
ஆசிய ஜோதி - ஜவஹர்லால் நேரு...
இந்திய விடுதலைப்போரில் முன்னணியில் நின்ற தலைவர்களில் முக்கியமானவர், விடுதலை பெற்ற இந்தியாவை முன்னேற்ற பாதையில் வழி நடத்த உழைத்தவர்களில் முதன்மையானவர் பண்டித ஜவஹர்லால் நேரு. இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாய் வாழ்ந்த மக்களுக்கு, இந்நாட்டின் பெருமையை உணர்த்தி, அவர்களுக்கு கல்வி தந்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வளரும் நாடுகளின் வரிசையில் இந்தியாவை நிறுத்த அடிக்கல்லை நாட்டியவர் நேரு.. அவர் சிறந்த படிப்பாளி, உயர்ந்த சிந்தனைகளை உலகுக்கு விட்டுச் சென்றவர்.
நேரு 14.11.1889 அன்று அலகாபாத்தில் மோதிலால் என்னும் புகழ்பெற்ற வக்கீலுக்கும் சொரூபராணி அம்மையாருக்கும் பிறந்தவர். மோதிலால் சுதந்திர போராட்ட வீரர், இந்திய காங்கிரசின் தலைவராக இருந்தவர். நேரு அரண்மனை போன்ற வீட்டில் பிறந்து, செல்வச் செழிப்புடன் வளர்ந்தவர். இவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட், ஐநா சபையில் உயர்பதவி வகித்தவர். இன்னுமோர் சகோதரி கிருஷ்ணா, தலைச் சிறந்த எழுத்தாளர். இவர் மகள் இந்திரா காந்தி அறிமுகம் தேவைப்படாத ஆளுமை.
இங்கிலாந்தின் ஹாரோ வில் பள்ளிப் படிப்பும், ட்ரினிட்டி கல்லூரியில் பட்டப்படிப்பும் பயின்ற நேரு, சட்டப்படிப்பை இன்னர் டெம்பிள் கல்லூரியில் முடித்தார். படிப்பு முடிந்து இந்தியா திரும்பியவர், விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். பின்னர் காந்தியுடனும் ஏனைய சுதந்திர போராட்டத் தலைவர்களுடனும் முழு மூச்சுடன் உழைத்தார். 1929 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆனார். அவ்வாண்டில் நடைப் பெற்ற லாகூர் மாநாட்டில் ‘இந்தியாவுக்கு பூரண சுயராஜ்ஜியம் தர வலியுறுத்திடும் தீர்மானத்தை நிறைவேற்றினார். பின்னர் வந்த போராட்ட காலங்களை, களங்களை காந்தியும், நேருவும் முழுமையாய் ஆக்கிரமித்தனர். தனது அரசியல் வாரிசாக காந்தி நேருவை வரித்துக் கொண்டார், வழிகாட்டினார்.
1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் முழுவீச்சில் நடந்த போது நேரு கைது செய்யப்பட்டார். பின்னர் பல தருணங்களில் சிறை சென்றவர், தன் வாழ்நாளில் 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார். நிறைய படிக்கும் ஆர்வமுள்ள படித்ததும், எழுதியதும் சிறையில்தான். உலக வரலாற்று காட்சிகள் (Glimpses of World History), இந்தியா ஒரு கண்டுபிடிப்பு (Discovery of India), அவரது சுய சரிதை போன்ற நூல்களை எழுதினார். அவர் மகளுக்கு எழுதிய கடிதங்கள், உலகத்தின் கடித இலக்கியத்தில் முதன்மையான நூல். உலக வரலாறு, தந்தை மகள் நலம் விசாரித்தல், குடும்ப நிகழ்வுகளை மட்டுமன்றி இந்தியாவின் தொன்மை, அறிஞர்களின் மேற்கோள்கள், நாட்டு நடப்புகள், சுதந்திர போராட்ட வரலாறு, அக்கால கட்டத்தில் நடந்த போர்கள் பற்றிய செய்திகள் போன்ற அரிய செய்திகளைத் தாங்கிய கடிதங்கள் அவை. இந்திராகாந்தி எழுதிய பதில் கடிதங்களும் இவவகை செய்திகளாக இருந்தன.நேஷனல் ஹெரால்ட் என்னும் பத்திரிக்கையும் நேரு நடத்தி வந்தார்.
