தொடர்கள்
அருந்தவச்செல்வி - 15 - மரியா சிவானந்தம்

20190819134638361.jpg

பிறவிதோறும் தொடரும் பந்தம்...

மணிபல்லவத் தீவில் தனித்திருந்த மணிமேகலை தன் முற்பிறப்பின் உண்மைகளை உணர்ந்த பின், அவள் உள்ளம் ஒரே ஒரு வினாவை எழுப்பி, அதற்குரிய விடைக்காக காத்திருந்தது. அப்பிறவியில் தனது கணவனாக வாய்த்த இராகுலன், ‘இப்போது எங்கு பிறந்திருக்கிறான், என்ன பெயரில் வாழ்கிறான்?’ என்ற வினா அவளின் உள்ளக் கிடங்கில் மேலும் கீழுமாக சுழன்று, சுழன்று அவளை அலைக்கழித்தது. தன் ஐயத்தைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்த தேவதையாம் மணிமேகலா தெய்வத்தின் வருகையை எதிர்நோக்கி, அந்த பதும பீடிகையில் கரங்கள் குவித்து தொழுதவாறு காத்திருந்தாள்.

அப்போது மணிமேகலா தெய்வம் அங்கு தோன்றி, அவள் முற்பிறப்பின் கதைகளைக் கூறி மந்திரங்களை உபதேசித்த, ‘மந்திரம் கொடுத்த காதை’ பகுதி இது.

அதோ கீழ்வானில் ஒளி மின்னல் தோன்றியது போல, மணிமேகலா தெய்வம் விண்ணில் தோன்றியது. அத்தேவதை மண்ணில் இறங்கி, கைகளில் மலர்களை ஏந்தி, ஒரு அழகிய பெண் போன்ற தோற்றத்துடன் பதுமப்பீடத்தை சுற்றி வலம் வந்து வணங்கியது.

அப்போது மணிமேகலை அந்த தேவதையை அணுகி, “தெய்வமே, உன் அருளால் என் பிறப்பின் உண்மைகளை அறிந்து கொண்டேன். இன்னுமோர் வினா எனக்குண்டு. என் கணவன் இப்போது எங்குள்ளான்?” என்ற வினாவை எழுப்பினாள்.

மணிமேகலா தெய்வம், அவளுக்கு பதில் சொல்லும் விதமாக, முற்பிறவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு படுத்தியது...

20190819134708158.jpg

“இலக்குமி கேள்.! போன பிறவியில் இலக்குமியான நீயும் உன் கணவரான இராகுலனும் ஒரு பூஞ்சோலையில் காதல் வயப்பட்டு தழுவி, மகிழ்ந்து, புணர்ந்து இருந்த போது, கணவன் மேல் பொய்க்கோபம் கொண்டு ஊடினாய். உன் ஊடலைத் தணிக்க இராகுலன் முற்பட்டான். அப்போது வான் வழியே சாதுசக்கரன் என்ற முனிவன் தர்மச் சக்கரத்தை உருட்டியபடி வந்தான். இரத்தினத்தீவில் இருந்து வந்த அம்முனிவன் அச்சோலைக்குள் வந்தான். அவனை முதலில் கண்ட நீ நாணம் கொண்டு தடுமாறினாய். பின்னர் பார்த்த இராகுலன் “யார் இவன்?” என்று கோபம் கொண்டான். ஆனால், “விண்ணில் இருந்து இறங்கிய மாமுனி இவர். வணங்கத் தக்க இவரை தவறான சொற்களால் கடிந்துப் பேசாதே” என்று நீ அவன் வாயைப் பொத்தினாய்.

‘இலக்குமி கேளாய், இராகுலன் தன்னொடு
புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
இராகுலன் “வந்தோன் யார்?” என வெகுளலும்
விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா
“வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை..................”
(மணிமேகலை : மந்திரம் கொடுத்த காதை: 20-34)

இராகுலனும் தவறை உணர்ந்து வருந்தினான். இருவரும் அவரை வணங்கினீர்கள். பின் இருவரும் அவருக்கு அமுது படைத்து, அருந்த நீரும் தந்தீர்கள். அந்த அறச்செயல் பயன் உன்னைத் தொடர்ந்து வந்திட, உன் பிறவி துயர்கள் அறுந்து போகும்” என்று கூறியது.

