது. சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் நிர்ணையிக்கப்பட்ட இடத்தில் இருந்து, நிலவின் தென் துருவ பகுதியில் இருந்து 500 மீட்டர் தள்ளி சாய்ந்து விழந்துள்ளதை சந்திராயன் -2 ஆர்பிட்டர் நவீன போட்டோ கருவிகளுடன் படமெடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பி உள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய வேகத்தில் உடையவில்லை, அது சாய்ந்த நிலையில் உள்ளது ஆறுதலான விஷயம். விக்ரம் லேண்டரில் உள்ள சூரிய தகடுகளுக்கு இஸ்ரோவும் நாசாவும் கூட்டாக இணைந்து இயங்க வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வேளை லேண்டரில் உள்ள பேட்டரிகள் ரீசார்ஜ் ஆகி உயிர்பெற்றால் பிரக்யான் ரோவர் பத்திரமாக நிலவின் தரையின் மேற்பரப்பில் இறங்கி அடுத்த சில நாட்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபடும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் சந்திராயன்-2 பொருத்தவரை 95 சதவீத வெற்றி என்றே அனைத்து உலக நாடுகளிலுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். நிலவின் தென் துருவம் என்பது புரியாத புதிர் மர்மம் நீடிக்கும் பகுதி. அதிலும் இந்தியாவின் விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தயாரித்து அனுப்பிய சந்திராயன் மிகக்குறைந்த செலவில் அனுப்பட்ட செயற்கைகோள் என்றும் அடுத்த 20, 50 மற்றும் 100 ஆண்டுகளில் நிலவில் மனிதன் குடியேறும் வாய்ப்பினை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று பெருமையாக வெளிநாட்டு பத்திரிக்கைகள் தெரிவிக்கிறது.

20190810091833228.jpg

விண்வெளி ஜாம்பவன்கள் அமெரிக்கா, ரஷ்யா யாரும் தொடமுடியாத தென் துருவத்தினை சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக சுற்றி வருவது, இந்தியர்களின் உழைப்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அதில் லேண்ட் ரோவர் சிக்னல் இழந்தது, வெறும் 5 சதவீதம் தான் இந்தியாவிற்கு பின்னடைவு என்று நாசா தனது கருத்தினை கூறி, இஸ்ரோவிற்கு பக்க பலமாய் இருந்து விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்!

20190810090721957.jpg

நன்றி : தினமணி

சந்திராயன் 2 நிலவில் இந்தியாவின் மிககுறைந்த செலவில் அதி நவீன தொழில் நுட்பத்தில் செயற்கைகோள் செலுத்தப்பட்ட விதத்தினை பார்த்த நாசா, அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் தனது செயற்கைகோள் திட்டத்திற்கு, இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை இணைத்துகொள்வதாக அறிவித்தது. நாசா ஆராய்ச்சி நிலையம் இந்தியாவின் இஸ்ரோவினை தன்னுடன் இணைத்துக் கொள்வது என்பது சந்திராயன் -2 விண்கலம் நமக்கு கொடுத்த கவுரமாக உலக நாடுகள் பார்க்கிறது.

டெயில் பீஸ்: "நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் வரலாற்று முயற்சிக்காக இந்தியாவிற்கும் இஸ்ரோவிர்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். சந்திராயன் 2 திட்டம் மிகப்பெரிய துணிச்சலான திட்டம், உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே பெருமைகுரியது. விண்வெளி ஆராய்ச்சியில் எந்த நாடு முன்னனியில் உள்ளது என்பது பிரச்சனை அல்ல. பூமியில் உள்ள அனைத்து அரசியல் எல்லைகளையும் மறந்து ஒதுக்கிவிட்டு, விண்வெளியில் எது நம்மை ஒன்றிணைக்கிறது என்று பாருங்கள்" என்று இஸ்ரோவிற்கு பாரட்டினை பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை நமிரா சலீம் புகழாரம் சூட்டி உள்ளார்.

2019081009331995.jpg