
தனி மனித வாழ்வில் இறப்பு தரும் இழப்பு ஈடு செய்ய இயலாதது. ‘இட்டு நிரப்ப முடியாத வெற்றிடம்’ ஒன்று உருவாகி, அது காலம் நிரப்ப இயலாத இடமாக மாறுவதை மனதால் உணர்ந்திருக்கிறோம். ஆனால் பொது வாழ்வில், ‘ஒருவர் இல்லையேல் மற்றவர்’ என்ற நிலமையையே காண்கிறோம். இந்திய அளவில் ஏற்பட்ட அரசியல் மரணங்கள் இந்நாட்டின் தலை எழுத்தையே மாற்றி விடும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் அந்த அச்சம் அவசியமற்றது என்பதை சரித்திரம் நிரூபித்தது.
ஜூன் 23, 1980 ஆம் ஆண்டு, ஒரு இளவரசனைப் போல வலம் வந்துக் கொண்டிருந்த சஞ்சய் காந்தி, விமான விபத்தில் மரணமடைந்தார். நெருக்கடி கால நேரத்தில், மிசா அமலில் இருந்த போது அவரின் செயல்பாடுகள் ஜனநாயக படுகொலைக்கு சமமாக இருந்ததை யாரும் மறந்து விட முடியாது. இந்திரா காந்தியின் மகன் விபத்தில் இறந்த போது, அவர் மறைவுக்கு வருந்தியதை விட, 23 வயதான மேனகா காந்தி, கையில் நூறு நாள் குழந்தையுடன் விதவைக் கோலம் பூண்டதற்கு வருந்தியவரே அதிகம்.
கணவர் மரணத்துக்குப் பின், மாமியார் வீட்டை விட்டு வெளியேறிய மேனகா, ஜனதா தளத்தில் சேர்ந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கினார். பறவைகள், மிருங்கங்கள் மேல் இரக்கமும், காருண்யமும் கொண்ட தனிப்பட்ட அடையாளம், மேனகாவின் அடையாளம் . 1984ஆம் ஆண்டு, அமேதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட போது தோற்றுப் போனாலும், தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தல்களில் பெரும் வெற்றியைப் பெற்றவர்.
ஆறு முறை பில்லிபெட் தொகுதியில் இருந்தும், ஒரு முறை அயோனியா தொகுதியில் இருந்தும் வெற்றி பெற்று எம்.பி ஆனவர். ஜனதாதளம் சார்பிலும், பிஜேபி சார்பிலும், சுயேட்சையாகவும் களம் கண்ட வெற்றியாளர் இவர். மத்திய அமைச்சராக இவர் பொறுப்பு வகித்த துறைகள் இவரின் தனித்துவம் மிக்க நிர்வாகத் திறனுக்கு சான்று. சுற்றுச் சூழல், வனத்துறை, சமூக நீதித்துறை, இந்திய கலாச்சாரம், மிருக வளத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை என்று இவரின் ரசனைக்கு ஏற்ற துறைகளை ஏற்று, இவர் அவற்றில் முத்திரை பதித்தவர். பல வாரியங்களில் தலைமைப் பொறுப்பையும், குழு உறுப்பினராகவும் இருந்து செயலாற்றியவர்.

அதே கால கட்டத்தில் உதயமான மற்றுமொரு நட்சத்திரம் மம்தா பானர்ஜி . ‘தீதி’ என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர். எழுபதுகளில் காங்கிரஸ் கட்சியில் இளம் பெண்ணாக அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய இவர், வங்காளத்தில் மகிளா காங்கிரசின் தலைவராக உயர்ந்தார். 1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பொதுவுடமைக் கட்சியின் தூண்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜியினை தோற்கடித்து, இந்தியாவின் கவனத்தைப் பெற்றார். அதன் பின் இவர் அரசியல் ஏணியில் ஏறிக்கொண்டே சென்றார்.
1996, 1999, 2004, 2009 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று தன் எம்.பி. பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். முதலில் காங்கிரசில் இருந்த போதும், பின்னாளில் அதிருப்தியுடன் வெளியேறி திரிணாமுல் காங்கிரசை துவக்கி, வெற்றிப்பாதையில் நடை போடுகிறவர். அசாத்திய துணிச்சல், அழகிய எளிமை என்று இரு முரண்களின் இருப்பிடம். ஜோதிபாசு போன்ற தலைவர்களையும் எதிர்த்து நிற்கும் தீரம் மிக்கவர். பொதுவுடமைக் கட்சியின் கோட்டையாய் விளங்கிய மேற்கு வங்காளத்தின் ஆட்சியைப் பிடித்து சரித்திரம் படைத்ததவர். இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வர்.
மத்திய அமைச்சராக இவர் ஏற்ற பொறுப்புகளில் தனி முத்திரையைப் பதித்தவர். இருமுறை இரயில்வே மந்திரியாக இருந்து சிறப்புற பணியாற்றியவர். அப்போது மேற்கு வங்கத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்தது மட்டுமன்றி, அதிவேக நீண்ட தூர ‘துரந்தோ’ இரயில்கள் இவரின் பங்களிப்பு. நல்ல எழுத்தாளர், ஓவியர், பல்கலை வித்தகி மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க கவர்னரான உமா சங்கர் தீட்சித்தின் மருமகள் ஷீலா தீட்சித் அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். சமீபத்தில் மறைந்த இவர், தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் தில்லியின் முதலமைச்சராக தொண்டாற்றியவர். இதனால் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்த பெண்மணி என்ற புகழைப் பெற்றார்.
இவரின் அரசியல் நுழைவு மம்தாவைப் போலவே பெண்கள் காங்கிரஸ் பொறுப்பளராக துவங்கியது. பின் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என்று தொடர் வெற்றிகள் பெற்றார். இந்திரா பிரதமராக இருந்த ஐ,நா சபையின் பெண்கள் கமிஷனுக்கு இந்தியாவின் பிரதிநிதியானார். 1984-இல் ராஜிவ் காந்தி பிரதமரான போது, ‘நாடாளுமன்ற நடவடிக்கைகள்’ துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று, திறம்பட பணி செய்தவர். நயத்தக்க அரசியல் நாகரிகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய இப்பெண் தலைவர், இறுதிவரை காங்கிரசின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். கேரளாவின் கவர்னராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார். அர்விந்த் கெஜ்ரிவால் வரும் வரை அசைக்க முடியாத தில்லி முதல்வராக இருந்தவர். தில்லியின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் உழைத்தவர்.
இன்னும் ஒரு இறப்பு 1984 ஆம் ஆண்டு, பின்னணியில் இருந்த ஒரு பெண்மணியை அரசியல் அரங்குக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. தனது பாதுகாவலர்களால் இந்திரா சுடப்பட்டு இறந்த போது ராஜிவ் காந்தி பிரதமரானார். அதுவரை இல்லத்தரசியாக இருந்த சோனியா, ராஜீவுடன் கைக் கோர்த்து அரசியல் மேடைகளில் தோன்ற ஆரம்பித்தார்.
தொடர்ந்தது இன்னொரு மரணம் 1987 இல். அது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் இறப்பு. அந்த இறப்பு, இரண்டு பெண்மணிகளை அரசியலுக்கு அழைத்து வந்தது. ஒருவர் அவர் மனைவி வி.என் ஜானகி அம்மையார். இன்னொருவர் அப்போது இக்களத்தில் காலூன்ற காத்திருந்த ‘ஜெயலலிதா’ அவர்கள்.
- தொடரும்

Leave a comment
Upload