நெடிய, துயர் நிறைந்த சுதந்திர போராட்டம் முடிவுக்கு வந்தது... நள்ளிரவில் சுதந்திரம் விடிந்தது. அன்று செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி முதல் பிரதமராக நேரு உரை நிகழ்த்தினார். சரித்திரத்தின் அழகான உரைகளில் ஒன்று அது. ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, விவேகானந்தரின் சிகாகோ உரை போன்றே நேருவின் உரை பிரசித்தி பெற்றது. “விதியுடன் ஓர் உடன்படிக்கை செய்துக் கொண்டோம்” என துவங்கும் அந்த உரை “உலகம் உறங்கும் நேரத்தில் இந்தியா விழித்துக் கொள்கிறது” என்னும் கவிதை நயத்துடன் இந்தியாவின் மாண்பு , இந்திய மக்களின் கடமை என பல விழுமியங்களை உள்ளடக்கியது.
காந்தியின் மறைவுக்குப் பின் உதித்தது ‘நேரு யுகம்’ நெல்லிக்காய் மூட்டையைப் போல் கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, மொழி வாரி மாநிலங்களாக்கியத்தில் படேலும் நேருவும் ஒன்றுபட்டு சாதித்தனர். விடுதலை பெறும் முன்பே, பாகிஸ்தான் பிரிவினை அவருக்குத் தலைவலி தந்தது. அவர் அரைமனத்துடனே ‘பிரிவினை ஒப்பந்தத்தில்’ கை ஒப்பமிட்டார்... நேரு பிரதமரானதும், இந்தியாவின் கட்டமைப்புகளை உறுதிப்படுத்தினார். பல அணைக்கட்டுகள் நேருவின் காலத்தில் தொடங்கப்பட்டவை. “அவை இந்தியாவின் கோயில்கள்” என்று அழைத்தார். நீர் மின்சக்தி, அனல் மின்சக்தி, அணு சக்தி என உற்பத்திக்கு துணையாகும் சக்திகளை உற்பத்தி செய்யும் கூடங்களை நிறுவினார். அறிவியல் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று ‘நவ இந்தியாவை’ கனவு கண்டார்.
இந்திய மக்கள் அனைவரும் தரமான கல்வி பெற நாடெங்கும் கல்விக்கூடங்களை நிறுவினார். AIIMS, IIT, IIMS போன்ற கல்வி நிறுவனங்கள் மருத்துவம், பொறியியல், மேலாண்மை துறைகளில் உலகத்தரத்தில் கல்வி கற்பிக்க நேரு காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. 1951 ஆம் ஆண்டில் திட்டக்குழுவை அமைத்தார். ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன... ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டமும், நாட்டை வளர்ச்சிப்பாதையில் முன்னேற வைத்தது. காந்தியின் கிராமப் பொருளாதாரத்துக்கு, மாறுபட்ட கலப்பு பொருளாதாரம் நேரு முன்வைத்தார். நேருவின் அயல்நாட்டுக் கொள்கைகள் ஆழ்ந்த தொலைநோக்குடன் வரையப் பட்டவை. ரஷ்யா, அமெரிக்கா என்னும் இரண்டு வல்லரசுகளும் இந்தியாவை தன் பக்கம் இழுக்க நேரு ‘அணி சேரா’ கொள்கையை கடை பிடித்தார். ஆங்கில காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளை ஒருங்கிணைத்து ‘காமன்வெல்த் கூட்டமைப்பை’ நிறுவினார். சைனாவின் எல்லை தகராறுகளை நெறிப்படுத்த பஞ்ச சீல கொள்கைகளை வடிவமைத்தார். இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்தார்.
