ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் கைதாகி 14 நாள் நீதிமன்ற காவலினை திஹார் ஜெயிலில் கழித்தார். தனிமை சிறையில் அடைக்கப்பட்ட ப.சி.-க்கு ஜெயில் அனுபவம் புதுமையானது என்பதால் மிகவும் சோர்ந்து காணப்படுகிறார்.
திஹார் ஜெயிலில் செப்டம்பர் 16 தேதி காலை வழக்கம் போல் தூங்கி எழந்த ப.சி.க்கு அன்று பிறந்தநாள்! காலை உணவிற்காக தனது ஜெயில் செல்லில் இருந்து வெளியே வந்தவருக்கு, திஹார் சிறை அதிகாரிகள் சிலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் பக்கத்து செல்லில் இருக்கும் சிறைக்கைதிகளும் வாழ்த்துக்களை சொன்னார்கள்.
ப.சி. நிதானமாக நடந்து வந்து, சிறிய புன்முறுவலுடன் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, காலை உணவிற்காக சென்றார். ஜெயிலில் பிறந்த நாள் கொண்டாடும் நபர்கள் தங்களின் ஆசைகளை சிறைதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் போது, அது சட்டத்திற்கு உட்பட்ட ஆசை என்றால் அதனை நிறைவேற்றித் தருவார்கள். ப.சி தனது பிறந்த நாளில் குறிப்பாக எந்தவொரு ஆசையையும் சிறைத்துறையினர் வசம் தெரிவிக்கவில்லை. அன்று அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் திஹார் சிறைக்கு வந்திருந்தார். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் ப.சி. அன்று மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாக சிறை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ப.சி. தனது பிறந்த நாள் செய்தியாக, இந்தியாவின் பொருளாதார மந்த நிலை போக ஒரு யோசனையினை தெரிவித்திருக்கிறார். "ஆண்டுக்கு 20 சதவீத ஏற்றுமதி செய்யாமல், எந்த நாடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8 சதவீதம் வளர்ச்சியை அடைய முடியாது. எனவே கடவுள் நாட்டை ஆசிர்வதிப்பாராக" என்றும், தன்னுடைய 74 வயதில் கூட தான் மிக இளமையாக உணர்வதாகவும் அவர் குற்ப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே அமலாக்கத் துறையினர் தன் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டில் விசாரனை நடத்த தானே முன் வந்து சரண் அடைவதாகவும் அதனை நீதிமன்றம் ஏற்று உத்திரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார், ப.சி.
அமலாக்க துறை தற்போது அவரை விசாரிக்கப் போவதில்லை என பதில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, ப.சியின் தானே முன் வந்து சரண் அடையும் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
ப.சி-யின் முன்னாள் தனி செயலாளராக பணியாற்றிய கே.வி.கே .பெருமாள் என்பவருக்கு அமலாக்க பிரிவின் சார்பாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சம்மன் அனுப்பட்டுள்ளது. இதன் மூலம் ப.சி குடும்பம் பெற்ற வெளிநாட்டுப் பண பரிமாற்றம் மற்றும் சொத்து விவரங்களில் முக்கியமான தகவல் கிடைக்கும் என்பது அமலாக்கத்துறையின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு முன்பே, பெருமாளை இரு தடவை பொருளாதார பிரிவினர் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். ப.சி-யின் நிழலாக வலம் வந்த பெருமாள், டெல்லி தமிழ் சங்கத்தின் துணை தலைவராக இருந்தவர். ப.சி-யின் பணபரிமாற்றம், வங்கி கணக்குகளின் விவரம், சொத்துக்கள் குறித்த ரகசியங்கள் அத்தனையும் தனது விரல் நுனியில் வைத்திருப்பவர்.பெருமாளிடம் இருந்து கிடைக்கும் முக்கிய தகவல்களைக் கொண்டு அமலாக்க பிரிவு மற்றும் சிபிஐ தனது விசாரணையை அடுத்தடுத்து ப.சி. மீது மேலும் இறுக்கும் என்று சிபிஐ அதிகாரி தெரிவித்தார்.
