
செப்டம்பர் மாதம் வந்தாலே ஆப்பிள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். புது ஐபோன் அறிவிக்கும் அல்லது வெளியிடும் மாதம்.
கடவுள் வந்திருந்தார் என்ற கதையில் கடவுளை 10 மணிக்கு எதிர்ப்பார்த்து அனைவரும் காத்திருப்பார்கள். வந்தாரா இல்லையா என்று எழுதியிருக்க மாட்டார் சுஜாதா. அவர்கள் 10.02க்கு கலைந்து சென்றார்கள் என்று முடித்திருப்பார்.
ஆக ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் செப்டம்பர் 10ந் தேதி பசிஃபிக் நேரம் பத்து மணிக்கு கூடினார்கள். பதினொன்னே முக்காலுக்கு கலைந்து சென்றார்கள் என்று எழுதத் தோன்றுகிறது.
பீடிகை போடாமல் அன்று என்னென்ன நடந்தது என்று சுருக்கமாக பார்க்கலாம்.
ஆப்பிள் ஆர்கேட்.

எனக்கு மொபைல் போனில் கேம் விளையாடுபவர்களைப் பார்த்தால் கன்னம் கன்னமாக இழைக்க வேண்டும் என்று தோன்றும். ஏனெனில் அது ஒரு வியாதி போல விடாது. நான் கேமே விளையாடியதில்லை என்று சொல்ல மாட்டேன். ஆதிகாலத்தில் சூப்பர் மாரியோ என்று ஒரு கேம். அதை விளையாடத் துவங்கினால் நிறுத்த முடியாது. அதிலிருந்து விடுபட்ட பிறகு ஐபோனில் கேம் விளையாடியதே இல்லை. ஆனால் இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. விளையாட்டு விளையாட்டு விளையாட்டு தான். அவர்களுக்காகவே ஆப்பிள் ஆர்கேட்.
அதாவது ஒவ்வொரு கேமாக வாங்கி காசு விரயமில்லை. மாதா மாதம் ஐந்து டாலர் கொடுத்து விட்டால் போதும். மொத்த குடும்பமும் கேம் விளையாடி குட்டிச் சுவராகிப் போகலாம். ஒரு பயனாளியாக இது நமக்கு காசு மிச்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஆப்பிளைப் பொறுத்தவரை இது ஒரு மிகப் பெரிய வியாபாரக் கணக்கு. வேண்டுமோ இல்லையோ அவர்களுக்கு ஆப்பிள் மியூசிக் போல இது ஒரு நிரந்தர வருமானம். மில்லியன்களில் கொட்டும் சூப்பர் ஐடியா.
இந்தியாவிலும் ஐபோன் அல்லது ஐபாடு வைத்திருந்தால் கூட இந்த விளையாட்டு குரூப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
ஆக இது ஆப்பிளுக்கும் சரி நமக்கும் (?) சரி இருவருமே ஜெயிக்கும் ஐடியா.
19ந்தேதி செப்டம்பரிலிருந்து இந்த சேவை துவங்கும்.
ஆப்பிள் டிவி +

அடுத்த கில்லி இது.
நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஹூலூ, போன்ற ஸ்ட்ரீமிங் சேவையில் நுழைகிறது ஆப்பிள். இது கொஞ்சம் தாமதமான வருகை என்றாலும் இதுவும் ஆப்பிளுக்கு கோடி கோடியாக டாலரை கொண்டு வந்து கொட்டப் போகிறது.
மாதம் ஐந்து டாலர் தான் ஒரு குடும்பத்திற்கு. இது தவிர ஆப்பிளே தயாரிக்கப் போகும் சீரியல்களும் வரப் போகிறது.
விரைவில் மற்ற தொலைக்காட்சி சேனல்களும் இந்த சேவையில் இணைய வாய்ப்பிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸுக்கும் அமேசானுக்கும் கடும் போட்டியாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் விலையில் பாதி தான் ஆப்பிளின் விலை என்பது கூடுதல் போட்டி.
நவம்பர் 1ந் தேதி முதல் இந்த சேவை துவங்க இருக்கிறது.
ஐபேடு.
விலை : ரூ. 24,000 முதல் 34,000 வரை (வரிகள் தனி)

