கதை
கதை - நெல்லிக்கனி... - ஆர்னிகா நாசர்

20190820215738758.jpg

பங்களா முழுக்க மின்பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


மகப்பேறு மருத்துவர் ஆதவன், வெள்ளைநிற ஃபுல் சூட்டில் நின்றிருந்தார். வயது 78. உயரம் 170 செமீ. திராவிட நிறம். டை அடிக்கப்பட்ட தலை கேசம். பட்டையான அகலமீசை. பவர் கிளாஸ் சிறையில் சிரிக்கும் கண்கள்.


செவிலியர் நங்கையாக இருந்து பணி ஓய்வு பெற்ற செல்லக்கிளி கணவரின் அருகில் பதவிசாய் நின்றிருந்தாள். வயது 75. உயரம் 155 செமீ. ரோஜாநிறம். டை அடிக்கப்பட்ட தலைகேசம். அன்னை தெரஸா படிந்த முகம்.


ஆதவனுக்கும் செல்லக்கிளிக்கும் இன்று ஐம்பதாவது திருமண நாள். இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இணைந்து முப்பதாயிரம் சுகப்பிரசவங்களை பார்த்திருக்கிறார்கள்.


மூத்தது மகன் - பெயர் பாரிவள்ளல். வயது 48. இருதய நல மருத்துவராக பணிபுரிகிறான். அம்மாவின் சாயல். மனைவி பெயர் சந்திரிகா. வயது 45. கண்மருத்துவராக பணிபுரிகிறாள். இரு குழந்தைகள். மூத்தது மகள் பெயர் காஞ்சனா. வயது இருபது. ரேடியாலஜி மாணவி, இரண்டாவது மகன் பெயர் ரோஜாமகன். வயது பதினெட்டு. இளங்கலை விண்வெளி பௌதிகம் படிக்கிறான்.


இரண்டாவது மகள் - பெயர் பைந்தமிழ். வயது 46. மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கிறாள். அப்பா சாயல். கணவனின் பெயர் அருள்மொழி வயது 48. தொல்பொருள் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறான். இரு குழந்தைகள். மூத்தது மகன் பெயர் கார்முகில். இளங்கலை உயிரியல் தொழில்நுட்பம் படிக்கிறான். இரண்டாவது மகள் பெயர் தங்கம் மீனாட்சி வயது 16. ப்ளஸ்டூ படிக்கிறாள்.


உறவினர்களும் நண்பர் கூட்டமும் பங்களாவை நிறைத்தனர். கொண்டு வந்த பரிசு பொதிகளை ஐம்பதாவது திருமணநாள் கொண்டாடும் தம்பதிகளிடம் கொடுத்து வாழ்த்தினர்.


“நூறு வருடம் தாம்பத்யம் காண வாழ்த்துக்கள்!”


“ஒற்றுமையாய் வாழும் தம்பதிகளுக்கு எடுத்துக்காட்ட புராண இதிகாச இலக்கிய ஜோடிகளை கை காட்ட வேண்டியதில்லை. உங்களிருவரையும் சுட்டிக்காட்டினால் போதும்!”


பல தம்பதிகள் ஆதவன் செல்லக்கிளி கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.


“இக்கால தம்பதிகளுக்கு நீங்கள் இருவரும் அழகிய முன்மாதிரிகள். நீங்கள் உங்களது திருமண வாழ்க்கையை மட்டும் வெற்றிகரமாக்கவில்லை. உங்களது மகன் மகளின் திருமண வாழ்க்கைகளையும் வெற்றிகரமாக்கியுள்ளீர்கள். இரு அழகிய பேரன்கள் இரு அழகிய பேத்திகள். உங்களது வெற்றிகரமான திருமண வாழ்க்கை திருமணம் என்கிற பந்தத்தின் மேல் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகிறது!”


ஆதவனும் செல்லக்கிளியும் புன்முறுவல் பூத்தனர்.


மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் பரிசுப்பொருள் அளித்து ஆசிர்வாதம் பெற்றனர்.


பஃபே விருந்து நடைபெற்றது.


விழா முடிந்து ஆதவனும் செல்லக்கிளியும் பூ அலங்காரம் செய்யப்பட்ட அறைக்குள் தனித்து விடப்பட்டனர்.


