
கடந்த வருடத்தில்…
சென்னை புழுல் புத்தகரம் பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் வீட்டிற்கு இரவு நேரத்தில் குடித்து விட்டு வந்து தொல்லை தருகிறார் என்று அவரது மனைவி அனுசூயாவுக்கு தீராத தொல்லையாக இருந்தது.
வேலைக்கு சென்று இரவு வீட்டிற்கு வந்த தனது கணவருக்கு, அனுசூயா தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து தோசை வார்த்து கொடுத்துள்ளார். தோசையை சாப்பிட்ட சுரேஷ் சில நிமிடங்களில் அயர்ந்து தூங்கி விட்டார்.
அனுசூயா தனது நண்பர் முரசொலி மாறனை வரவழைத்து, தூங்கி கொண்டிருந்த கணவரை தனது துப்பாட்டாவை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.
மறுநாள் காலை தூங்கி எழுந்த அனுசூயா, நேற்றிரவு குடித்து விட்டு வந்த தனது கணவர் குடிப்போதையில் இறந்து விட்டார் என்று போலீசாருக்கு தகவல் சொன்னார்.
ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை அனுசூயா கொலை செய்த விவரம் காவல்துறையினரின் புலனாய்வில் தெரியவந்து, அனுசூயாவையும் அவரது ஆண் நண்பர் முரசொலி மாறனையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
அடுத்து, சிட்லப்பாக்கத்தில் வசித்து வரும் லட்சுமி என்பவருக்கும் ஆட்டோ ஓட்டுநர் அன்சர் பாஷாவுக்கும் நட்பு மலர்ந்திருக்கிறது. அவரும் அதே பகுதியில்தான் வசிக்கிறார். லட்சுமியின் மகன் அஜித் தனது தாயின் நடத்தையில் சந்தேகம் வந்து பல தடவை கண்டித்துள்ளார். அஜித் இருமுறை தனது நண்பர்களுடன் ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். மூன்றாவது தடவையாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவர் அன்சர் பாஷாவை ரெட் ஹில்ஸ் ரோட்டில் படுகொலை செய்துள்ளார்.
சென்னை, குன்றத்தூரில் வசித்து வந்த அபிராமி என்பவர் தனது திருமணத்தினை மீறிய உறவுடன் நட்பு கொண்டாடிய பிரியாணி கடையில் பணிபுரியும் காதலருடன் சேருவதற்கு இடையூறுகாக இருந்த தனது இரண்டு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து கைதான விவகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு பரப்பரப்பாக மீடியாவில் வெளியானது நினைவிருக்கலாம்.
இந்தியாவில் கொலை செய்யப்படும் நபர்கள் குறித்து காவல்துறையினர் அவ்வப்போது தேசிய குற்ற ஆவண காப்பகத்துக்கு (National Crime Records Bureau) ஆண்டு தோறும் அறிக்கை சமர்பிக்கும்.
புழல் மற்றும் சிட்லபாக்கத்தில் நடந்த இரு கொலைகளும் திருமணத்தினை மீறிய உறவின் காரணமாக நடைப்பெற்றதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை போன்ற மாநகரங்களில் தற்போது குற்றங்கள் அதிகரித்து இருந்தாலும், மாநகர காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதில் முன்னனியில் இருக்கிறார்கள்.
சென்னையில், கடந்த 2019-ம் வருடத்தில் நடந்த கொலைகளில், முன்பகை காரணமாக நடந்த கொலைகளை விட, திருமணத்தினை மீறிய உறவினால் நடந்த கொலைகள் அதிகம் என்ற புள்ளிவிவரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
என்ன தான் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் திருமணத்தினை மீறிய உறவினால் நிகழும் கொலைகள் பற்றி எந்தவித தகவலும் காவல்நிலையத்திற்கு முன்பே தெரிவதில்லை.
சென்னையில் மட்டும், கடந்த வருடம் திருமணத்தினை மீறிய உறவினால் கிட்டதட்ட 28 கொலைகள் நடந்துள்ளது. இந்தியாவில் திருமணத்தினை மீறிய உறவினால் நிகழும் படுகொலையில் சென்னை இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
திருமணத்தினை மீறிய உறவினால் நடைபெறும் கொலையில் முதலிடத்தில் டெல்லி இடம்பிடித்துள்ளது என்ற தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு…. திருமணத்துக்கு மீறிய உறவு காரணமாக, சமீபகாலங்களில் பெற்ற தாயே தன் குழந்தையை கொல்லும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. இது திருமணம் மூலம் ஏற்படும் குடும்பம் என்ற கட்டமைப்பையே பாதிக்கும் அளவிற்கு சமூக பிரச்சனையாக உருவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் என்.கிருபாகரன் மற்றும் குத்தூஸ் இருவரும் வழக்கு விசாரணையின் போது தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்கள்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் திருமணத்தினை மீறிய உறவால், 1459 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது. திருமணத்துக்கு மீறிய உறவால் ஏற்பட்ட சண்டையில்... கடத்தல், மிரட்டல், தாக்குதல் உட்பட 213 குற்றங்கள் சென்னையிலும், 621 குற்ற சம்பவங்கள் பிற மாவட்டங்களிலும் சென்ற பத்தாண்டில் நடைப்பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டறிந்து, காவல்துறையினர் அதனை கட்டுபடுத்தி, அரசின் கவனித்திற்கு கொண்டு செல்லவேண்டும். செல்போனில் இணைய தளங்கள் மூலம் வரும் ஆபாச படங்களை மிக எளிதாக பார்க்க முடிவதால் தான் இது போன்ற பாலியியல் குற்றங்கள் அதிகரிக்கரிக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் என்.கிருபாகரன் மற்றும் குத்தூஸ் அறிவுரை வழங்கினர்.