பெரிய சைஸ் ஐபோன். இதுல என்ன பெரிய விஷயம் என்று ஏளனமாக பேசப்பட்ட ஐபேடு மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்தது.
ஐபேடு என்ற ஒரு சமாச்சாரத்தை துவங்கி வைத்ததே ஆப்பிள் தான். இதில் கிண்டிலை விட புத்தகம் படிப்பது அவ்வளவாக சரி வராது என்றாலும் ஐபேடு இருந்தால் ஒரு குட்டி கம்ப்யூட்டரை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு போவது போல அவ்வளவு சுலபம்.
ஐபோன் செய்யாத என்ன விஷயங்களை ஐபேடு செய்யும் என்று கேட்டால், சட்டென சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும் இதில் சினிமா பார்த்தால் கொஞ்சம் பரவலாக தெரியும். கண்ணுக்கு சிரமம் இல்லை. அது போலவே நீண்ட கட்டுரைகள் இது போல தட்டச்சு செய்வதற்கு தோதாக இருக்கும். அவ்வளவு ஏன் சில சமயங்களில் வீடியோ எடுத்து அதை எடிட் செய்து யூடியூபில் அப்லோடு வரை செய்ய முடியும். அசுரன்.
இதில் புதிய ஐபேடு வந்துள்ளது. 10.2 இன்சு சைசில் இன்னும் வேகமாக, இன்னமும் வண்ணமாக.. (வழக்கமா சொல்றது தான்)
ஏற்கனவே போன வருடமோ அல்லது அதற்கு முந்தைய வருடமோ ஐபேடு வைத்திருப்பவர்கள் என்னோடு அடுத்த பாராவுக்கு வரவும். உங்களுக்கு இங்க வேலையில்லை.
ஆப்பிள் வாட்ச். 5
விலை : ரூ.30,000 முதல் (வரிகள் தனி)

YOU HAVE NEVER SEEN A WATCH LIKE THIS.
நான் சொல்லவில்லை. இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் தங்கள் புதிய பொருட்களை சொல்கிறார்கள்.
இந்த முறை ஆப்பிள் வாட்சில் என்ன புதுமை ?? ஆல்வேஸ் ஆன் என்ற புதிய விஷயம். சாதாரணமாக ஆப்பிள் வாட்ச் இருட்டடித்து இருக்கும். கையை தூக்கினால் வாட்ச் முகம் தெரியும். ஆனால் இந்த புதிய வாட்சில் எப்போதுமே முகம் தெரியும். ஏன் என்னோட பழைய கடிகாரத்திலயே தெரியுமே என்று கேட்டால், தெரியும் தான். ஆனால் இந்த வாட்ச் உங்கள் பல விதமான நடவடிக்கைகளை பதிவு செய்யுமே. வயதானவர்களுக்கு இது ஒரு நல்ல பரிசாக அமையும்.
ஈ.சி.ஜி. எடுக்கலாம். நமது இதய துடிப்பை கவனிக்கும். எப்படியும் ஆப்பிள் வாட்சில் சர்க்கரை அளவை மட்டும் காட்டுவது போல வந்தால் ஒரு இரண்டு பில்லியன் வாட்சாவது விற்றுப் போகும் என்று தோன்றுகிறது.
அது மட்டுமல்ல புதிய வாட்சில் நம்மைச் சுற்றி சத்தத்தின் அளவு எவ்வளவு என்று காட்டுமாம். கட்டிக் கொண்டு நம்மூர் கட்சிக் கூட்டத்திற்கு போனால் கழுத்து நரம்பு புடைக்க கத்தும் சத்தத்தில் வாட்ச் அலறப் போகிறது.
அது மட்டுமல்ல பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியையும் கவனிக்கவும் ஒரு செயலி இருக்கிறது.
அது தவிர இதில் திசை காட்டும் கருவி உள்ளேயே பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஐபோன் இல்லாமலேயே இதை எடுத்துச் செல்லலாம். தொலைபேசி வேலை செய்யும். (சிம் மாடல் மட்டும்)
பாடல்களும் வாட்சிலேயே பதிவு செய்து கொள்ளலாம். (ஒரு சிக்கல். ஏர் பாடு வாங்க நேரிடும். ஏனினில் இதில் ஹெட் போன் செருகிக் கொள்ளும் வசதி கிடையாது )
ஐபோன் 11

