தொடர்கள்
மகேந்திர பல்லவர் - 27 - சுதாங்கன்

20190820103847848.jpg

உதிரிப்பூக்கள் ஸ்பெஷல் ஷோ முடிந்ததும் மகேந்திரனின் தோளில் கையை போட்டபடி, தியேட்டருக்கு வெளியே வந்து தனது காருக்குள் சென்று அமைதியாக உட்கார்ந்தார் எம். ஜி.ஆர்.

மகேந்திரன் பொறுக்க முடியாமல், ‘படத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்களே!’ என்றார். அப்போது மகேந்திரனின் கரம் பற்றி தழுதழுத்த குரலில், ‘மகேந்திரன், ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு இன்றுதான் நான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்’ என்றார் எம். ஜி.ஆர். அவ்வளவுதான்!..கார் போய்விட்டது.

அந்த ஒப்பற்ற மனிதர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருப்பதை உணர முடிந்தாலும், அதன் நிஜப் பொருள் மகேந்திரனுக்கு புரியவில்லை.

‘நான் பார்த்த உன்னதமான உலகத் திரைப்படங்களில் ஒன்று உதிரிப்பூக்கள் என்றார் வீணை மேதையும், புதுமை இயக்குனருமான எஸ்.பாலசந்தர்.
உதிரிப்பூக்கள் வெள்ளி விழாவுக்குத் தலைமை தாங்கிய அவர் ‘இந்த படத்தை நான் ஒன்பது தடவை பார்த்தேன்’ என்றார்.

இன்று முன்னணியில் இருக்கும் தமிழ்ப்பட இயக்குனர்களும் தவறாமல் குறிப்பிட்டு பேசுவதும் இந்த உதிரிப்பூக்கள் படத்தைத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக மலையாள இலக்கிய மேதையான எம்.டி. வாசுதேசன் நாயர் அவர்கள் இன்று வரை உதிரிப்பூகள் படம் குறித்தும் தன்னைக் குறித்தும் தமிழ் இதழ்களுக்குத் தரும் பேட்டிகளில் பெருமையாக குறிப்பிடுவதை தனக்கு கிடைத்த விலை மதிப்பற்ற விருதாக மகேந்திரன் கருதினார்.

அது மட்டுமல்லாமல், அன்றைய ஒன்றுபட்ட சோவியத் ரஷ்ய அரசு உதிரிப்பூக்கள் படத்தை விலைக்கு வாங்கி, ரஷ்யா முழுக்கத் திரையிட்டது. அங்கு மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்ற படம் உதிரிப்பூக்கள்.

ஆனால், உதிரிப்பூக்கள் மாபெரும் வெற்றி கண்டதும், இலக்கிய வட்டம் ஒன்று மகேந்திரனைப் பழித்து ஒரு கடிதம் எழுதியது. அவர்களின் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? "படத்தின் டைட்டிலில் மூலக்கதை அமரர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்று போட்டிருக்கிறாய். அவர் பெயரை வைத்து வியாபாரம் நடத்தி விட்டாய்" என்றது அந்தக் கடிதம்.

கேந்திரனின் அடுத்த வெற்றிப் படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம். மூன்று தேசிய விருதுகள் பெற்றது. இப்படத்தின் கதையோ சில வினாடிகளில் முடிவான ஒன்று என்றால், யாராலும் நம்ப முடியாது. ஆனால், அதுதான் உண்மை. உதிரிப்பூக்கள் மாதிரி பல வருடங்களாக மகேந்திரனுக்குள் உருவான படம் அல்ல நெஞ்சத்தைக் கிள்ளாதே. இதன் கதை பிறந்த கதையைச் சொன்னால் பலராலும் நம்பமுடியாது.

உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள் என்ற மகேந்திரனது இரண்டு படங்களுக்குப் பிறகு தேவி ஃபிலிம்ஸ் நிறுவனம், தங்களுக்கு ஒரு படத்தை இயக்கும்படி மகேந்திரனைக் கேட்டுக் கொண்டது. மிகப்பெரிய படங்களை எடுத்த ஸ்தாபனம் அது. அவர்கள், எப்போதாவது அபூர்வமாகவே படம் எடுக்க நினைப்பார்கள்.

