
தமிழகத்தில் - தாய்மார்கள் கலக்கம்...
இந்தியாவில் நிலவும் மந்தநிலை பொருளாதாரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பல்வேறு தொழில் துறைகளின் முடக்கத்தினால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தங்களது பெண் குழந்தைகளுக்கு எப்படி திருமணம் செய்யப் போகிறோமா என பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் கலக்கத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா-சீனாவுக்கு இடையே வர்த்தகப் போர் காரணமாக உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை, இன்னும் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
கண்கவர் நகைகள்…
உலகிலேயே தங்கம் நுகர்வில் இந்தியா 2-வது இடத்தை தக்கவைத்துள்ளது. ஏனெனில், இங்கு தொழில் துறை தேவையைவிட, பெண்களின் ஆபரண தேவைக்காக அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவின் உள்நாட்டு விற்பனை சந்தையில் தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தங்கநகைகளின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்பிறகு அதன் விலைகளில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் இன்றுவரை தங்கத்தின் விலை சவரனுக்கு ₹30 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
உயரும் விலை சதவிகிதம்...
கடந்த ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி சவரன் ₹29,456, 31-ம் தேதி ₹29,528 என்றிருந்த தங்கத்தின் விலை, பின்னர் கிடுகிடுவென உயர்ந்து, செப்டம்பர் 3-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹30,120 என உச்சத்தை தொட்டது. இதனால் நகைக் கடைகளின் விற்பனை வெகுவாக சரிந்தது.
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, 5-ம் தேதி காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ₹328 குறைந்து, ஒரு சவரன் ₹29,600-க்கு (வரிகள் நீங்கலாக) விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து ஒருசில நகைக்கடை உரிமையாளர்களிடம் கேட்டதற்கு, ‘சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கத்தின் விலை 1,550 டாலரை தாண்டிவிட்டது.
ரூபாய் மதிப்பு சரிவே, இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு அது முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹3,540 அதிகப்படியாகி உள்ளது.
தற்போது அனைத்து தொழில் துறைகளும் நலிவடைந்த நிலையில் உள்ளன. அவை மீண்டும் உறுதியாகும் வரை, தங்கத்தின் முதலீடு அதிகரித்து, அதன் விலை அதிகளவு உயரும் வாய்ப்புகள் ஏற்படும். இதனால் சிறு மற்றும் பெரிய கடைகளில் தங்க நகை விற்பனை பெரிதும் பாதித்துள்ளது’ என வியாபாரிகள் கலக்கத்துடன் கூறுகின்றனர்.
‘இந்த மாதம் முதல் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ தினங்கள் வருகின்றன. இந்த அதிரடி விலை உயர்வு, திருமணம் நிச்சயித்த பெண்களுக்கு தங்க நகை வாங்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மீது பெரும் கடன்சுமையை ஏற்றியுள்ளது.
இப்படியே உயர்ந்தால், இன்னும் சில வருடங்களில் சவரனுக்கு ₹50 ஆயிரம் வரை சென்றாலும் ஆச்சரியமில்லை. பெண் குழந்தை பெற்றவர்களின் மனம் இப்போதே கலங்கத் துவங்கிவிட்டது’ என அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த வசந்தா, நங்கநல்லூரை சேர்ந்த சீதாலட்சுமி ஆகிய குடும்பத் தலைவிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே தங்கம் சற்று விலை குறைந்தாலும், எங்கே தங்கத்தின் விலை மீண்டும் எகிறிவிடுமோ எனும் ஒரு அச்சம் மக்களின் மனதில் இருக்கத்தான் செய்கிறது!

Leave a comment
Upload