விலை : 55,000 முதல் 65,000 வரை. (வரிகள் தனி)
புதிய காமிரா.
அதிக பாட்டரி நேரம்.
அதி வேக A13 சிப்.
ஊதா மஞ்சள். பச்சை, கறுப்பு வெள்ளை சிகப்பு என இருமல் மாத்திரை போல பல வண்ணங்களில் வந்துள்ளது.
அதாவது ஐபோன் எக்ஸ் ஆர் என்பது தான் இப்போது புதிய வடிவில் பொலிவில் ஐபோன் 11 ஆக உருவெடுத்துள்ளது.
வீடியோ எடுக்க சொகுசான போன். (அதுக்கு வீடியோ காமிராவே வாங்கிடலாமே எதுக்கு போன் என்று கேட்கலாம்)
அல்ட்ரா வைட் காமிரா. கொஞ்சம் அகலமாக வீடியோ எடுக்கலாம்.
என்னைக் கவர்ந்த புதிய வசதி எனில் நைட் மோட். அகாலமாக படம் எடுக்கலாம். குறைந்த வெளிச்சத்தில் இரவில் எடுக்கும் படங்கள் துல்லியமாக வருகின்றன. (தூங்கற நேரத்தில எதுக்கு போட்டோ எடுக்கணும் என்று குறுக்க குறுக்க கேள்வி கேட்கப்படாது.)
போர்ட்ரெயிட்டில் இன்னொரு வெள்ளை பின்னணியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
முன்னர் போட்டோ எடுக்கும் போது வீடியோவிற்கு தாவ வேண்டும். இதில் அப்படியே ஒரு அழுத்து அழுத்தினால் வீடியோ எடுக்கிறது.
மற்றபடி ஆடியோ, வைபை, ஃபாஸ்ட் சார்ஜ் இரண்டு சிம் கார்டுகள் என ஆங்காங்கே சில சிறப்பம்சங்களை அள்ளி வீசியிருக்கிறது ஆப்பிள்.
இன்னொரு விசேஷம் தண்ணீருக்குள் 2 மீட்டர் தூரம் வரை அரைமணி நேரம் வைத்திருக்கலாம். வாட்டர் புரூஃப்.
அப்ப என்ன வாங்கலாமா என்று கேட்கிறீர்களா ? பொறுங்கள் அடுத்த ஐட்டத்தையும் பார்த்து விடுவோம்.
ஐபோன் ப்ரோ. Pro

