பொது
ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலின் ராணுவ ரகசியங்கள் திருடப்பட்டதா?! - ஆர்.ராஜேஷ் கன்னா

20190819092146953.jpg

இந்தியாவின் முதல் விமான தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வடிவமைப்பு 1999ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, கப்பலின் அடித்தளம் 2009ம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமான தாங்கி கப்பல், கேரளா கடலில் டிசம்பர் 2011ல் மிதக்க விடப்பட்டு, 2013-ல் வெள்ளோட்டம் விடப்பட்டு, கப்பல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, கப்பற்படையில் 2021ல் சேர கேரளா கொச்சி ஷிப் யார்டு எனும் கப்பல் கட்டும் தளத்தில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.


உலகில் அமெரிக்கா, ரஷியா, மற்றும் பிரான்சு உட்பட வல்லரசு நாடுகள் இதுவரை 204 விமானம் தாங்கி கப்பல்களை கடலில் மிதக்க விட்டுள்ளனர். இந்தியாவும் தனது முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை உள்நாட்டிலேயே தயாரித்து கடலில் மிதக்கவிட்டு விமானம் தாங்கி கப்பல் வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


விக்ராந்த் என்பது சம்ஸ்கிருத சொல். இதற்கு ‘துணிச்சல்’ என்று அர்த்தம். விமான தாங்கி கப்பலின் நீளம் 860 அடி, அகலம் 200 அடி, கப்பலின உயரம் கிட்டதட்ட 18 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையான உயரம் கொண்டது. கப்பலின் எடை 40 ஆயிரம் டன். விமானம் தாங்கி கப்பல் கட்ட இதுவரை 16,000 கோடி செலவாகும் என மதிப்பிட்டு செலவழிக்கப்படுகிறது.


விக்ராந்த் கப்பலின் மேல் தளத்தில் போர் விமானங்கள் மேலெழம்புவதற்கும் இறங்குவதற்கும் இரண்டு பிரதான ஒடு பாதைகள் உள்ளது. விக்ராந்த் போர் கப்பலில் 36 போர் விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இதில் ரஷ்ய தயாரிப்பான மிக் 29 கே விமானத்தினையும் இந்திய தயாரிப்பான முதல் நவீன வகை போர் விமானமான தேஜஸ் மார்க் 2 விமானத்தினையும் நிறுத்தவும், காமோவ், வெஸ்லேண்ட் சீ கிங், எச்ஏஎல் துருவ ஹெலிகாப்டர்களை நிறுத்தி முடியும். விக்ராந்த் போர் கப்பலிருந்து 3 நிமிடங்களில் போர் விமானத்தினை மேலெழும்பி பறக்கச் செய்ய முடியும். அவசர காலத்தில் 2 நிமிடத்தில் போர் கப்பலிலிருந்து போர் விமானம் மேலெழும்பி பறக்கும் நவீன தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் விமான எதிர்ப்பு பீரங்கி முதல் ஏவுகணை செலுத்தம் நவீன வசதிகள் வரை இருப்பது விக்ராந்த் கப்பலின் சிறப்பு அம்சமாகும்.


விக்ராந்த் கப்பலில் பயன்படுத்தப்பட்ட தொண்ணூறு சதவீத முதற் தரமான எஃகு மற்றும் 3 வகையான உலோகங்கள் இந்திய உலோக கழகம் பிலாய் மற்றும் ரூர்கோலாவில் இருந்து தருவிக்கப்பட்டது. விக்ராந்த் போர் கப்பலில் தயாரிக்கப்படும் மின்சாரத்தினை தினமும் கப்பலின் தேவைக்கு போக, கொச்சி போன்ற பெரு நகரங்களுக்கே மின்சார சப்ளை செய்ய முடியும். இதனால் இந்த கப்பல் இந்திய கடலில் எந்த பகுதியில் நிற்கிறதோ, அந்த நகரத்திற்கு தொடர் மின்சாரம் சப்ளை செய்ய முடியும். தொலைதூரத்திலிருந்து அல்லது நீர்மூழ்கி கப்பல் நம்மை தாக்க வந்தால், அதனை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் பலத்த பாதுகாப்பு வளையத்தில் கட்டப்பட்டு வருகிறது!


