
இராகுலனும், இலக்குமியும்...

பேரொளி மின்னும் புத்த பிரானின் கோவிலை மணிபல்லவத் தீவில் தரிசித்த மணிமேகலைக்கு, அவள் முற்பிறப்பின் நிகழ்வுகளை உணர்த்தும், “பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை”யின் சுவையை அறிவோம். இந்த வாரம், புத்த பிரானின் பீடிகையை வலம் வந்த மணிமேகலை, அந்த தெய்வீக எழிலில் மனதைப் பறி கொடுத்தாள். காந்தள் மலர் போன்ற விரல்களைக் குவித்து தலைக்கு மேல் தூக்கி வணங்குகையில் பரவசத்தில் அவள் உள்ளம் நிறைந்தது. கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் வழிந்து அவள் மார்பினை நனைத்தது. இடமிருந்து வலமாக மும்முறை புத்தரின் கோவிலை வலம் வந்தாள். விண்ணில் மின்னும் மின்னல் கொடி, கருமேகம் சூழ மண்ணில் படர்ந்தது போல அவள் உடல் தரையில் விழுந்திட பணிந்து வணங்கினாள்.

மணிமேகலை, வணங்கிய கணத்தில், அவள் மனக்கண் முன் ஒரு திரை விலகியது. முற்பிறவியில் நிகழ்ந்தவை அவள் முன் காட்சிகளாக விரிந்தன. அவளுடைய முப்பிறப்பு பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டாள். அவை அனைத்தையும் அவள் மனதில் இருத்திக் கொண்டு புத்தரை மீண்டும் வணங்கினாள்...
ஆங்கது கண்ட ஆயிழை அறியாள்
காந்தள் அம் செங்கை தலை மேல் குவிந்தன
தலைமேல் குவிந்த கையள் செங் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
(மணிமேகலை: பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை:1-8)
“மெய்ப்பொருள் என திகழ்பவனே! காந்தார நாட்டில் உள்ள பூருவதேசம் என்னும் குறுநிலப்பகுதியை ஆளும் அத்திபதி என்னும் மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் உன் அருள்வாக்கை வேண்டி நின்ற போது, நீர் “நாவல் மரங்கள் மிகுந்த ஜம்பு தீவு என்னும் நீ ஆளும் பெரிய நிலப்பகுதியும், அதைச் சுற்றியுள்ள நானுறு யோசனை தூரம் வரையுள்ள பரப்பும் இன்றைக்கு ஏழாம் நாளில் பெரிய நிலநடுக்கத்தால் மண்ணில் புதையுண்டு போகும்” என்று கூறினீர்...”
“அதைக் கேட்ட மன்னன் அத்திபதி கலக்கம் அடைந்து, அச்செய்தியை மக்களுக்கு அறிவித்தான். தன் படைகளுடன் ‘இடவயம்’ எனப்படும் அந்த இடத்தை விட்டு விட்டு, வடதிசை நோக்கி சென்று, அவந்தி நாட்டுக்குப் புலம் பெயர்ந்தான். அவ்வாறு செல்லும் வழியில் காயங்கரை என்னும் ஆற்றங்கரை தீரத்தில், அத்திபதி தன் படைகளோடும் பாதுகாப்பாக தங்கி இருக்க, இடவயம் என்னும் அவனின் நகரம் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு பூமிக்குள் புதையுண்டு போனது. அரசனும், மக்களும் உன் பாதத்தைத் தொழ, உன் அருளை அனைவருக்கும் வழங்கினாய். அத்திபதி மன்னனின் பட்டத்தரசி நீலபதியின் வயிற்றில் பிறந்தான் இராகுலன். நீர் அருள்வாக்கு சொன்ன அதே நாளில், அசோதர நாட்டு மன்னன் ரவிவர்மனின் அரசி அமுதபதி ஒரு பெண் மகவை ஈன்றாள். அவளுக்கு இலக்குமி என்ற பெயரைச் சூட்டினாள். இலக்குமி என்னும் அந்த அரசகுமாரியே இப்பிறவியில் மணிமேகலையாக மாதவி மகளாக, காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்துள்ளேன்” என்றாள்.
மேலும் தொடர்ந்தாள் மணிமேகலை...
“காலங்கள் கழிந்தன. பெற்றவர்கள் இராகுலனுக்கும், இலக்குமிக்கும் திருமணம் நடத்தி வைக்க, நாங்கள் காதல் வாழ்வின் இனிமைகளின் எல்லையைத் தொட்டு மகிழ்ந்திருந்தோம். திருமணம் முடிந்த பதினாறாம் நாளில், ‘திட்டிவிடம்’ என்ற பாம்பின் பார்வை பட்ட மாத்திரத்தில் இராகுலன் இறந்து போனதும், இலக்குமியாகிய நானும் தீயில் புகுந்து உயிரை மாய்த்துக் கொண்டேன்” என்று தன் கதையை அவள் தன் நாவால், தானே உரைத்தாள்...
நீலபதி எனும் நேர் இழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
“எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத்
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை
(மணிமேகலை: பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை 44-50)
புத்தபிரான் உணர்த்த..உணர்த்த.. மணிமேகலையின் முற்பிறப்பு நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் மனதினுள் வந்து சென்றன. மேலும், “இப்பிறப்பில் உனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் மணிமேகலா தெய்வம் உனக்கு முன்பு வந்து தோன்றி உன்னைக் காக்கும்” என்றும் அவளுக்கு அருளப்பட்டது.
மணிமேகலையின் மனம் கடல் போல் பொங்கியது. தன் பிறப்பின் மறையுண்மைகளை அறிந்த அவள் இதயம் முற்பிறப்பில் அவள் கணவனாக இருந்த இராகுலன், இப்பிறவியில் ‘யாராக, எங்கு’ இருக்கிறான் என்று அறிய அவள் பெண் மனம் வினா எழுப்பியது. ‘மணிமேகலா தெய்வம், உன் வினாவுக்கு விடை தருவாள்’ என்று அவள் உள்ளத்தில் அசரீரியாக புத்தபிரான் குரல் ஒலிக்க, மணிமேகலா தெய்வம் வரும் வழி நோக்கி மணிமேகலை கண்ணீருடன் காத்திருந்தாள்.
- தொடரும்

Leave a comment
Upload