தங்கள் நிறுவனத்துக்காக அவர்கள் கதை கேட்கும் முறையே அலாதியானது. அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்த வீட்டுப் பெண்மணிகள் உட்பட குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் இயக்குனர் கதை சொல்ல வேண்டும். கதை கேட்கும் அத்தனை பேருக்கும் கதை பிடித்து ‘சரி’ என்று சொன்னால்தான், அந்தக் கதை படமாக்கப்படும்.

இந்த உத்தி மகேந்திரனுக்கு புதுமையாக இருந்தது. இன்னொரு வகையில், இது ஆரோக்கியமான முறை என்றும் நினைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் பல வருடங்களாக அவருக்குள் தேங்கி இருந்த ஒரு கதையை அவர்களுக்கு முன்னால் விவரித்தார். எல்லோருக்கும் கதை பிடித்து விட்டது. உடனே, தயாரிப்பு வேலைகளை மளமளவென்று ஆரம்பித்துவிட்டனர்.

மகேந்திரன் சொன்ன கதைப்படி, பல மாநிலங்களுக்குச் சென்று அதற்கான படப்பிடிப்பை நடத்த வேண்டும். அவர்கள் கதை கேட்டு முடிவான பிறகு,
அப்படத்தின் இயக்குனர் என்ன திட்டமிடுகிறாரோ அதில் தேவி ஃபிலிம்ஸ்காரர்கள் தலையிட மாட்டார்கள். அதே மாதிரி, படத்துக்கான செலவைப் பற்றியும் அஞ்ச மாட்டார்கள். படத்தின் கதைக்கேற்ப செலவு செய்வதில் அவர்களுக்குக் கொஞ்சமும் தயக்கம் கிடையாது.

மகேந்திரன் வழக்கம் போல, அந்தக் கதை மாந்தர்களான ஒர் இளம்பெண்ணும், இளைஞனும் தோற்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று மனதுக்குள் சித்திரங்களாக வரைந்து வைத்து இருந்தார். அந்த இருவரும் இதற்கு முன் திரைப்படங்களில் நடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது அவரது பிரதான எண்ணமாக இருந்தது. இதனால் கல்கத்தா, டெல்லி, பெங்களூர் இங்கிருந்தெல்லாம் புதுமுகங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் யாருமே மகேந்திரன் எதிர்பார்த்த மாதிரி இல்லை. அப்போது படத் தயாரிப்பு நிர்வாகி கெளரிசங்கர் ‘நாம் மும்பை போய் புதுமுகங்களைப் பார்க்கலாம்’ என்றார்.

மும்பை சென்றார்கள். அங்கும் பல புதுமுகங்களைப் பார்த்தார்கள். ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் மும்பை சென்ற நோக்கம் நிறைவேறாமல் சென்னை திரும்பக் கூடாது என்பதில் தயாரிப்பு நிர்வாகி கெளரிசங்கர் உறுதியாக இருந்தார். அவர்கள் தங்கியிருந்தது கடற்கரையை ஒட்டிய ஒரு ஹோட்டல். அன்று அதிகாலை தூங்கி எழுந்ததும் கடற்கரையைப் பார்த்த மாதிரி இருந்த தன் அறை கண்ணாடி ஜன்னலைத் திறந்தார் மகேந்திரன். அப்போது அவர் கண்ட காட்சியில் இளம்பெண் ஒருத்தி கடல் அலை ஓரமாகத் தனியாக ஓடிக்கொண்டிருந்தாள். அவள் ஓடுவதைக் கண்டதும், மகேந்திரன் மனதுக்குள் நினைத்தார். 'உடல் ஆரோக்கியத்துக்காக, மன மகிழ்ச்சியோடு இன்று இப்படி ஒடும் பெண் ஒருத்தி, நாளை தனது திருமணத்துக்குப் பிறகு எதற்கெல்லாம் ஓடவேண்டியிருக்கும்?' என்று. அப்போதுதான் அந்தத் திருப்பம் நடந்தது.


(தொடரும்)