பொது
ராஜாதி ராஜ, ராஜகுல திலக.. ராஜ கம்பீர....ராஜ மார்த்தாண்ட... - தில்லைக்கரசி சம்பத்

20190820205345413.png

வழி விடுங்கள்... வழி விடுங்கள்...! வேறு யாரும் இல்லை.. நம்மை ஆளும், இந்த ஜனநாயக நாட்டில் வாழும் மாமன்னர்களாகிய அரசியல்வாதிகள் தாம் இந்த கட்டியத்திற்கு பொருத்தமாக நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கே சென்றாலும் சரி.. வந்தாலும் சரி.. வானத்தில் பறந்தாலும் சரி.. உயர பார்த்து கும்பிடு போட்டுக்கொண்டே சாலை நெடுகிலும் பதாகைகள் வைப்போமைய்யா..! சிகப்பு கம்பளம் வரவேற்பு, எல்லா சாலை வழிகளும் அடைத்து மன்னர்கள் மட்டுமே செல்ல போக்குவரத்து நிறுத்தப்பட்ட சாலைகள் என்று எம் மன்னர்கள் அப்படி தான் வலம் வருவார்கள்...


அட அறிவு கெட்ட பொது மக்களே..! உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது..? அவர்கள் ஜனநாயக நாட்டின் மன்னர்கள்.. பதாகைகள் எனப்படும் பேனர்ஸ் விழுந்து யார் இறந்தால் அதை பற்றி உங்களுக்கென்ன? நம் மன்னர்களின் மரியாதைதான் நமக்கு முக்கியம்...

கடந்த ஒரு வருட காலமாக பதாகைகள் வைப்பதற்கு யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லையாம், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.. அடேங்கப்பா..! உங்கள் அனுமதி கேட்டுதான் எங்கள் மன்னர்களும் தொண்டர்களும் பதாகைகள் வைக்க வேண்டுமா? எவ்வளவு மமதை? அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என உங்களுக்கு தெரியாதா?

ஓ... புரிகிறது.. புரிகிறது..! அனுமதி கேட்காமல் வைத்தால் கூட அவைகளை நீக்காமல் இருந்தோமே..! அது போதாதா? என்று சொல்கிறீர்கள்.. சரி... சரி....


சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் எல்லா காவல் நிலையங்களுக்கும் “பதாகைகள் குறித்த புகார்களை சிஎஸ்ஆரில் (Community service register - CSR) பதிவு செய்யாமல் செக்ஷன் 4-ன் கீழ் அதாவது Tamilnadu open places ( prevention of Disfigurement)Act 1959 இன் கீழ் வழக்கு பதியும்படி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்கள். இந்த சட்டத்தின்படி பொது இடமோ அல்லது தனியாரோ Disfigurement செய்தால் சட்டப்படி குற்றமாக எடுத்துக் கொள்ளப்பட்டு 3 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆனால் இதனை யாரும் முறையாக செயல் படுத்தவில்லை என்பதை ஒரு சிறு பெண்ணின் மரணம் நமக்கு உணர்த்தியது.

போன வாரம் சுபஸ்ரீ என்கிற பெண் மீது பேனர் ஒன்று சாய்ந்ததில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழ, பின்னால் வந்த லாரி அவர் மேல் ஏறியதில் படுகாயமடைந்து இறந்து போனார்.. இப்போது லாரி ஓட்டுனரை கைது செய்திருக்கிறார்கள். மக்களின் கோபத்திற்கு பிறகு மெதுவாக யோசித்து, பின் அந்த பதாகை வைத்ததற்காக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் மேல் இரு வழக்குகள் பதிந்து இருக்கிறார்கள்.. அதில் ஒன்று “கொலையாகாத மரணம்” எனும் சட்டப்பிரிவு. அக்குற்றத்திற்கு அபராதத்துடன் மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அவ்வளவே!