பேத்தி கூவினாள். “தாத்தோவ் பாட்டீஸ்! இது உங்களுக்கு இரண்டாவது முதலிரவு என்ஜாய்!”


ஆதவன் செல்லக்கிளியின் கைகளை பற்றிக்கொண்டார். “நம்ம கல்யாணம் இப்பதான் நடந்த மாதிரி இருக்கு. ஆனா அம்பது வருடங்கள் கரைந்தோடி விட்டன. நீதான் என் வாழ்வின் கிரியாஊக்கம். நான் உன்னிடம் நல்ல கணவனாக நடந்து கொண்டேனா என்பது எனக்கு தெரியாது. என்னையும் அறியாது உனக்கு ஏதேனும் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடு. ஐ லவ் யூ செல்லக்கிளி!”


“ஆதவன்! நீங்கள்தான் என் வாழ்வின் சகலமும். நான் உங்களிடம் நல்ல மனைவியாக நடந்த கொண்டேனா என்பது எனக்கு தெரியாது. என்னையும் அறியாது உங்களுக்கு ஏதேனும் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஐ லவ் யூ ஆதவன்!”


ஆதவன் இரு கைகளை இயேசுநாதர் போல் விரித்து நீட்டினார். ஓடிப்போய் கணவரை இறுக கட்டிக் கொண்டாள் செல்லக்கிளி. மனைவியின் உதட்டில் ஆழமாக முத்தமிட்டார்.

“நமக்கு வயதாகி விட்டது அல்லவா செல்லக்கிளி?”


“யார் சொன்னது? நமது முதலிரவில் நீங்கள் கொடுத்த முத்தத்தை விட இந்த முத்தம் கூடுதலாய் தித்திக்கிறது!”


“நாம் இன்னும் எத்தனை வருடம் உயிருடன் இருப்போம் கிளி?”


“கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்திகளை எடுக்கும்வரை உயிருடன் இருப்போம் ஆதவன். ஆனால் நான் இறைவனிடம் ஒன்றே ஒன்றைதான் தினம் தினம் வேண்டுகிறேன். உங்களுக்கு முன் நான் இறந்து விட வேண்டும். என் மரணம் அமைதியான முறையில் அமையவேண்டும்!”


“கணவனுக்கு முன் மனைவி இறந்தால் அதன்பின் கணவனின் வாழ்க்கை நரகமாகி விடும். உனக்கு முன் நான் இறந்துவிட வேண்டும் என்பதே என் வேண்டுதல். என் மரணம் தூக்கத்தில் நிகழவேண்டும் என விரும்புகிறேன்!”


“நாமிருவரும் ஒரேநாளில் ஒரே நொடியில் மரணிக்க இறைவன் அருள்புரியட்டும்!”


அறைக்குள் கோடி ஒளிப்புள்ளிகள் பூத்தன. ஒளிப்புள்ளிகள் கை கோர்த்து ஒரு உருவமாய் மாறின.


தங்கமஞ்சள் நிறத்தில் ஒரு பெண் தோன்றினாள். அவளது தலையில் கிரீடம் இருந்தது. மார்புக்கச்சை அணிந்திருந்தாள். முதுகில் இரு இறக்கைகள் காணப்பட்டன. அவளது முகத்தில் வானவில் நிறங்கள் மிளிர்ந்தன.


“யார் நீங்கள்? பூட்டிய அறைக்குள் எப்படி வந்தீர்கள்?”


“நான் காதல் தேவதை. உங்களிருவரையும் சந்தித்து அளவளாவ வந்திருக்கிறேன்!”


“நாங்கள் அம்பது ஆண்டு காலம் தாம்பத்யம் நடத்திய கணவன் மனைவி… அவ்வளவே!”