இலை மறை காயாக இருந்த திருமணத்திற்கு மீறிய உறவுகள், இப்போது சகஜமாகி, குடும்ப வன்முறையாக மாறி கொலையில் போய் முடிகிறது. வரும் புகார்களை உடனுக்குடன் விசாரித்து காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், நாலு சுவற்றிற்குள் நடக்கும் விவகாரம் என்பதால் வெளியில் எதுவும் தெரிவதில்லை. குடும்பத்தில் பிரச்சனை ஆன பின் தான் தகராறு அல்லது அதன் பின் விளைவாக கொலையில் சென்று முடிகிறது. இதனால் திருமணத்திற்கு மீறிய உறவுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தான் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்கிறார் விவரமறிந்த காவல்துறை உயரதிகாரி.

அடுத்து நெஞ்சை உறைய வைக்கும் சம்பவமாக, தமிழ்நாட்டில் சென்ற ஆண்டில் மட்டும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் வயதானவர்கள் 177 கொலை செய்யப்பட்டு, இதிலும், இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தமளிக்கிறது. சீனியர் சீட்டிசன்கள் கொலை செய்யப்படுவதில் உத்திரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. சீனியர் சிட்டிசன் கொலை வழக்குகளில் பலவற்றில் கொலையாளியை காவல்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை என தனது அறிக்கையை தேசிய குற்ற ஆவணக்காப்பகம், புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
சீனியர் சிட்டிசன்களிடமிருந்து பொருட்களை திருடி செல்வது, தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நாடு முழவதும் சீனியர் சிட்டிசன்களிடம் இருக்கும் பொருட்கள் மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் நிறைய சீனியர் சிட்டிசன்கள் தனிமையில் வசிப்பதால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சீனியர் சிட்டிசன்கள் இருக்கும் ஏரியாக்களை கணக்கெடுத்து அவ்வப்போது போலீசார் ரோந்து செல்ல வேண்டும். அப்படி செய்வதனால் சீனியர் சிட்டிசன்கள் கொலை மற்றும் தாக்குதல் சம்பவத்தினை ஓரளவு தடுக்க முடியும் என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் தனி மனித விரோதம் காரணமாக 45 கொலைகள் நடைப்பெற்றுள்ளது. சென்னையில் சின்ன வாய் தகராறு ஏற்பட்டு, சென்ற ஆண்டில் மட்டும் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காதல் தோல்வி காரணமாக ஏற்பட்ட தகராறில் டெல்லியில் 26 கொலைகளும் , பெங்களுரில் 13 கொலைகள், மும்பை மற்றும் ஹைதரபாத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்ற வருடத்தில் தமிழகத்தில் 84 சிறார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். போஸ்கோ சட்டப்படி தமிழகத்தில் சென்ற ஆண்டில் மட்டும் 4,866 வழக்குகள் பதியபட்டுள்ளது. தமிழகத்தில் 46 இளம் சிறுமிகளுக்கு நடைப்பெற இருந்த பால்ய திருமணம், வழக்கு பதிவு செய்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்ற வருடத்தில் மட்டும் 4,519 சிறார்கள் காணமல் போய் 805 சிறார்களை காவல்துறையினர் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர் என தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தனது புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குற்றங்கள் பெருக காரணமான இணையத்தில் பாலியல் சம்பந்தமான ஆபாச படங்களை தடை செய்யவேண்டும், செக்ஸ் கல்வியினை உரிய வயது வந்ததும் பாடங்களில் சொல்லி தரவேண்டும், குடும்ப வாழ்க்கையில் கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டால், ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும். தம்பதியருக்கு மணவாழ்க்கை தொடர விருப்பமில்லை என்கிறபோது, எளிதாக விவகாரத்து கிடைக்க வழி வகை செய்யப்பட வேண்டும். இப்படியான சட்டப்பூர்வமான மாற்றம் ஓன்றே குற்றங்களை குறைக்க எளிதான வழி என சமூக ஆர்வலரின் கருத்தாக உள்ளது.
இந்திய நகரங்களில், கொல்கத்தா நகரம் பெண்களுக்கான பாதுகாப்பு பகுதி எனவும், அதே போன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியும் பெண்களுக்கான பாதுகாப்பான பகுதி எனவும் இங்கு பெண்களுக்கு எதிரான பாலியியல் துன்புறுத்தல் நடைபெறுவதில்லை என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது, சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.
எது எப்படியோ, தமிழகத்தின் தலைநகரமாக இருக்கும் சென்னை இப்போது கொலைநகரமாக மாறி வருகிறது என தேசிய குற்ற ஆவண காப்பகம் எச்சரிக்கை மணியை அடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது!

Leave a comment
Upload