பல மாதங்களுக்கு முன் கோயம்புத்தூரில் இதே போன்ற பதாகையால் ஒரு இளைஞர் மரணமடைந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

20190820205423106.jpg

டிராஃபிக் ராமசாமியும் ஒரு புகார் அளித்துள்ளார்... யார் மேல் தெரியுமா? பதாகைகளை நட்ட குறிப்பிட்ட கட்சி தொண்டர்கள், அச்செயலை தடுக்காத மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் என எல்லார் மேலும் புகார் அளித்துள்ளார். அவரை பொறுத்தவரை சுபஸ்ரீயை கொன்றது இவர்கள் அனைவரும்தான்.

இதற்கிடையில், பேனர் கலாச்சாரத்திலிருந்து தங்கள் கட்சி வெளியேறும் விதமாக இனி ஃபிளக்ஸ் போர்டு, கட்அவுட் வைக்க மாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது திமுக. ஆனால், அதே நாளில் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக கட்டப்பட்டிருந்த மதிமுக கொடிகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் செயல் பொறியாளரை மதிமுகவினர் தாக்கியதால், அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கின்றனர். நடப்பு மன்னர்களாக அதிமுக திகழ்வதால், எவன் என்ன சொன்னால் எனக்கென்ன என்பதற்கேற்ப தமிழகத்தில் ஆங்காங்கே கட்சி பேனர்களை வைத்து எப்போதும் போல் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஒரு மரணம் பத்தாது என்று தாம்பரம் அருகே சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்ததில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் இறந்தும் போனார்....

நம் மின்சாரத்துறை அமைச்சரும், “இதற்கு மின்வாரியம் பொறுப்பில்லை.. நன்றாக இருந்த கம்பம் லாரி மோதியதால் சேதமடைந்து பின் கீழே விழுந்தது” என்று பொறுப்பாக கூறியும், அந்தப் பகுதி மக்கள் “அடக்கடவுளே..! லாரி வரவே முடியாத முட்டுச்சந்தின் கடைசியில் இருந்த மின்கம்பத்தின் மேல் லாரி எப்படி இடித்திருக்க முடியும்..? விழுந்த மின்கம்பத்தையும் சேர்த்து பல மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதாக பல முறை புகாரளித்தும் நடவெடிக்கை எடுக்காததால் இவர் இறந்து போனார்” என்று சொல்கின்றனர்...


அதான் அமைச்சரே சொல்லிவிட்டாரே..! “மகேசன் வாக்கு மக்கள் வாக்கு...” என வாயை மூடிக்கொண்டு போக வேண்டியது தானே..


பழமொழி மாற்றி எல்லாம் சொல்லவில்லை. இதுவே இந்த காலத்திற்கேற்ப சரியான பழமொழி...

“வூட்ல சொல்லிக்கினு வந்தியா சாவுகிராக்கி.!” என்பது போல நாமெல்லாம் சாலையில் கால் வைத்தாலே ஏதாவது விழுந்து சாவதற்கு தானே இருக்கிறோம்.. இதை எல்லாம் பெரிய விஷயம் என்று புகார் அளிக்க வந்து விட்டார்கள்..

அரசு, அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் எல்லோரும் Public servants என்று பொதுவாக அழைக்கப்படுவார்கள். அதாவது மக்களுக்கு ஊழியம் செய்ய வந்தவர்கள் என பொருள் படும்... ஆனால் இக்காலத்தில் “public is your servant, highness..!” என்று மாற்றி வைத்தால் பொருத்தமாக இருப்பது மட்டுமல்ல, நம்மை ஆளும் மன்னர்கள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சியும் அடைவார்கள்...

ஒரு கதை ஞாபகம் வருகிறது... திருடன் ஒருவன் திருடிய குற்றத்திற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்... நீதிபதி கேட்டார், “முனுசாமி....! நீ அந்த வீட்டில் புகுந்து திருடியது ஒரு பக்கம் இருக்கட்டும்... ஆனால், கிளம்பும் போது அந்த வீட்டுக்காரரின் தலையில் ஏன் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு சென்றாய்..?”


அதற்கு அவன், “வெறும் திருடுறது மட்டும் ஒரு மனுசனுக்கு சந்தோஷத்தை தராதே எசமான்..!” என்று கூறி ஈ.. என்று சிரித்தானாம்...