“உங்களின் காதலைப் போல ஒரு வலிமையான காதலை நான் இதுவரை பார்த்ததில்லை. கணவன் மனைவியை எதிர்க்க துணிவில்லாமல் மனைவி கணவனை எதிர்க்க துணிவில்லாமல் குடும்பம் நடத்தினால் அது கொத்தடிமை வாழ்க்கை. நீங்கள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் ஆடையாக இருந்தீர்கள். ஒருவர் இருப்பை இன்னொருவர் அங்கீகரித்தீர்கள். வெளியில் நீங்கள் மகப்பேறு மருத்துவர் செவிலியர் நங்கையாக இருந்தாலும் வீட்டுக்குள் வரும் போது அவைகளை கழற்றி வைத்து விட்டு கணவன் மனைவியாக வாழ்ந்தீர்கள். திருமணநாளில் உங்களுக்கிடையே இருந்த காதல் நாளுக்கு நாள் இந்திய விலைவாசி போல் உயர்ந்து கொண்டே போனதே ஒழிய சிறிதும் குறையவில்லை. கணவரின் சாயல் மனைவிக்குள்ளும் மனைவியின் சாயல் கணவருக்குள்ளும் படிந்து அண்ணன் தங்கை போல் உருவ ஒற்றுமை கூடி விட்டீர்கள். குழந்தை வளர்ப்பில் காதலாகி கசிந்து உருகினீர்கள். உங்களின் அன்றன்றைய ஊடல்களை அன்றன்றைய இரவுக்குள் சமாதான கொடி காட்டி தீர்த்தீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே ஆன செக்ஸை இறைவனுக்கு தீபாராதனை செய்யும் பாவனைக்கு உயர்த்தினீர்கள். மொத்தத்தில் நீங்கள் இருவரும் ஆதர்ச தம்பதிகள்!”


“நீங்கள் எங்களை மிகவும் பாராட்டுகிறீர்கள். நாங்கள் எங்களின் வாழ்க்கையை அர்த்தப்பூர்வமாய் வாழ்ந்தோம் அவ்வளவே!”


காதல் தேவதை சிரித்தாள். “உங்களின் தன்னடக்கம் உங்களின் கூடுதல் ப்ளஸ் பாயின்ட் உங்களிருவருக்கும் ஏதாவது ஒன்றை பரிசளிக்க விரும்புகிறேன்!”


பத்துநொடி நிமிட கரைசலுக்கு பின் காதல் தேவதை தனது வலதுகையை நீட்டினாள். நீட்டிய கையில் இரு நெல்லிக்கனிகள்.


இரு நெல்லிக்கனிகளும் செக்கச்சிவந்து டாலடித்தன.


“இது தேவலோகத்து நெல்லிக்கனி. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்!”


“இவற்றால் எங்களுக்கு என்ன பயன் தேவதையே?”


“நல்ல கேள்வி. மனிதருக்கு என்னென்ன காரணங்களால் வயோதிகம் ஏற்படும்?”


“ஆண் பெண் பால் வித்தியாசத்தால் மரபியல் ரீதியால் சுயசுத்தத்தால் பயிற்சியால் உணவு பழக்கவழக்கத்தால் வாழ்க்கை முறையால் வயோதிகம் கூடலாம், குறையலாம்… வயோதிகம் வந்தால் உடல் பருமன், நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை பீடித்து மரணம் சமீபிக்கும்…”


“ஆதவன்… செல்லக்கிளி தம்பதிகளே! நீங்களிருவரும் இந்த நெல்லிக்கனிகளை சாப்பிட்டால் கட்டுக்கு அடங்கா இளமை திரும்பும். உங்களிருவருக்கும் பழைய பற்கள் விழுந்து புதிய பற்கள் முளைக்கும். இதயம் மகாவலிமை அடையும். செல்லக்கிளிக்கு மெனோபாஸ் பீரியர்டும் ஆதவனுக்கு மேல் மெனோபாஸ் பீரியர்டும் நீங்கும். புதிய செல்கள் உருவாகும். இரத்த ஓட்டம் சீராகும். கண் பார்வை கழுகினது போல் மாறும். இருபது வயது ஆண் பெண்ணாக மாறுவீர்கள். தினம் விரும்பியபடி செக்ஸ் வைத்துக்கொள்வீர்கள். இருநூறு வயது வரை இருவரும் உயிர் வாழ்வீர்கள்!”


ஆதவன் எள்ளலாய் சிரித்தார்.


“எதற்கு சிரிக்கிறீர்கள் ஆதவன்?”


