
ஏம்பா தாஹீர் சோர்வா இருக்கே? நோன்பு வச்சிருக்கிறதாலயா? என கேட்டார் வைத்தாபவன் சைவ உணவகத்தின் முதலாளி கோபால்.
அபுதாஹீர். ஐந்து வேளையும் தொழுவும் முஃமின் (இறையச்சம் உடையவர்), வங்கிப் பணியிலிருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றவர். சில பகல் பொழுதுகளில் உணவகத்திற்கு வந்தமர்ந்து, கோபாலனிடம் பேசிவிட்டுச் செல்வார். ஊரிலே நெருங்கிய நண்பன் என்றால் அவருக்கு வைத்தாபவன் கோபால் மட்டும்தான்.
வேறு வேற மதமாக இருந்தாலும் வேளைத்தவறாத அனுஷ்டானம், பக்தி, அறம், பாவம், ஹலால் (நேர்மையான), ஹராம் (நேர்மையற்ற) போன்ற செயல்களில் ஒத்தவர்கள் இவர்கள். மார்க்கம் வேறாக இருந்தாலும் வாழ்க்கையை முறைப்படி வாழ்வதுதான் மார்க்கத்தின் நோக்கம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்த பள்ளிக் காலத்துதோழர்கள்.
இல்லபா கோபால், நோன்பு கஞ்சிக்கான எனது முறைக்கு பள்ளிவாசலுக்கு தொகை கொடுத்தேன் அவர்கள் வாங்க மறுத்திட்டாங்க. அதுதான் வருத்தமாக இருக்கு. வருடா வருடம் செய்து வருகிறேன் இந்த முறை செய்ய முடியலைன்னா எப்படி? மனசுக்கு சங்கடமா இருக்கு என்றார்.
ஏன் அதிலென்ன தாஹீர் பிரச்சினை? அவர்கள் ஏன் வாங்க மறுக்கிறாங்க? கேட்டார் கோபால்.
எங்க சமூதாயத்திலே வட்டி மறுக்கப் பட்டிருப்பதுதான் உனக்கு தெரியுமே என்றார்.
ஆமாம் ஆதனால என்ன?
நான் வங்கியிலே வேலை செய்தபோது இதேபோன்ற பிரச்சினை அப்போதும் வந்தது. அதனாலேதான் பதவி உயர்வு என்னைத் தேடி வந்தபோதும் வேண்டாமுன்னு மறுத்து கிளார்க் நிலையிலேயே இருந்து ஓய்வும் பெற்றுவிட்டேன்.
இப்ப என்ன பிரச்சினை? அதான் ஓய்வு பெற்று விட்டாயே ? இப்ப தாரளமாக கொடுக்கலாம்தானே என்றார் கோபால்.
அதிலேதான்பா பிரச்சினை. முன்னாலேயாவது அந்த வங்கியிலே உழைத்தீர்கள் வந்த வருமானத்திலேயிருந்து கொடுத்தீங்க அது ஹலால். இப்ப வாங்குகின்றது ஓய்வூதியக் காசு. அது முழுக்க முழுக்க வங்கியில் யாருடைய தொகையிலோ வரும் வட்டியால் வளர்ந்தப் பணம்தானே அது ஹராம் என்று மறுக்கிறாங்க.
ஓய்வூதியம் வாங்குகிறதும் உன்னோட பணம்தானே, அதிலென்ன இருக்கு? அதை அழுத்தமாகச் சொல்லி நீ அவர்களுக்கு புரியவைக்க வேண்டியதுதானே தாஹீர்.
பிடிவாதமாக கொடுத்து முறையாக நோன்பு வச்சு இருக்கிறவர்கள், மற்றும் பள்ளியின் ஆலிம்களுக்கு (குருமார்கள்) நாளைய மறுமைக்கு ஆபத்தாக்கீடாதிங்க ஹராமான வழியில் வந்த கஞ்சியை சாப்பிடுபவர்களின் இபாதத்துக்களை (வேண்டுதல்களை) அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்ளமாட்டான்னு சொல்லி மறுத்திட்டாங்க.
அப்போ நீ வாங்குகிற ஓய்வூதியம் ஹலாலா? ஹராமா? என்ன சொல்றாங்க?
இப்படி ஒரு சந்தேகம் இருந்தாலே அதை தவிர்த்திடும்னுதான் இசுலாம் சொல்லுது என்றார் தாஹிர்.
ப்பா…… என்று ஆச்சரியப்பட்ட கோபால்,
இஸ்லாம் என்றால் ஐந்து வேளை தொழுவது, நோன்பு வைப்பது, ஸகாத் கொடுப்பது, ஹஜ்ஜு செய்வது , குர்ஆன் ஓதுவது மட்டும்தான் என்று நாங்க இதுநாள் வரை நினைத்து கொண்டிருக்கிறோம். இசுலாத்தின் முக்கியமான அம்சமே வாழ்க்கைக்கான நல்ல ஒழுக்கங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும், நல்ல குணங்களையும் ஒரு மனிதன் ஏற்படுத்தி கொள்வதுதான்னு இப்போ புரியது தாஹீர்.
ஹராமான வழியில் கிடைத்ததை சாப்பிடுவதை விட நெருப்பை அள்ளிப் போட்டு தின்பது மேலானது என்று அல்குர்ஆன் சொல்கிறது என்ற வருத்தமாக சொன்ன தாஹீர்,
“கோபால்! எனது துஆக்கள் அல்லாஹ்விடத்தில் கபூலாக (ஏற்றுக் கொள்ளுதல்) வேண்டும். நான் ஒரிடத்தில் இனி வேலைசெய்து பொருள் ஈட்டினால் மட்டுமே கஞ்சிக்கு தொகை அளிக்க முடியும்.
ஆகையால் நீ ஏதாவது எனக்குத் தகுந்தவேலைக்கு ஏற்பாடு செய் என்ற தாஹீர் இபாதத்சாலியாக (இறை நேசமுடையவனாக) இருந்து நான் இந்த உலகை விட்டுப்போகணும் என்றார் தாஹிர் தன் காதைப் பிடித்தபடி.
வேற எங்கேயும் சென்று நீ ஒன்றும் வேலை செய்ய வேண்டாம். இங்கேயே நம்ம கடை கல்லாவிலே உட்காரு. எல்லாம் அல்லாஹுதஆலா
பார்த்துக்குவான் என்றார் கோபால், இரு கைகளை கன்னதில் போட்டபடி.
மூச்சு உள்ள வரை உடலில் ஹராமான உணவு கலந்து விடாமல் ஹலாலையும், ஹராத்தையும் பிரித்து அறிய கூடிய பக்குவத்தை இறைவன் தமக்கு தருவானாக என்று இருவருமே தமது கடவுளை வேண்டிநின்றனர். ஆமீன்.

Leave a comment
Upload