பொது
பாட்டுக்கொரு பாரத ரத்தினம்..! - வேங்கடகிருஷ்ணன்

2019081919511733.jpg

இசைக்குயில் M.S. சுப்புலட்சுமி அவர்களின் 103 வது பிறந்த நாள்...

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனும் பெயர் கொண்ட அந்த இசையரசியின் நூற்றி மூன்றாவது பிறந்தநாள் செப்டமபர் 16 அன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சுப்புலட்சுமி எனும் பெயரை விட “எம்.எஸ்” எனும் இரு எழுத்துக்கள் அவரால் மிகப்பெரிய மரியாதையை பெற்றன. சங்கீத உலகிலோ அவை ஒரு சரித்திரம். அவர் குங்குமம் வைத்திருப்பதை பார்க்க ஒரு கூட்டம், அவருடைய கொண்டையை, அதை சுற்றி ஒரே சீராய் அவர் பூ வைத்துக்கொள்ளும் அழகிற்கு ஒரு ரசிகர் கூட்டம், அவர் கட்டி வரும் நீலப்பட்டாடையை “எம்.எஸ் ப்ளூ” என்றே இன்று வரை ரசிகர்களும், பட்டுப்புடவை கடைக்காரர்களும் அழைக்கிறார்கள். இழுத்து போர்த்திக்கொண்டு, முந்தானையை அவர் வலது தோளினை சுற்றி போட்டுக்கொள்ளும் அழகிய பாங்கும், கணவர் சதாசிவம் முன்னால் அவருடைய அடக்கமும் எப்போதும் பேசப்படுபவை.

மதுரையிலிருந்து மதராசுக்கு வந்து, பின் உலக அரங்கில் பேசப்பட்ட பாடகியாய், “யுனைடெட் நேஷன்ஸ்” அரங்கில் பாடி அகில உலகத்தையும், இசையில் மயங்கிடச் செய்தார். இன்றும் அந்த காணொளியை யூடியூபில் காணலாம். ரசிகர்கள் எழுந்து நின்று சில நிமிடங்களுக்கு கரகோஷம் செய்வதை பிரமிப்புடன் பார்க்கலாம்.

20190819195201659.jpg

அவர் கணவர் திரு .சதாசிவம் எம்.எஸ்ஸை விரும்பி மணந்து கொண்டார். குஞ்சம்மா (அதுதான் அவரின் வீட்டு செல்லப்பெயர்) இசையுலகில் முன்னேற வேண்டும். அவரின் சங்கீத ஞானம் எல்லோராலும் பாராட்டப்படவேண்டும் என்பதை மட்டுமே தன் வாழ்க்கை லட்சியமாக கொண்டவர், சதாசிவம். கல்கி பத்திரிக்கையும், குஞ்சம்மாவிற்கு பிறகுதான் என்றவர். ஆனால் எம்.எஸ் அவர்களோ கல்கி பத்திரிக்கை தோன்றுவதகவதற்காகவே சாவித்ரி படத்தில் ஆண் வேடத்தில் நாரதராக நடித்தார். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. தமிழ் கூறும் நல்லுலகிற்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியராய்க் கொண்ட “கல்கி” பத்திரிக்கை கிடைத்தது. பல இலக்கிய அற்புதங்கள் அவரால் கிடைத்தன.

திருமணம் ஆகும்வரை எம்.எஸ். அவர்கள், தைரியம் மிகுந்த பெண்ணாக, அடுத்தவர் இடத்தில அன்போடு பழகுபவராக, துணிச்சல்காரியாய் இருந்தார். அவரும், நடன மேதை பால சரஸ்வதி அவர்களும் எடுத்துக்கொண்ட இளவயது “புகை”ப்படமே சாட்சி. சதாசிவம் அவர் வாழ்வில் தென்றலாய் வந்தார், மந்தமாருதமாய் வீசினார், சங்கீத மேடையிலே இசைப்புயல் வீசியது. எல்லோரையும் கொள்ளை கொண்டது.

மேடையில் மட்டுமா, திரையிலும் ஒளிர்ந்தது, 5 படங்கள், பஞ்ச ரத்னம் போல. தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே புரட்டிப்போட்ட சேவாசதனம் திரைப்படம் அவரின் முதல் படம். சாவித்ரியில் நாரதர், சகுந்தலையாக GNBயோடு 'சகுந்தலை'யில், 'மீரா'வில் மீராவாக... வாழ்ந்தார், காற்றினிலே வரும் கீதம் இன்றும் காற்றலைகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை அதைக் கேட்கும் போதும் கண்ணன் அருகில் நின்று குழலூதுவது போலவே இருக்கும்.

20190819195249896.jpg

இன்றுவரை திருப்பதி வெங்கடேச பெருமாள் அதிகாலை துயில் கலைவது எம்.எஸ் அம்மாவின் சுப்ரபாதத்தோடுதான். லட்டை விட இனிமை என்று பெருமாளே ஒத்துக்கொண்டுதான் அவருக்கு தேனை விட இனிமையை குரலினை கடைசி வரை தக்க வைத்திருக்க வேண்டும்.

சதாசிவம் அவர்களின் மறைவுக்கு பின்னர், அவர் எந்த ஒரு பொதுநிகழ்வுக்கும் வரவில்லை. கணவர் நினைவிலேயே ஏழாண்டுகள் கழித்து 2004-ல் திருப்பதி பெருமாளின் திருவடி அடைந்தார்.

நிறைய சமூக நலன் போற்றும் நிகழ்வுகளுக்காக இலவசமாக பாடிக் கொடுத்திருக்கிறார். ஒரு முறை சதாசிவம்- எம்.எஸ் தம்பதியர் கொஞ்சம் கஷ்ட நிலைமையில் இருப்பதை அறிந்த காஞ்சி மகா பெரியவர் HMV நிறுவனத்திடம் அவர்களுக்கு உதவிடப் பணித்தார். அவர்களும் பாலாஜி பஞ்ச ரத்ன மாலை என்னும் பாடல் தொகுப்பை பதிவு செய்து வெளியிட்டு, அதற்கான ராயல்டி தொகை எம்.எஸ். அவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய, அவர் அதனை மறுத்து அதை வேறு ஒரு சமூக சேவைக்காக பயன்படுத்திக்கொள்ள வற்புறுத்தினார். “கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே”.

வாங்காத விருதுகள் இல்லை என்னும் அளவிற்கு எல்லா விருதுகளும் அவரால் பெருமை பெற்றன. அவரின் சிரிப்பில் அழகு இருக்கும், சங்கீதத்திலோ தெய்வீகம் இருக்கும். மறக்கவோ, மறுக்கவோ முடியாத இசைக்குயில் அவர். இன்றும் நம் அதிகாலை பொழுதுகள் அவருக்கே, அவரின் சுப்ரபாதத்துக்கே சொந்தம்... இப்பேர்ப்பட்டவரை நாம்தான் நம் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். அது ஒரு வகையில் நம் கடமை!