“நாங்கள் இருவரும் தனியாகவா பிறந்தோம்? எங்களுக்கென உறவுவட்டம் நட்புவட்டம் இருக்கிறது. மகன் மகள் மருமகன் மருமகள் பேரன் பேத்திகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வயதாகும்... நாங்கள் மட்டும் இளமையாகவே இருப்போம் என்றால் எப்படி? எங்களின் சமவயதினர் எங்களை விட பத்து இருபது முப்பது வயதினர் முதுமை அடைந்து எழுபது எண்பது வயதில் இறப்பர். நாங்கள் மட்டும் இருநூறு வயது வரை இருந்து என்ன சாதிக்கப் போகிறோம். ஒரு செடியில் ஒரு மொட்டு தோன்றும், பின் அது பூவாய் மலரும், பின் அது உதிர்ந்து சருகாகும். நாங்களிருவரும் மலர்ந்து உதிர தயாராகி விட்டோம். செடியின் எல்லா மலர்களின் உதிர்வை பார்த்து நிற்பது வரமல்ல சாபம். எங்களுக்கு உங்களுடைய நெல்லிக்கனிகள் தேவையில்லை!”


“உணர்ச்சிவசப்படாதீர்கள் இது போன்றதொரு வாய்ப்பு இனிமேல் வராது ஆதவன்!”


“எங்களை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு நெல்லிக்கனிகள் கொடுக்க நீங்கள் தயார் என்றால் நாங்கள் இந்த நெல்லிக்கனிகளை பெற்றுக் கொள்கிறோம்.!”


“அது என்னால் முடியாது ஆதவன்!”


அரைக்கண் மூடி யோசித்தாள் செல்லக்கிளி. “ஒரு நிமிஷம் மிஸ் காதல் தேவதை! என் கணவருடன் ஒரு விஷயத்தை பற்றி கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது!”


“தாராளமாய் பேசுங்கள்!”


ஆதவனும் செல்லக்கிளியும் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர். செல்லக்கிளி காதல் தேவதையிடம் திரும்பினாள். “எங்களுக்கு கொடுக்கப்படும் நெல்லிக்கனிகளை நாங்கள் யாருக்காவது பகிர்ந்து அளிக்கலாமில்லையா? பகிர்ந்தளித்தால் நெல்லிக்கனியின் சக்தி அப்படியே இருக்குமா?”

20190820220107213.jpg

“நெல்லிக்கனிகளை நீங்கள் யாருக்கும் பகிர்ந்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு ஒரு நெல்லிக்கனியை நான்காக துண்டாடி நாலு பேருக்கு கொடுத்தால் நாலு பேரின் ஆயுள் தலா அம்பது அம்பது வருடம் கூடும்!”


இரு நெல்லிக்கனிகளை காதல் தேவதையிடமிருந்து வாங்கி எட்டுத்துண்டுகளாய் வெட்டினார் ஆதவன். அறைக்கதவை திறந்து கொண்டு வெளிப்பட்டார். மகன் மகள் குடும்பத்தினரை அழைத்தார்.


முதலில் மூத்தமகனின் வாயை திறக்க சொல்லி ஒரு நெல்லிகனி துண்டை போட்டார். “மென்று விழுங்குடா!” அடுத்து மருமகளுக்கு அதன்பின் பேரனுக்கு, பேத்திக்கு.

இரண்டாவது மகளின் வாயை திறக்க சொல்லி ஒரு நெல்லிக்கனி துண்டை போட்டாள் செல்லக்கிளி. “மென்று விழுங்குடி!" அடுத்து மருமகனுக்கு அதன்பின் பேரனுக்கு, பேத்திக்கு.


அறைக்கு திரும்பினர். நெல்லிக்கனிகளை அறுத்த கத்தியிலிருந்து சாறு வழிந்தது. அதனை தன் நாக்கில் இட்டு சுவைக்கப் போன ஆதவன் அனிச்சையாக திரும்பி கத்தியில் வழிந்த சாற்றை செல்லக்கிளியின் நாக்கில் இட்டார்.


‘துளி நெல்லிக்கனி சாற்றுக்கு பத்து வருடம் ஆயுள் நீளாதா என்ன?’ காதலாய் மனைவியின் கன்னத்தை கிள்ளினார்.


“மனிதகுலம் வீழ்ச்சியுறாமல் இருப்பதற்கு இதுபோன்ற சுயநலமற்ற ஆண் பெண்கள் சிலராவது இன்னும் வாழ்வதே காரணம்!” தனக்குள் முணுமுணுத்தபடி காதல் தேவதை ட்ரில்லியன் ட்ரில்லியன் ஒளிப் புள்ளிகளாய் பிரிந்து தேவலோகம் பறந்தாள்.