பொது
“நீலகிரிக்கு கிடைத்த ஊட்டச்சத்து மகுடம்..!" - ஸ்வேதா அப்புதாஸ்

கடந்த மாதம் புதுடெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதிராணி நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவிற்கு போஷன் அபியான் திட்டத்தை மிகச் சிறந்த முறையில் செயல் படுத்தியமைக்கு இந்தியாவின் சிறந்த மாவட்டம் என்ற பெருமையான விருதை வழங்கினார்.

தமிழக அரசிற்கு திறன் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் சமுதாய மாற்றம் ஏற்படுத்த அனைவரையும் ஒன்று திரட்டுவது என்பதில் சிறந்த மாநிலம் என்ற விருது மற்றும் ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையை மத்திய அரசு, போஷான் அபியான் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளது.

2019081121111638.jpg


போஷன் அபியான் திட்டம் என்பது பல துறைகளின் ஒருங்கிணைப்புடன் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம். இத்திட்டம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறிப்பாடுகளான குள்ளத்தன்மை, எடைகுறைவு, ரத்தசோகை, பிறப்பு எடைக்குறைவு ஆகியவற்றை குறைப்பதற்கு ஏற்ற ஒரு ஆக்கபூர்வமான ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி குணப்படுத்தும் ஒரு சிறந்த திட்டம்.

20190811211333689.jpg


தமிழகத்தில், இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு 11 மாவட்டங்களில் அறிமுகப் படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா இந்த திட்டத்தை மிக துரிதமாக செயல்படுத்தினார். முக்கியமாக அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உடனடி ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவிகளை செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஒரு புது ஒளியை ஏற்றி வைத்தார்.

20190811211437626.jpg


இந்திய அளவில் ஒரு சிறந்த மாவட்டமாக நீலகிரி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கியதை நாடே திரும்பி பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை சந்தித்துப் பேசினோம்...


“இந்த தேசிய விருது கிடைத்ததில் உண்மையில் மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் நம் மாவட்டத்தில் உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு, மருத்தவ உதவி செய்து கொடுத்து, அவர்களும் இந்த சமுதாயத்தில் சிறந்த ஆரோக்கிய குழந்தைகளாக வளர மத்திய அரசாங்கத்தின் போஷன் அபியான் திட்டம் ஒரு வரப்பிரசாதம். அதை சரியான முறையில் எடுத்துச் சென்று செயல் படுத்தின எங்க டீம், அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு ஆகியயோருக்கும் இந்த விருது பொருந்தும்.

20190811211621575.jpg


டெல்லியில் இருந்து போஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேரடியாக நம் மாவட்டத்திற்கு வந்து நம் திட்ட பணியை ஆராய்ந்து, திட்டம் நேரடியாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து, இந்த விருதை வழகியுள்ளனர். இந்த விருது, இந்த திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் உரியது. மேலும் பழங்குடி இன குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறிந்து, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கி, தற்போது அவர்கள் ஆரோக்கிய குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது.


இந்த திட்டத்தை, அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் செயல் படுத்தி, அவர்களுக்கு பொது மென்பொருள் செயல்பாடு, செயலி பதிவேற்றம் செய்யப்பட்ட திறன் பேசிகள் மூலம் தகவல் தொடர்புத்தொழில்நுட்பம் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு பயிற்சி மூலம் களப்பணியாளர்கள் திறன்களை மேம்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக சமுதாய அணி திரட்டல், புதுமையான முறைகள், சலுகைகள், குறைகள் தீர்த்துவைத்தல், துறைகள் ஒருங்கிணைப்பு ஆகிய செயல்பாடுகளை செய்து வருகிறோம்” என்று கூறினார்.

20190811211739968.jpg


இந்த விருது கிடைத்தவுடன், கலெக்டர் துவங்கின போஷன் அபியான் திட்டத்தின் தொடர்ச்சியாக, “பரிசு பால்” திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தொடக்கக் கல்வி குழந்தைகளுக்கு தினமும் ஆரோக்கிய பால் வழங்கப்பட்டு வருகிறது.


பரிசு பால் திட்டத்தை பற்றி கலெக்டர் கூறும்போது...


“பால் அல்லது பால் பொருட்கள் கொண்ட உணவு 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் புரதம் மற்றும் ஒரு குழந்தைக்கு தேவையான பல மைக்ரோ ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது என்று பல ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் 30 சதவிகிதம் குழந்தைகள் எடை குறைவாகவும்... பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ரத்த சோகை கொண்டதாகவும் உள்ளனர். எனவே ஐஐஎல் 1200 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை செயல் படுத்துகின்றனர். வைட்டமின் ஏ மற்றும் டி உடன் பலப்படுத்தப்பட்டு யு.எச்.டி சுவை கொண்ட டோன்ட் பால் 200 மில்லி அனைத்து வேலை நாட்களிலும் மலபார் பால் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. அந்த குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசிக்கிறது” என்று கூறினார் கலெக்டர்.

2019081121203721.jpg


இந்த ஊட்டச்சத்து பால் வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தெலுங்கானாவில் உள்ள லஷ்மாப்பூரில் உள்ள இசட்பி உயர்நிலைப்பள்ளியில் 2016 பிப்ரவரி 26 ஆம் தேதி துவக்கப்பட்டு இன்றும் சிறப்பாக நடந்து வருகிறதாம்.
தற்போது நீலகிரி மாவட்டத்திலும் இந்தத் திட்டம் சிறப்பாக துவங்கி நடந்து வருகிறது. இதனால் கட்டாயம் குறைபாடுள்ள குழந்தைகள், போஷாக்கு குழந்தைகளாக வளர்வது உறுதி.

20190811212356254.jpg


இந்த போஷன் அபியான் திட்டத்தை நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா எப்படி செயல்படுத்தியுள்ளார் என்பதை நேரில் பார்வையிட மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ராணி விரைவில் நீலகிரிக்கு வர இருக்கிறார். தனது நேரடி விசிட் மூலம் நாடு முழுவதும் நீலகிரி போல எப்படி இந்த திட்டத்தை விரிவு படுத்துவது என்ற ஐடியாவை கேட்டு செயல்படுத்த இருக்கிறாராம் மத்திய அமைச்சர்.


நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு ஒரு 'ஓ' போடுவோம்!. ஓ..ஹோ!