நேரு உயர்ந்த கருத்துக்களையும், கோட்பாடுகளையும் கொண்டவர். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் சமத்துவம், சகோதரத்துவம் நிலவும் மதசார்பற்ற, ஜனநாயக இந்தியாவை எழுத்தில் கொணர்ந்தவர். மார்க்சிசத்தின் பேரில் ஈர்ப்பு இருந்தாலும், அவர் விரும்பியது மக்களாட்சி. நாட்டின், பலதிறப்பட்ட கலாச்சாரங்களும், பாரம்பரியமும் பாதுகாக்கப் படவேண்டும் என்று அவர் சிந்தித்தார். நேருவின் எழுத்தில், பேச்சில் நிலவிய ‘சோசலிசம்’ அறிவியல் சார்ந்த நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தது. ஜனநாயகமும் - சமூக உரிமைகளும் இல்லையெனில், அங்கு சோசலிசம் இராது என்பதிலும் அவர் உறுதியாக நின்றார். “.. Democracy and civil liberties had to be basic constituents of socialism and were inseparable from it.” ‘இந்நாட்டில் உள்ள பசி, வறுமையை, கல்லாமை மற்றும் மூடநம்பிக்கைகளையும் அழித்தொழிக்க விஞ்ஞானம் ஒன்றே வழி. நாம் அறிவியலை ஒதுக்க இயலாது. எதிர்காலம் அறிவியலுக்கும், அறிவியலின் நண்பர்களுக்கும் உரியது’ என்றார் நேரு.
“காலம் என்பது கடந்து செல்லும் ஆண்டுகளால் ஆனதல்ல, ஆனால் ஒருவரின் சிந்தனை, செயல்பாடு மற்றும் சாதனைகளால் அளக்கப்படுகிறது" என்னும் நேரு, அமைதியை வலியுறுத்தி, உலக சமாதானத்துக்காக வாழ்ந்தவர். “சமாதானம் இல்லையேல் நம் கனவுகள் நொறுக்கப்பட்டு சாம்பலாகி விடும்” என்பார் அவர். “நம் இலட்சியங்கள், இலக்குகள், கோட்பாடுகளை மறப்பது தோல்வி எனப்படும். வெற்றியோ, விளைவுகளைப் பற்றி பயப்படாமல் துணிந்து செயலாற்றுவோருக்கு உரியதானது. “வாய்மையின் நெருங்கிய நண்பன் அச்சமின்மையே” என்றும் ‘சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகில் மகிழ்ச்சியான மனிதன்’ என்றும் நேரு கூறுகிறார்.
நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தவர். அவர்களுக்காக சிந்தித்தவர், அவர்களுடன் மகிழ்ந்திருந்தவர். “இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள். அவர்களை நாம் வளர்க்கும் விதமே எதிர்கால இந்தியாவைத் தீர்மானிக்கும்.” இந்திய சரித்திரம் மட்டுமன்றி உலக நாடுகளின் சரித்திரத்தை ஆழமாக அறிந்தவர் நேரு. அவருக்கு 1955 ஆம் ஆண்டு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 11 முறை நோபல் பரிசுக்காக நேரு பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் காந்தியைப் போலவே அவருக்கு அப்பரிசு வழங்கப்படவில்லை. 1962 ஆம் ஆண்டு நடந்த சைனா போர் தந்த அழுத்தத்தில் நேரு தளர்ந்தார்.
ஜவகர் என்னும் சொல்லுக்கு ‘மாணிக்கம்’ என்ற பொருள் உண்டு. நேருவை ‘மனிதருள் மாணிக்கம்’ என்றே இந்நாடு புகழின் உச்சியில் வைத்து கொண்டாடியது. நவீன இந்தியாவின் சிற்பி என்றும் ‘ஆசியாவின் ஜோதி என்றும் அவர் புகழப்பட்டார். காந்தியைப் போலவே நேருவும் இன்றும் விமர்சிக்கப்படுபவர். அவரைப்பற்றி எத்தனை விதமான கருத்துக்கள் வந்தாலும், சுதந்திர இந்தியாவில் நேருவின் பங்களிப்பை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அவரது நினைவு என்றும் இம்மண்ணில் இருந்து மறையாது.
அடுத்த இதழில் முடியும்...

Leave a comment
Upload