தி.மு.க அரசியல் செய்ய இரண்டு விஷயங்களை எப்போதும் கையில் எடுக்கும். ஓன்று மாநில சுயாட்சி, இரண்டாவது இந்தி எதிர்ப்பு. இந்தி எதிர்ப்பை அண்ணா வலுவான ஆதாரத்துடன் மேடையில் பேசினார். நாடாளுமன்றத்திலும் வாதாடினார். அப்போது அவருக்கு அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்தனர்.
அதனால்தான் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்கும் என்றும், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்றும் பாராளுமன்றத்தில் உறுதி மொழி தந்தார். இது அண்ணாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
ஆனாலும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் இன்றைய பாரதிய ஜனதா கட்சி தமிழ் மீது கரிசனம் காட்டவில்லை. மணியார்டர் பாரத்தில் தமிழை சேர்க்கக்கூட காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
இந்தி திணிப்பு - சரியாக சொல்ல வேண்டும் என்றால் ராஜீவ் காந்தி காலத்தில்தான் மீண்டும் தலை தூக்கியது. ஆனால் அது கமுக்கமாக நடந்தது. செப்டம்பர் மாதம் பதினான்காம் தேதி இந்தி தினம் கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் அது கொஞ்சம் விமரிசையாக கொண்டாட உத்திரவிடப்பட்டது. இந்தி பேசாத மாநில, மத்திய அரசு ஊழியர்கள், இந்தி படித்தால் அவர்களுக்கு விசேஷ சம்பள உயர்வு. அவர்களுக்கு இந்தி கற்றுத் தர இந்தி ஆசிரியர், பதவி உயர்வில் முன்னுரிமை என்று சலுகைகளை ராஜீவ் அரசு வாரி வழங்கியது. இது தவிர பெயர் பலகையில் தினம் ஓரு இந்தி வார்த்தையை எழுதுவதும் நடந்தது. இப்படித்தான் ராஜீவ் காந்தி ஆட்சியில் இந்தி மொழி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத எல்ல மாநிலங்களிலும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நன்றாக உட்கார்ந்து இருந்தது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியார்களுக்கான கேந்திரிய வித்தியாலாயவில் இந்தி முக்கிய பாடமானது. அதன் பிறகு தனியார் நடத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் தாய் மொழி இரண்டாம் இடத்துக்கு தள்ளபட்டது. அங்கும் இந்தியின் ஆதிக்க கொடி உயரே பறக்கிறது. இது தி.மு.க -வினர் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இது தவிர இந்திபிராச்சார சபா முலம் ஆண்டுக்கு ஐந்து லட்சம் தமிழர்கள் இந்தி படித்து வருகிறார்கள்.
இந்தஆண்டு இந்தி தினமான செப்டம்பர் 14 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இந்தியாவின் அடையாளமாக ஒரேயொரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழி தான் அந்த அடையாளத்தை கொடுக்கும்" என்று சொன்னார்.
உள்துறை அமைச்சரின் இத்தகைய இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து, 20-ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்று 16-ம் தேதி திமுக-வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததுமே செய்தியாளர்களிடம் அறிவித்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அப்போதும் பாரதிய ஜனதாவின் இந்தி திணிப்பை வன்மையாக கண்டித்தார். ஒத்த கட்சிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பதாகவும் சொன்னார்.
பேராட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஸ்டாலினிடம் பேச விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்தார். மாலையில் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர் பாலு சந்திக்க செல்கின்றனர்.
அதே சமயம் பதினான்காம் தேதி அமித்ஷா தான் பேசியதற்கு பதினெட்டாம் தேதி விளக்க உரை தருகிறார்.
"இந்தி தினத்தன்று நான்கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளபட்டுள்ளது. நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்துதான் வருகிறேன். நான்இந்திய மொழிகளை வலிமைபடுத்த வேண்டும் என்றுதான் கூறினேன். மேலும் ஒரு குழந்தை தனது தாய் மொழியில் படித்தால்தான் சிறப்பாக படிக்க முடியும். தாய் மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்று தான் கூறினேன். மொழிகளை வலிமை படுத்த தவறினால், ஆஸ்திரேலியா நீயூசிலாந்து போன்று நமது மொழி எது என தெரியாமலே போய்விடும்!" என்று விளக்கமளித்தார் அமித்ஷா.
ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தி.முக. தலைவர் ஸ்டாலின், ராஜ்பவன் வாசலில் நிருபர்களை சந்திக்காமல் அறிவாலயம் வந்து சந்தித்தார்.
அப்போது அவர் "அமித்ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளபட்டுள்ளது என்று ஆளுநர் என்னிடம் கூறினார். மத்திய அரசின் செய்தி தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு நகலை என்னிடம் தந்ததுடன், அமித்ஷா என்ன பேசினார் என்பதையும் என்னிடம் விளக்கி இந்தி திணிக்கப்படாது என்றும் உறுதிபட சொன்னார். 'நான் மத்திய அரசின் பிரதிநிதியாக உங்களுக்கு இந்த உத்திரவதத்தை தருகிறேன். மத்திய அரசு உங்களிடம் சொல்லச் சொன்னதை தான் சொல்கிறேன்' என்றார் ஆளுநர் என்னிடம். எனவே தி.மு.க நடத்த இருந்த மாநிலம் தழுவிய போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றது!" என்று அறிவித்தார் ஸ்டாலின்.
ஆனால் உண்மையில் ராஜ்பவனில் நடந்தது கவர்னரின் மறைமுக மிரட்டல் படலம் தான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். தனது அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம், "தேவையில்லாமல் மத்திய அரசை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்" என்று எச்சரித்தாராம் ஆளுநர். இன்று இந்திய நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமானதாக இருக்கிறது.... ஏற்கனவே காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தேக்க நிலை, பயங்கரவாதம் என பல பிரச்னைகள் வாட்டி வதைக்கும்போது, மாநில தலைவலிகளாலும் இடையூறுகள் ஏற்படுமாயின்அதனை மோடி அரசு கட்டாயம் ரசிக்காது என ஸ்டாலினுக்கு புரிகிறார் போல எடுத்துச் சொல்லப்பட்டதாம்!
தவிர, தி.மு.க-வின் அறக்கட்டளை பற்றிய சில விவகாரம் பற்றிய சில வில்லங்க விவரங்களை சொல்லி 'உங்கள் சகோதரர் அழகிரி உங்கள் மீது புகார் தர இருக்கிறார்' என்றாராம் ஆளுநர்!
அது மட்டுமின்றி, அலை கற்றை ஊழல் வழக்கை ப.சிதம்பரம் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றியதையும் நினைவு படுத்தினாராம் ஆளுநர். ஸ்டாலினிடம் இந்த விவரங்களை சொல்லும்போது டி.ஆர்.பாலு வெளியே இருத்தி வைக்கப்பட்டாராம்! ஆளுநர் ஆங்கிலத்தில் சொன்னதை ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் ஸ்டாலினிடம் தமிழில் சொன்னராம். மேலும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் பேச இருப்பதையும் ஆளுநர் சுட்டிகாட்டி, 'அதுவரை பிரதமர் பற்றிய விமர்சனங்களை தள்ளி வையுங்கள்' என்றும் யோசனை கூறப்பட்டதாம்!
சமுக வலை தளங்களில் எப்படியோ 'ஆளுநர் ஸ்டாலினை மிரட்டினார்' என்ற செய்தி வைரலானதும் டி.ஆர். பாலு நிருபர்களை அழைத்து 'ஆளுநர் வற்புறத்தலால் எல்லாம் இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை' என்று அவசர அவசரமாக மறுத்தார்.
எது எப்படியோ, தி.மு.க. தற்போதைக்கு அமித்ஷா அளித்த விளக்கம் தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கொண்டாடுகிறது.
உண்மையில் நடந்தது என்ன என்று தெரிந்த ஆளும் அதிமுக நக்கலாக சிரிக்கிறது.
இதன் நடுவே ரஜனிகாந்த் தனது கருத்தாக "எந்த ஒரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது நல்லது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல...வேறு எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தி மொழியை திணித்தால் யாரும் எற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல.. தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக் கொள்ளாது"என்று கருத்து தெரிவித்து இருந்தார். ஆக ரஜினி தலையிட்டு இந்த விஷயத்தில் கருத்து சொன்னதால்தான் அமித்ஷா விளக்கம் அளித்தார் என குதூகலிக்கிறது ரஜினி தரப்பு!
அச்சா?!
Leave a comment
Upload