ஹாய் மதன் கேள்விகளுக்கு
www.vikatakavi.in/haimadhan
ராஜேந்திரன், கோவை.
கமல் ஏன் இந்தியை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்? அவர் அரசியல் எடுபடாததனாலா?
இந்தி திணிப்பை எதிர்ப்பதை ‘தொங்குகிறார்’ என்று நீங்கள் சொன்னால் தமிழ் நாட்டில் உள்ள கோடான கோடி மக்களும் தான் தொங்குகிறார்கள் என்பீர்களா? கமலுக்கு பிடிவாதம் அதிகம். அரசியலில் படிப்படியாக முன்னேறுவார் என்பது என் நம்பிக்கை.
கே.ஆர். உதயகுமார், சென்னை-1.
பேனர் கலாச்சாரம் வேறு நாடுகளில் உள்ளதா?
நான் எல்லா நாடுகளுக்கும் போய் பார்த்தது இல்லையே! ஆனால் மற்ற நாடுகளில் பேனர் கலாச்சாரம் இருப்பதாகத் தெரியவில்லை. நமக்குத் தெரியாத ஏதாவது ஆப்பிரிக்க நாட்டில் இருக்குமோ என்னவோ!
ராஜகோபலன், டெல்லி.
அயோத்தி பிரச்சனை பற்றி உங்கள் கருத்து..?
மோடி கருத்து தான். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்போம்!
கே.ஆர். உதயகுமார், சென்னை-1.
தற்போதைய நகைச்சுவை எழுத்தாளர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்?
என்னை கிரேஸியாக நகைச்சுவையில் கவர்ந்தவர்தான் அண்மையில் நம்மை விட்டுப் போய்விட்டாரே!
ஹாய் மதன் கேள்விகளுக்கு
www.vikatakavi.in/haimadhan
ராதா, பெங்களூரு.
பரிட்சை என்றால் பயம் ஏன்?
எனக்கு ரொம்ப பயம். படித்தால் தானே?! எப்படியோ கடைசி நாளில் படித்து 35 மார்க் வாங்கி பாஸ் செய்து விடுவேன்!
ராகவன், சென்னை.
பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிப்பதனால் என்ன பயன்?
ஒரு பயனும் இல்லை. இந்தி மட்டும் தெரிந்த வெளி மாநிலத்தவர்களை குழப்புவது மட்டும்தான் மிச்சம்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14.
எவருடைய சிலேடை பேச்சுப் பிடிக்கும்?
கி.வா.ஜ.!
கே.ஆர். உதயகுமார், சென்னை-1.
விஞ்ஞான வசதி அவ்வளவாக இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா அதன் பிறகு தற்போதுள்ள விஞ்ஞான வசதிக்கு மனிதர்களை அனுப்ப முயற்சிக்காதது ஏன்?
அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி முடித்தாகிவிட்டது. அவர்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றாகிவிட்டது. அடுத்ததாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஐடியாவில் இருக்கிறது அமெரிக்கா. பயணமே பல மாதங்கள் ஆகும்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14.
தங்கள் பார்வையில் தற்போதைய நாளைய இயக்குநர் நிகழ்ச்சி தரம்.
ஸாரி. நான் பார்க்கவில்லை.
மாதவன், சென்னை.
இந்தி படத்தில் சொந்த குரலில் பேசி நடித்த கமல்ஹாசன் இந்தியை எதிர்ப்பது அரசியல் லாபத்திற்கு தானே?
பேசத் தெரிவது வேறு. எதிர்ப்பது வேறு!
கார்த்திக், சென்னை.
‘ஒத்த செருப்பு’ அனுபவம் எப்படி?
அந்தப் படம் பற்றி Behind Woods யூ டியூப் சேனலில் விமரிசனம் செய்தேனே! அது ஒரு உலகப் புரட்சி. ஒருவரையே படம் முழுக்க பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு போரடிக்கும்? அப்படி இல்லாமல் விறுவிறுப்பாக ‘ஒத்த செருப்பை’ எடுத்த பார்த்திபனை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த துணிச்சல் வேறு யாருக்கும் வராது என்று நினைக்கிறேன்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14.
எவருடைய விரைவான (அபாரமான) வளர்ச்சி தங்களை மிகவும் ஆச்சா்யப்படுத்தியது?
ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வளர்ச்சி. ஆனால், அது ஆச்சரியத்தைத் தரவில்லை!
மா.உலகநாதன். திருநீலக்குடி.
மகாராஷ்ட்ராவில் ஒரு தாய் 20-ஆவது முறை கர்ப்பமாகியிருக்கிறாறாமே?
நம் நாடு ரொம்ப முன்னேறி இருப்பது கர்ப்ப விஷயத்தில்தான். 20 வயதில் முதல் கர்ப்பமாகி 40 வயதுக்கு மேல் மெனோபாஸ் வரும் வரை 25 குழந்தைகள் கூட பெற்றுக் கொள்ளலாம். ரெட்டைக் குழந்தைகளும் பிறக்கலாம் இல்லையா? ஆமாம்? கணவர் வேலைக்கு போவதில்லையா?
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14.
“வெள்ளை அறிக்கை” “வெள்ளை அறிக்கை” என்று அரசியல்வாதிகள், அவ்வபொழுது கூவுகின்றனரே அப்படி என்னதான் ரகசியம் இருக்கிறது அந்த “வெள்ளை அறிக்கையில்?
வெள்ளை அறிக்கையில் எல்லாம் சொல்ல வேண்டும். பொய் சொல்லக் கூடாது. அதான் ரகசியம்!
மா.உலகநாதன். திருநீலக்குடி.
பி.ஜே.பி.யின் 100 நாள் சாதனையை எப்படிப் பாராட்டுவீர்கள்?
மெஜாரிட்டியுடன் தானே அமர்ந்திருக்கிறார்கள்? நூறு நாள் சாதனையை நூறு நாள் சாதனை என்று பாராட்ட வேண்டியதுதான்!
சுதன், திருநெல்வேலி.
நான் வாசிக்க விரும்பும் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கித் தருவார் என் மனைவி. ஆனால் நான் வீட்டில் 'ஹாயாக' உட்கார்ந்து வாசிப்பதைப் பார்த்தால் அவருக்குக் கோபம் வருகிறது. இது எதனால்? உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?
முதலில் எனக்கு வேண்டிய புத்தகங்களை நானேதான் வாங்கி படிப்பேன். உங்களுக்கு மனைவி வாங்கித் தருகிறார் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நான் என் மனைவி இரவில் தூங்கிய பிறகு தான் படிக்கவே ஆரம்பிப்பேன். பகல் நேரங்களில் அவருக்குப் பதில் சொல்வதிலேயே நேரம் போய்விடும்!
மா.உலகநாதன். திருநீலக்குடி.
பேனர் விவகாரத்தில் குற்றவாளியை விட்டுவிட்டு அச்சகத்தாரை கைது செய்தது நியாயமா?
யாரோ எடுத்த ப்ளூ ஃபிலிமை தியேட்டரில் காட்டினால் தியேட்டர் ஓனரையும் தான் அரெஸ்ட் செய்வார்கள்.
ஹாய் மதன் கேள்விகளுக்கு
www.vikatakavi.in/haimadhan
Leave a comment
Upload