சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த சிறிய தீவில் மக்கள் வசிக்க வீடுகள் கட்டிக்கொள்ள நிறைய இடம் தேவை. பூமியில் வீடுகள் கட்ட இடம் இல்லை என்பதால், அவர்கள் ஆகாயத்தை தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஆம்! ஆகாயத்தை நமது இடம் ஆக்கிக் கொண்டால், இடம் பற்றிய பிரச்சனை எதுவும் இல்லையே! எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் நாம் கட்டிடத்தை கட்டிக்கொண்டு போகலாம்.
கட்டிடங்களுக்கு இது சரி.. ஆனால் போக்குவரத்துக்கு? பஸ், ரயில் போன்ற போக்குவரத்துக்கு விரிவுபடுத்த ஆகாயத்தை தேர்ந்தெடுக்க முடியாது.
பூமி மட்டும் தான் ஒரே வழி. பூமியின் அளவு சிங்கப்பூரில் மிகவும் குறைவு. வேறு என்னதான் வழி? பூமிதான் ஒரே வழி..! சரி ஓகே.. பூமியை வீடு கட்டும் உபயோகத்துக்கு விட்டுவிட்டு, பூமியைக் குடைந்து பூமிக்கு அடியில் இன்று இங்கே இரயில்கள் ஓடுகின்றன. கார்களும், பஸ்களும் கூட பூமிக்கு அடியில் ஓடுகின்றன.
எவ்வளவு ஆழத்தில்? எம்ஆர்டி என்கின்ற குளிரூட்டப்பட்ட ரயில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றன.
இது பூமி மட்டத்திலிருந்து 30 மீட்டர் முதல் 40 மீட்டர் ஆழத்தில்.... 30 மீட்டர் என்பது 90 அடி.... ஒரு எட்டு மாடி கட்டிடத்தை அப்படியே பூமிக்கு அடியில் புதைக்கும் அளவுக்கு ஆழம்!
சரி... இந்த ரயில் பூமிக்கு அடியில் 90 அடிக்கு கீழே ஓடுகிறது.. பாதாள சாக்கடையும் பூமிக்கு அடியில் தான் இருக்கிறது. இந்த பாதாள சாக்கடை, 20 மீட்டர் முதல் சில இடங்களில் 50 முதல் 55 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது! கண்டிப்பாக இந்த சாக்கடையிலிருந்து நாற்றம் வெளியில் வராது... மழை பெய்தால் ரோடுக்கு சாக்கடைத் தண்ணீர் வராது... உத்தரவாதம்.
அடுத்தது... பூமிக்கு அடியில் எதை எதை வைக்கலாம்? பூமிக்கு அடியில் மின் கம்பிகளை கொண்டு செல்வது பற்றி இப்பொழுதுதான் நாம் யோசித்து வருகிறோம். கண்ணெதிரில் மின் கம்பிகள் இருந்தாலும்அவற்றை எல்லாம் சரிவர நம்மால் பராமரிக்க முடியவில்லை. பூமிக்கு அடியில் போட்டு புதைத்து விட்டால் எப்படி அவற்றை பராமரிப்பது? எப்படி அதில் பழுது நீக்குவது? எப்படி அவற்றை எடுத்து விட்டு தேவைப்பட்டால் புதிய கம்பிகளை போடுவது? 24 பில்லியன் டாலர் செலவில், சிங்கப்பூர் இந்தப் பணியை 2012-ல் தொடங்கி, தற்போது முதல் கட்ட வேலை முடிக்கப்பட்டுள்ளது. high voltage கேபிள்கள் பூமிக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் நிறுவப்படுகின்றன. இவை 1980இல் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட மின் கம்பிகளுக்கு மாற்றாக இருக்கும். 2022-ல் முழுவதுமாக இந்தப் பணி முடிக்கப்பட்டு விடும். இதன் முதல் பகுதி அடுத்த வருட இறுதியில் உபயோகத்துக்கு வரும்..
இப்படி அமையும் மின் கம்பிகள் நம்மூர் போல பள்ளம் தோண்டி புகைப்பதில்லை. இதற்காக ஒரு பெரிய சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சிங்கப்பூர் நகரம் மிகவும் சிறியதாக இருக்கலாம், ஆனால் இந்த மின் கம்பிகளின் நீளம் 500 கிலோமீட்டர். குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் இவ்வளவு நீளம்! இதைப் போல இரு மடங்கு மின்கம்பிகளை இந்த சுரங்கப் பாதையில் அமைக்க முன்னெச்சரிக்கையாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த சுரங்கப்பாதை அமைப்பு பற்றி பார்ப்போம். நீர் கசிவு, நெருப்பினால் வரும் ஆபத்து ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த சுரங்கப் பாதையின் விட்டம் 6 மீட்டர் அதாவது 18 அடி கொண்டதாக அமைக்கப்படுகிறது. இரண்டு மாடி உயரம். இந்த சுரங்கப் பாதை முழுவதும் எல்லா பக்கமும் சுவர்கள் அமைக்கப்பட்டு, சுரங்கத்தின் நடுவில் சிறிய மின்சார வண்டிகளில் பயணம் செய்யும் அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சுரங்கப்பாதை இணையும் இடங்களில் இதன் விட்டம் 33 அடி வரை இருக்கும்... இது மூன்று மாடிக்கட்டிடம் அளவு ஆகும். நெருப்பினால் ஏற்படும் அபாயம் போன்றவற்றை இந்த ஏற்பாட்டின் மூலம் எளிதில் சரி செய்யலாம். இந்த சுரங்கத்தில் அமைக்கப்படும் மின்கம்பிகள் 30 ஆண்டுகள் வரை உழைக்கக் கூடியவை. இவற்றில் ஏதாவது பழுது ஏற்பட்டால் உடனே சென்று சரி செய்யலாம். தேவைப்பட்டால் அவற்றை எடுத்து விட்டு புதிதாக அமைக்கலாம். அதுவும் சில நிமிடங்களில்! இந்த சுரங்கமே ஒரு தனி உலகம்.
இதனுடன் ஆப்டிக் ஃபைபர் குழாய்களும் அமைக்கப்படுவதால், அதன் மூலம் மற்ற சேவைகளையும் பெற முடியும்.
ம்...இதையெல்லாம் படிச்சு நாம இப்போதைக்கு பெருமூச்சு மட்டும்தான் விட முடியும்!
Leave a comment
Upload