தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான்... - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் குரல் - 10

2020909222456552.jpg

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூலக வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.

மனிதர்களுக்கு ஏகப்பட்ட ஆசைகள் இருக்கிறது. இந்த ஆசைகள் அனைத்தையும் அவர்கள் என்றாவது ஒருநாள் பிரியப் போகிறார்கள். அதாவது இந்த உலகத்தை விட்டுப் பிரியும் போது, அந்த ஆசைகளை அவர்கள் கைவிட்டு விடுகிறார்கள். இறந்த பிறகு ஒரு ஆசையை துறப்பதற்கு பதில், இறப்பதற்கு முன்பே அந்த ஆசைகள் எல்லாம் துறந்தால் நமக்கு எண்ணிலடங்கா ஆனந்தம் கிடைக்கும். நம்மை விட்டு ஆசைகள் நீங்குவதற்கு முன்னதாக நாம் உயிரோடு இருக்கும் போதே அந்த ஆசைகளைத் துறந்தால் நமக்கு ஆனந்தம் அதிகமாகும்.

மனிதன் மற்ற விலங்குகளை விட சிறப்பான ஞானத்தை கொண்டவன். மற்ற விலங்குகளைப் போல், குருவிகளைப் போல், பறவைகளைப் போல், பூச்சிகளைப் போல் அவனும் சாப்பிடுகிறான், அவனும் தூங்குகிறான், அவனும் சந்ததி விருக்தி செய்கிறான், அவனும் இறக்கிறான் என்று இல்லாமல்... கடவுள் கொடுத்த தியானத்தை வைத்து, ஆனந்தத்தை அடைவது தான் ஒரே வழி.

ஞானம், ஆனந்தம், நாம் என்ற எண்ணம் எல்லாம் ஒன்றுதான். நாம் என்ற எண்ணம் நமக்கு கிடைக்கும் போது ஒருவிதமான ஆனந்தத்தை நாம் அடைகிறோம். அதாவது நமக்கு சொந்தமானது, நம்முடையது என்ற பொருளை நாம் பற்றும் போது நமக்கு ஆனந்தம் அதிகமாகிறது. அது நம்முடையது அல்ல என்று நினைக்கும் போது நாம் ஆனந்தம் அடைவதில்லை.

உதாரணத்திற்கு ஒருவருக்கு சொந்தமான வயலில் அதிக விளைச்சல் இருந்தால் அவர் மகிழ்வார். அடுத்த வருடம் அந்த வயலில் விளைச்சல் இல்லை என்றால் வருத்தப்படுவார். ஒருவேளை அந்த விளை நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு அடுத்த வருடம் அந்த வயலில் அதிக விளைச்சல் ஏற்பட்டால் ஆனந்தப்படமாட்டார் . அந்த வயல் அவருடையதாக இருக்கும்போது மட்டுமே அவருக்கு அந்த ஆனந்தம் கிட்டும். போன வருடம் நாம் வைத்திருந்த போது விளைச்சல் இல்லையே என்று வருத்தப்படுவார். நம்முடையது என்னுடையது என்று ஒரு பொருளை நாம் நினைக்கும்போது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு மகிழ்ச்சிகரமான சிறப்பான செய்தியாக இருந்தாலும் நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது. எனது என்ற சம்பந்தம் இல்லாமல் போய்விட்டால், நமக்கு சந்தோஷம் குறைந்து நம்முடைய எண்ணங்கள் முற்றிலும் மாறிவிடுகிறது.

இன்னொரு உதாரணம் ஒருவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. முதல் மனைவி இறந்த பின் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரண்டாவது மனைவி மீது அவருக்கு பாசம், அன்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் முதல் மனைவியின் குழந்தையின் மீது அவருக்கான அன்பு குறைவாக இருக்கிறது. தன்னுடைய மகன் இரண்டாவது மனைவியோடு ஒத்துப்போவதில்லை. அதனால் அவன் வருத்தப்பட்டு அந்த இரண்டாவது மனைவிக்கு பில்லி சூனியம் வைக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த பில்லி சூனியம் அந்த இரண்டாவது மனைவியை பாதிக்காமல் அந்த மகனையே பாதிக்கிறது என்றால் இவர் சந்தோஷப்படுவார். ஏனென்றால் இவருடைய சொந்தமாக இப்போது அவர் கருதுவது... அன்பான பாசமாக கருதுவது தனது இரண்டாவது மனைவியை தான். தன்னுடைய மகனாக இருந்தாலும் அவன் பாதிக்கப்பட்டால், இவர் சந்தோஷப்படுகிறார். ஆனால் இரண்டாம் மனைவி பாதிக்கப்பட்டார் என்றால் வருத்தப்படுகிறார். நான் என்பதன் சம்மதத்துக்கு உண்டான பிரச்சினை இதுதான்.

நானென்ற எண்ணத்தை துறந்தால், நமக்கு இன்னும் அதிக ஆனந்தம் கிடைக்கும் என்கிறார். ஒரு சின்ன விஷயத்தை நாம் சொந்தம் கொண்டாடும் போது, அது நமக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. அந்த சொந்தம் என்ற எண்ணத்தை துறந்தால் இன்னும் அதிக சந்தோசம் கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர். சிறிய துவாரங்கள் உள்ள மூடியை போட்டு ஒரு விளக்கை ஏற்றினால் அது பல சிறிய ஒளி வெளிச்சங்களை தரும். இந்த துவாரங்கள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்த ஒளியை நாம் பார்க்கிறோம். அந்த மூடியை நாம் எடுத்துவிட்டால் ஆனந்த ஜோதி விளக்கில் பெரிய ஒளி தெரியும். ஆசைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், மனத்தை அடக்க முயற்சிக்க வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பது போல் ஒரு உணர்ச்சியை உணர்வோம் என்று பயப்படவேண்டாம். அந்த ஜோதியை போல் ஆனந்தமாக ஒரு ஜோதி தெரியும்.

பொதுவாக உடலில் ஏதாவது ஒரு ஊனம் இருந்தால் ஏதாவது ஒரு விதத்தில் அந்த ஊனமுற்றவருக்கு வேறு சில இடத்தில் அந்த சக்தி வெளிப்படும்.

அதுபோன்றுதான் சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக ஆனந்தமாக கூடி நிற்கும். ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகள் சக்தியே இதற்கு உதாரணம். சகல லோகங்களும் சென்று அவர்கள் விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காது கேட்காத சப்தங்கள் கேட்டு அதனை வேத மந்திரங்களாக கொடுத்துள்ளார். மனதை எப்படி அடக்குவது எப்படி நிலை நிறுத்துவது..அதன் பிறகு எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது என்று யோசிப்பவர்கள் அந்த வேதங்கள் சொல்லப்படும் விஷயங்களை கடைப்பிடத்தாலே போதும்...பேரின்பம் நிச்சயம் கிடைக்கும். அதற்கு பரமேஸ்வரன் கட்டாயம் அருள் புரிவார்.

ஓவியம்: TSN