தொடர்கள்
நொறுக்ஸ்
மெட்ரோ ரயில் வடிவில் அரசு பள்ளி... - மாலாஸ்ரீ

2020908163049750.jpg

சென்னை எண்ணூர், அன்னை சிவகாமி நகரில் கடந்த பல ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் இப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு, அதன் கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
இதையடுத்து மாநகராட்சி நிதி மற்றும் பலரின் நன்கொடைகள் மூலமாக அப்பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அப்பள்ளியின் மொத்த கட்டிட வடிவமைப்பை மெட்ரோ ரயில் போல் மாற்றி அமைத்துள்ளனர். இதனால் அப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், மெட்ரோ ரயில் பெட்டிகளில் பயணிகள் ஏறி இறங்குவதை போல், அதில் உள்ள வகுப்பறைகளுக்கு ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். அங்கு வரும் பொதுமக்களும், ‘தங்களது பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவை விட்டிருக்கிறார்களோ?’ என ஆச்சரியத்தில் வாய் பிளக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கூறுகையில், ‘எங்கள் பள்ளியை மெட்ரோ ரயில் வடிவில் மாற்றியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். நாங்கள் தினமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை போல் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் கூடுதல் மாணவர்களும் இப்பள்ளியில் இணைந்து வருகின்றனர்’ என குதூகலத்துடன் தெரிவித்தனர்.