கார்த்திக் சிதம்பரத்தின் கணக்கினை ஆடிட் செய்து வந்த அவரது சார்டட் அக்கவுண்டண்ட் எஸ்.பாஸ்கர்ராமனுக்கு அமலாக்க துறையினர் சம்மன் அனுப்பி விசாரித்தனர். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்புடைய பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதில் ப.சி-யின் தொடர்பினை உறுதிபடுத்தும் முக்கிய விவரங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஒ.பி. ஷைனி விசாரணை நடத்தி வந்தார். தற்போது ஒ.பி.ஷைனி பணி ஒய்வு பெறுவதால், இங்கு நடைப்பெற்று கொண்டிருக்கும் ப.சி மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் மற்றொரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் நீதிமன்றத்திற்கு அனுப்ப டெல்லி உயர்நிதிமன்றம் உத்திரவிட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும், ஏர்செல் மேக்சிஸ் வழக்கும் ப.சி-க்கு எதிராக ஒரே சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுவதற்கு தற்போது ஏற்பாடாகி உள்ளது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஏற்கனவே ப.சி. முன் ஜாமீன் உத்திரவாகி உள்ளது. ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சி-க்கு ஜாமீன் எளிதில் கிடைக்குமா என்பது தான், அவரது குடும்பத்தினரின் கவலையாக இருக்கிறது என்கிறார் டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்.
திஹார் ஜெயிலில் ப.சி-யை காங்கிரஸ் பிரமுகர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் கார்த்திக் சிதம்பரத்துடன் சென்று சந்தித்தனர். அப்போது ப.சி. மிகுந்த வருத்தத்தில் இருந்தார் என்றும் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்கிறது என்று வருத்தப்பட்டதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த கவலை அடைவதாக அரைமணி நேரம் சந்திப்பில் ப.சி. மனம் நொந்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
செப்டம்பர் 19 தேதி…. திஹார் சிறையில் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு ப.சி அழைத்து வரப்பட்டார். ப.சி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் தனது கட்சிகாரருக்கு 4 நாட்கள் மட்டுமே நீதிமன்ற காவல் நீட்டிக்க வேண்டும். வருகிற 23 தேதி இதே நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரனை வருவதால் அன்றைய தினம் காவல் நீட்டிப்பு செய்ய வேண்டுமா என்று நீதிமன்றம் தீர்மானித்து கொள்ளலாம். ப.சி. சிறை அறையில் அமர ஒரு நாற்காலி இல்லை… சிறை ஹாலில் இருந்த இரண்டு மூன்று நாற்காலிகளில் ப.சி. சிறிது நேரம் அமர்ந்து இருந்தார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் நாற்காலிகளை அப்புறப்படுத்தி விட்டனர். அதனால் ப.சி. சிறையில் அமர ஒரு நாற்காலி தர நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் என்றும் இரவில் கட்டிலில் தலைக்கு வைத்து படுக்க ப.சிக்கு ஒரு தலையணை தர வேண்டும். ஒரு நாற்காலி, ஒரு தலையணை இல்லாதததால் ப.சி. கடந்த 2 வாரங்களாக முதுகுவலியால் அவஸ்தைப் படுகிறார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.
ப.சி-க்கு ஜெயில் அறையில் ஒரு நாற்காலி போட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க இயலாது. துவக்கத்தில் இருந்தே ப.சி-யின் ஜெயில் அறையில் நாற்காலி கிடையாது. சிறை அறையில் நாற்காலி போட சட்டத்தில் இடமில்லை. அத்துடன் தலையணை கொடுக்கவும் சட்டத்தில் இடமில்லை. ப.சி-க்கு முதுகுவலி என்றால் சிறையில் இருக்கும் மருத்துவமனையில் உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே ப.சி தரப்பு கோரிக்கைகள் ஒரு சிறிய பிரச்சனை தான்.. இதனை பரபரப்பாக ஆக்க வேண்டாம் என சிபிஐ தரப்பில் மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு கேட்டு, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 3 தேதி வரை ப.சிக்கு காவல் நீட்டிப்பும், அவரது உடல்நிலை குறித்து சிறை துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்திரவிட...திஹார் ஜெயிலுக்கு மீண்டும் ப.சி. அனுப்பப்பட்டார்.
நாளுக்கு நாள் இறுகும் விசாரணையும், வழக்குகள் ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து வருவதுமாக இருக்க.. திஹார் ஜெயிலில் முதுகுவலியோடு இருக்கும் ப.சிக்கு, தற்போது தனக்கு வரும் 23ந் தேதியாவது ஜாமீன் கிடைக்குமா என்பதுதான் பில்லியன் டாலர் கவலையாக உள்ளது.
Leave a comment
Upload