20190819134741367.jpg

“உள்மனம் எழுப்பிடும் வினாவுக்கு விடை இன்னும் வரவில்லையே?” என்று மணிமேகலை கலக்கம் கொண்டாள். அவள் மணிமேகலா தெய்வத்தின் முகத்தையே உற்று நோக்கி பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள். தெய்வம் மனம் இரங்கியது. “கந்தசாலி என்னும் உயர்வகை நெல் களர் நிலத்தில் விழுந்து வீணாகலாமோ? அது நல்ல நிலத்தில் அல்லவா, சிறந்த பலனைக் கொடுக்கும். உன் போன்ற தவச்செல்வி துன்பம் கொள்ள வேண்டாம் என்றுதான் நான் உன்னை உவவனத்தில் இருந்து இங்கு கொணர்ந்தேன். உதய குமாரன் உன் மேல் காம எண்ணம் கொண்டு, உனக்கு இடையூறுகளை விளைவிப்பான். இது பிறவி தோறும் வரும் பந்தத்தின் தொடர்ச்சி. இந்த உதயகுமாரனே, முற்பிறவியில் உன் கணவனான இராகுலன்!” என்று உண்மையைக் கூறியது.


இந்த விவரம் அறிந்ததும் பல்வேறு உணர்ச்சிகளால் மணிமேகலை சூழப்பட்டாள்.. பிறவி தோறும் தொடர்ந்து வரும் பந்தம் தன்னைத் துரத்துவதை அவள் பெண்மனம் உணர்ந்து பொங்கியது. ஆனால் தவவலிமை மிக்க அவள் உள்மனம் வலிமை மிக்கது. தொடர்ந்து மணிமேகலா தெய்வம், சென்ற பிறவியில் இலக்குமியாக பிறந்த உனக்கு, தமக்கையராக பிறந்த தாரையும் , வீரையுமே இப்பிறவியில் மாதவியாகவும், சுதமதியாகவும் பிறந்து உன்னோடு வாழ்கின்றனர் என்ற உண்மையையும் உணர்த்தியது.

மணிமேகலை பெருமூச்செறிந்தாள். சலனங்கள் அற்ற, சமதளத்தில் இடையசைத்து நடக்கும் நதியென அவள் உள்ளம் தெளிவானது. இப்பிறவியில் அவள் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி மணிமேகலா தெய்வம் அவளுக்கு உபதேசிக்க துவங்கியது. “நீ இப்போது முற்பிறப்பின் தன்மைகளை அறிந்துக் கொண்டாய். அறத்தின் தோற்றத்தை அறிந்துக் கொண்டாய். இனி பிற சமயங்களின் அறநெறிகளை எல்லாம் நீ கேட்பாய். அப்போது, இவள் இளையவள், வளையணிந்த சிறுபெண் என்று உனக்கு அறநெறிகளைச் சொல்லாத தயங்குவர். எனவே நீ வேறு ஒரு உருவத்தை அடைந்து, உன் பயணத்தைக் தொடரப் போகிறாய். அதற்கான மந்திரங்களையும், வான் வழி செல்ல தேவையான மந்திரங்களையும் இப்போது பெற்றுக் கொள்” என்று கூறி அரிய மந்திரங்களைக் கற்பித்தது.

“அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க' என வாய்மையின் ஓதி
(மணிமேகலை : மந்திரம் கொடுத்த காதை: 75-82)

“மீண்டும் நீ உன் புகார் நகரத்துக்குச் செல், அங்கு மக்களின் பசியைப் போக்க உதவும் மந்திரத்தை இப்போது உனக்கு கற்றுத் தருகிறேன்” என்று கூறி அந்த மந்திரத்தையும் சொல்லித் தந்து, மணிமேகலா தெய்வம் வான்வழி மறைந்தது.

மூன்று மந்திரங்களைப் பெற்றுக் கொண்ட மணிமேகலை தனியாக தீவினைச் சுற்றிப் பார்க்க நடந்தாள்.

இனி, தீவதிலகை என்னும் மற்றும் ஒரு தெய்வப்பெண்ணை இங்குதான் அவள் சந்திக்கப் போகிறாள்!

- தொடரும்