
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் வகையில், நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 34 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக சுமார் 2 கோடி கார்டுதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தை அமல்படுத்த வசதியாக, தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ‘பாயின்ட் ஆப் சேல்ஸ்’ இயந்திரத்துக்கு மாற்றாக, ‘பயோமெட்ரிக்’ எனும் கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு, கைரேகை வைத்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு இடங்களில் கைரேகை பதிவு மெஷின் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ரேஷன் கடைகளில் ‘குடும்பத்தில் ஒருவரின் கைரேகை பதிவு ஒத்துவரவில்லை என்றால், வீட்டில் உள்ள வேறு யாரையாவது கூட்டி வாருங்கள்’ எனக் கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு அலைச்சலுடன், கடும் மனஉளைச்சலும் ஏற்படுவதாக தமிழக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இந்நிலையில், அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கும் கடந்த 8-ம் தேதி மாலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் திடீரென ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ‘ரேஷன் கடைகளில், ஒருவரின் கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக, யாருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக்கூடாது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்’ என அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அந்த உத்தரவில், ‘ரேஷன் பொருட்கள் வழங்க கைரேகை அங்கீகாரம் முதல் நிலையாகும். அடுத்து ஸ்கேன் முறையில் தரலாம். அது முடியாதபோது... ஆதார் (ஓடிபி) முறை, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, ரேஷன் அட்டைதாரர் பதிவு செய்த செல்போனுக்கு ஓடிபி அனுப்பும் முறை, மின்னணு ரேஷன் அட்டையை (ஸ்மார்ட் கார்டு) ஸ்கேன் செய்யும் முறை ஆகிய ஏதேனும் ஒன்றை பின்பற்றி, கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது ஒரு பெரிய தீர்வு!

Leave a comment
Upload