அது போல வானுயர்ந்த அதிகாரம், பதவி சுகம்... அது பத்தாதென்று ஊழல், லஞ்சம், சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்கள் சேர்ப்பது என சகல விஷயங்களிலும் புகுந்து விளையாடி பத்து தலைமுறைக்கு சொத்துக்கள் சேர்த்து வைத்தாலும் இம்மாதிரியான புகழ்ச்சிகளும் அவர்களுக்கு தேவைப்படும் அல்லவா!!! அவர்கள்தாம் நம் மன்னர்களாயிற்றே..!

தஞ்சை பெரிய கோயிலில் அதைக் கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழனுக்கு கைக்கூப்பிய நிலையில் ஒரு சிலை உள்ளது... அதை அவரே செய்யச் சொல்லி வைத்தாக கூறுகிறார்கள்... எப்பேற்பட்ட மன்னன்..! அதோ பார் காக்கா என்றோ, கண்ணாடி அணிந்து புத்தகத்தை படிப்பது போன்றோ ஹாய் சொல்வது, Bye சொல்வது, ஆசிர்வதிப்பது என்றெல்லாம் விதவிதமான நிலைகளில் சிலைகளை வடிக்காமல் இறைவனை நோக்கி கைகூப்பி அடக்கத்துடன் நிற்கிறார். நினைத்திருந்தால்... சர்வாதிகாரியாக திகழ்ந்திருக்கக் கூடிய சர்வ வல்லமை உடைய அரசர் கைகூப்பி ஜனநாயகத்தின் காவலராய் நிற்கிறார்.

ஆனால், இன்று ஜனநாயகத்தின் மன்னர்கள், சர்வாதிகாரத்தின் சின்னங்களாக நின்று கொண்டிருக்கின்றனர்...

ரொம்ப வருடங்களுக்கு முன் படித்த ஜோக்....


ஹீரோ வில்லனைப்பார்த்து சொல்லுவான்...

“நீ என் பிசினெஸ் கூட்டாளியை எங்கிட்ட இருந்து பிரிச்சப்ப பொறுத்துக்கிட்டேன்..........

என்னோட வயல்ல நெருப்பு வச்சு அழிச்சத பொறுத்துக்கிட்டேன்.......

என் தங்கச்சி வாழ்க்கையை நாசமாக்கினதையும் பொறுத்துக்கிட்டேன்..........

எங்கண்ணன் மேல அவரு செய்யாத கொலைக்கு கொலைக்காரன்னு பழி போட்டு ஜெயில்ல போட செஞ்சத பொறுத்துக்கிட்டேன்.............

என் புள்ளைக்கு திருட்டு பட்டம் கொடுத்து கம்பத்துல கட்டி அடியோ அடினு அடிச்சத கூட பொறுத்துக்கிட்டேன்...........

என் கண்ணு முன்னாடியே என் பொண்டாட்டியை..... சரி.. அதையும் பொறுத்துக்கிட்டேன்.. ..........

ஆனா, இதுக்கு மேல நீ என்னோட வழியில வந்தேன்னு வச்சுக்கோ, நான் சும்மா இருக்க மாட்டேன்டா.........!!!!”

மக்கள் இப்போது இந்த ஹீரோ நிலைமையில் தான் இருக்கின்றனர்...

அரசியல்வாதிகளுடன் சண்டை போட்டு ஜெயிக்க முடியுமா? நடக்கும் ஒவ்வொரு அக்கிரமங்களுக்கும் ஒரு பத்து நாட்கள் வாய் கிழிய வசனம் மட்டுமே பேசிக்கொண்டு அடுத்த பிரச்சினை வந்தவுடன், இதை மறந்து அடுத்ததை பிடித்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அரசியல்வாதிகளும் இதை நன்றாக புரிந்து கொண்டிருப்பதால் அழுகி போன வாழைப்பழங்களை அவ்வபோது வீசி எறிய, அதை போட்டி போட்டு பொறுக்கி தின்று கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து, அவர்கள் கை தட்டி சிரித்து கொண்டிருக்கிறார்கள்...

அடுத்தது என்ன என்கிறீர்களா..? தீபாவளி வருகிறது.. நடிகர்களின் புதுப் படங்கள் வெளியாகிறது.. அப்புறம் என்ன..? சந்தோஷமாக இருக்க வேண்டியது தான்..!!