ப்ரோ. மாடல் : 77,000 முதல் 105,000 வரை.
ப்ரோ மாக்ஸ் மாடல் : 85,000 முதல் 112,000 வரை.
(அம்மாடியோவ்)
ஏறக்குறைய ஸ்கூட்டரோ பைக்கோ வாங்கி விடலாம். அல்லது ஒரு செகண்ட் ஹாண்ட் கார். அவ்வளவு விலை.
மேற்சொன்ன அத்தனை அம்சங்களையும் உள்ளடிக்கிய ப்ரோ மாடல்களில் என்ன கூடுதல் சிறப்பம்சம் எனில் காமிரா.
மூன்று காமிராக்கள் டெலி போட்டோ, அல்ட்ரா வைடு, வைடு காமிராக்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமல்ல.. செல்ஃபி காமிரா இப்போது 12 மெகா பிக்சல்களில் நம் மூஞ்சி இன்னமும் தெளிவாக தெரிந்து அனைவரையும் பயமுறுத்தலாம்.
செல்ஃபி போய் இப்போது ஸ்லோஃபி வந்திருக்கிறது. அதாவது முன்னே இருக்கும் காமிராவில் ஸ்லோ மோஷனை செருகியிருக்கிறது ஆப்பிள்
இதனால் என்ன பயன் ?? முழுக்க தலைவிரி கோலமாக இருக்கும் ஒரு பெண் தலையை அங்கும் இங்கும் ஆட்டுகிறார்.
அது ஏறக்குறைய பாஹுபலி படத்தில் தமன்னா தலையை அசைக்கும் எஃபெக்டில் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.
என் மனைவி 'அது சரி மொட்டைத் தலையை எப்படி ஆட்டினாலும் இந்த எஃபெக்ட் வரப் போவதில்லை இதுக்கு இவ்வளவு செலவு பண்ணுவானேன்?' என்று கடிந்து கொண்டதை யாருக்கும் சொல்லாமல், ஆப்பிளுக்கு எழுதிப் போடலாம் என்று இருக்கிறேன்.
இந்த போனை 4 மீட்டர் தூரம் வரை தண்ணீருக்குள் அரை மணி நேரம் வைத்திருக்கலாமாம். (என்ன பிரார்த்தனையா ?? கஷ்டம் )
என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம் இந்த போனை இயக்கப் போகும் ios 13 மென் பொருள் தான். ( பழைய மாடல்களும் இதை அப்டேட் செய்து கொள்ளலாம்.)
சில பல முக்கிய விஷயங்களை சேர்த்திருக்கிறது ஆப்பிள். குறிப்பாக கார் ப்ளே என்று சொல்லப்படும் காரில் இயக்கும் ஆப்பிள் மென்பொருள் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அது போலவேதான் டார்க் மோட். இது கண்ணைக் கூசும் அதிக தேவையில்லாத வெளிச்சத்தை குறைக்கும்.
மேப்ஸும் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. அது போலவே தான் போட்டோ அப்ளிகேஷனும். ஒரே போனில் இருந்து இரண்டு ஏர்பாடுகள் இணைப்பதும் இந்த புதிய மென்பொருளில் கூடுதல் விசேஷம்.
எனக்குப் பிடித்த முக்கிய விஷயம் சஃபாரி ப்ரெளசரில் மார்க் அப் என்ற ஒரு விஷயம். நமக்கு வேண்டிய வலை தளத்திலிருந்து பக்கங்களை அப்படியே அலாக்காக தூக்கி பிடிஎஃப் ஆக அனுப்பி விடலாம்.
இன்னும் இது போல சின்ன சின்னதாக நிறைய.
ஒரு விஷயம்.
ஆப்பிள் நிகழ்ச்சியை நேரடியாக பார்த்தவர்களுக்கு தெரியும். டிம் குக் என்ன சொன்னாலும் கூட்டம் கைத்தட்டி ஆரவாரம் செய்வது எரிச்சலை தருகிறது. உதாரணத்திற்கு இது 100 சதவிகிதம் மறுசுழற்சி அலுமினியத்தால் செய்தது என்கிறார். கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது. (பிரியாணிக் கூட்டமோ?)
எல்லாவற்றையும் விடுங்கள்.
என்ன கொடுமையெனில் எனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், வருடாவருடம் விரதம் போல நான் ஐபோனை வாங்கித் தொலைத்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டு செப் 10 ந் தேதி இரவிலிருந்தே என்ன வாங்கியாச்சா வாங்கியாச்சா என்று குறுஞ்செய்திகள் அனுப்பியது தான்.
கொஞ்ச நஞ்ச விலையா ?? அடிவாங்கின கைப்புள்ள கணக்கா உட்காந்திருப்பவனிடம் உசுப்பேத்தறதே இவிங்களுக்கு வேலையாப் போச்சு.
கடைசியா என்ன ? நிசமாவே வாங்கலாமா என்று என்னைக் கேட்டால்.....
இதற்கு முந்தைய ஐபோன் வைத்திருப்பவர்கள், சினிமாவோ, பத்திரிகை துறையிலோ இல்லாதவர்கள், போட்டோ எடுப்பதில் ஆர்வம் இல்லாதவர்கள், கையை பாக்கெட்டில் விட்டுக் கொள்ளவும். ஏனெனில் அடுத்த வருடம் 5G தான் உலகை ஆளப் போகிறது. புதிய ஐபோன் அடுத்த வருடம் 5G வசதியுடன் வரும்.
அது வரை காத்திருப்பது நலம்.
.
.
.
வடிவேலு பஞ்ச். : நான் உங்களைச் சொன்னேன். !!!

Leave a comment
Upload