சென்ற திங்கட்கிழமை, கொச்சி காவல்நிலையத்திற்கு கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் உயர் அதிகாரிகளிடமிருந்து ஒரு புகார் வந்தது.

"விமான தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்குள் பல அதி நவீன கம்பியூட்டர்கள் செயல்பாட்டில் உள்ளது. கப்பலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்த நான்கு கணினிகள் உடைக்கப்பட்டு உள்ளது. அதிலிருந்து நான்கு ஹார்ட் டிஸ்குகள், ரெம் எனும் மெமொரி கார்டுகள் மற்றும் ஒரு அதிநுட்ப செயல் திறன் கொண்ட பிராசஸ் சர்வர் திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு எப்போது நடைப்பெற்றது என்று தெரியவில்லை. ஷிப் யார்டு அலுவலர்கள் பணி செய்த போது தான் கணிணி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது... காணாமல் போன கம்ப்யூட்டர் பொருட்களை கண்டுபிடித்து தர வேண்டும்" என்று புகார் மனு தரப்பட்டது.

20190819092220866.jpg

காவல் துறையினர் மேலாதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, கேரளா குற்றப்பிரிவு போலீசார் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் விசாரணை நடத்தினர். கப்பலில் எப்போது பொருட்கள் திருடப்பட்டது என்ற விவரமும் புலனும் கிடைக்காமல் அதிகாரிகள் திணறிவிட்டனர். கப்பலில் களவு போன பகுதியில் எங்கும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படவில்லை. மற்றப்படி கப்பலுக்குள் வெளி ஆட்கள் வந்து திருடுவதற்கான வாய்ப்பே இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.


விக்ராந்த் கப்பல் கட்டுமான பகுதிக்கு வெளியே பாதுகாப்பு சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கப்பலின் உள்ளே பணிபுரிந்தவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை செய்ய கேரளா குற்றப்பிரிவினர் முடிவு செய்துள்ளனர். கப்பல் கட்டுமான நிறுவனத்தினை பாதுகாத்து வரும் சி.எஸ்.எஃப் பாதுகாப்பு படையினருக்கும் கப்பலில் நடந்த அதிநவீன கம்பியூட்டர் ப்ராசசர், நான்கு ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனது பற்றி இதுவரை தெரியவில்லை என்பது வேதனையான விஷயம்.


இந்தியாவின் அதி நவீன விமானம் தாங்கி கப்பலில் முக்கியமான கம்பியூட்டர் ப்ராசசர் மற்றும் நான்கு ஹார்ட் டிஸ்குகள் திருடு போனது என்பது நமது நாட்டின் விமானதாங்கி கப்பல் கட்டும் ரகசியம் வெளியே சென்றதா என்ற கோணத்தில் ராணுவத்தினரும், கேரளா போலீசாரும் தனிப்படை அமைத்து காணாமல் போன கம்பியூட்டர் ப்ராசசர், நான்கு ஹார்டு டிஸ்குகளை மீட்க தீவிர தேடுதல் பணியினை முடுக்கி விட்டுள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.எஸ்.எஃப்) படையினர் இருக்கும்போதே அவர்களது கண்ணில் மண்ணைத் தூவி விட்டு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கம்பியூட்டர் ப்ரச்சசர் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டுள்ளதை ஆராயும் போது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வருமா என்ற மற்றொரு கோணத்திலும் விசாரணை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

20190819092456955.jpg

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் கம்ப்யூட்டர் சம்பந்தமான பொருட்கள் திருடப்பட்டதன் மூலம் நமது ராணுவ ரகசியங்கள் கசிந்தது வெளிநாட்டு சதியாக இருக்குமா என்ற கோணத்திலும் புலனாய்வுக் குழுவினர் விசாரணை சென்று கொண்டிருக்கிறது!