ஒவ்வொரு முதல் முயற்சியிலும் வெற்றி பெற....
முதலில்.....
முதன் முதலாய் எனும் இந்த தொடர் உங்களுக்கு உதவும் நோக்கில் எழுதப்படும் ஒன்று.
“முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம்...”
“சிறப்பான துவக்கம் இருந்தால் வேலை பாதி முடிந்து விட்டது போல் தான்...”
எந்த ஒரு விஷயத்திலும், நிகழ்ச்சியிலும், பேச்சிலும், ஆளுமையிலும், எதை எடுத்துக்கொண்டாலும் முதலில் ஏற்படும் அல்லது உங்களுக்குத் தோன்றும் அபிப்ராயமே முக்கியமாய் கருதப்படுகிறது. அந்த அபிப்ராயம் நல்ல முறையில் அமைய உதவுவதே இந்த தொடரின் நோக்கமாகும். அதாவது எந்த ஒரு நிகழ்விலும் “முதல்” என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
பல்வேறு “முதல்”களை எப்படி எதிர்கொள்வது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
இது உங்களுக்கு சிறு அளவில் உதவினாலும் மகிழ்ச்சியே!!
எது முதலில்....?!
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். அடடா, பைபிளின் முதல் வரி அல்லவா? அவ்வளவு முதலுக்கு போக வேண்டாம். கோழியா... முட்டையா? எது முதலில்.... இந்த ஆணிய யாரும் இன்னும் புடுங்கவேயில்லை.... விட்ருவோம். உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து துவங்குவோம். நீங்கள் முதல் குழந்தையா? உங்கள் வரவு குடும்பத்தில் உள்ள எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டிருக்கும். உங்கள் முதல் அழுகை, கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் சொல்வது போல “குழந்தை பிறந்தவுடன் முதலில் அழ வேண்டும், இல்லையென்றால் அதை மற்றவர்கள் செய்வார்கள்” எவ்வளவு அர்த்தம் பொருந்திய வரிகள். அழுகையும் ஆனந்தமாவது அப்போதுதான். உங்கள் முதல் அழுகை உங்கள் பெற்றோருக்கு ஆனந்த ராகமாய் ஒலித்திருக்கும். உங்களின் முதல் ஸ்பரிசம் , பிஞ்சு கைவிரல்களின் தடவல், அவர்களை வேறு ஒரு உலகத்துக்கே அழைத்துச் செல்லும். அதுவும் சில வருடங்கள் கழித்த பின் பிறக்கும் முதல் பிள்ளைச்செல்வம் என்றால், அந்த மகிழ்ச்சியே தனி தான்.
முதன் முதலாய் தாய்ப்பால் அருந்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பேருவகையை தாய்க்குத் தந்து, முதல் குளியல், முதல் தொட்டில், முதல் பால் சோறு உண்டு, முதல் வார்த்தையாய் “ம்மா” என்றழைத்து, முதல் பால் பல் முளைத்து, கிடைத்ததையெல்லாம் கடித்து (முடிந்தால் கிடைத்தவரையெல்லாம்) முதல் எழுத்து “அ” படித்து, முதல் வகுப்பில் நுழைந்ததும், வீட்டை விட்டு வெளியே இன்னொரு வித்தியாசமான உலகம் உங்கள் கண்முன்னே முதன் முதலாய் விரியத் துவங்குகிறது.... (அப்பப்பா எத்தனை முதல்கள்....!!) அதுவரை வீடு தான் உலகம் என்று இருந்துவிட்டு, இன்று அதையும் தாண்டி ஒரு புது உலகம் அறிமுகம், அங்கே தேவதையாய் முதல் வகுப்பு டீச்சரை கண்டு ஆனந்தப்பட்டு, ஆராதித்து... தனது டீச்சரை விரும்பாத முதல் வகுப்பு பிள்ளைகள் எனக்கு தெரிந்த வரையில் இல்லை... உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்படி...... (ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே...)
எல்லாருக்கும் வரும் முதல் காதல்??!! (puppy love) அது. அதையும் தாண்டி முதல் நட்பு. (நாங்க ரெண்டுபேரும் ஒன்னாப்புலேர்ந்து சேந்து படிச்சோம் தெரியுமா?) முதல் சண்டை (நா அவன மெதுவாத்தான் தட்டினேன் டீச்சர்), ....இப்படியே தொடர்ந்து மேலே படித்து எல்லா வகுப்புகளிலும் முதல் ரேங்க் எடுத்து, 10-ம் வகுப்பில் பள்ளியிலே முதல் மாணவனாகத் தேறி , +1, +2 முடித்து மிக நல்ல மதிப்பெண்களோடு, இன்ஜினியரிங் கல்லூரி சேர்ந்து அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று வெளியில் வந்து......
இதை, இதே வரிசையிலேயே சரியாக, ஒழுங்காகச் செய்து முதல் வகுப்பில் பாஸ் பண்ணிய குமார் எனும் மாணவன் இப்போது முதல் உங்களோடு பயணப்படப் போகிறான், கூடவே நானும்...!
இருவரும் அவன் வாழ்க்கைப் பாதையில் அவனுடன் செல்வோமா....?
(முதல் பயணம் தொடரும்....)
Leave a comment
Upload