தொடர்கள்
கவிதை
கடிதங்கள் - கே.ராஜலட்சுமி

2020916204048913.jpeg

அன்று

கடிதம் எனும் சாதனம்
எண்ணங்களைப் பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்
நம்மிடயே வலம் வந்தது.
ஏகாந்தமாய் அமர்ந்து
கடிதங்கள் எழுதவென்றே
வீட்டில் மூலைகள் இருந்தன.
வெற்று எழுத்துக்களாய்
இல்லாமல் மொழி வளர்க்கும்
அன்றைய ஊடகமாகவும்
திகழ்ந்தன கடிதங்கள்!...

உணர்ச்சிகளுடன்
ஒன்றாய் இணைந்த
கடிதங்கள் வகை வகையாய்!...

அன்னை தந்தை
மகன் மகளிடையே அன்பைப்
பரிமாறும் கடிதங்கள்.

மங்கலச் செய்திகள் தாங்கிய
மஞ்சள் பூசிய கடிதங்கள்.

வேலை வாய்ப்பை வழங்கிய
வெற்றிக் கடிதங்கள்.

காதலை ஏந்திச் செல்லும்
தூதராய்க் கடிதங்கள்.

சித்ர குப்தனின் ஓலையாய்
மரணச் செய்தி தாங்கிய
கடிதங்கள்.

அவை காகிதங்கள் அல்ல.
உணர்ச்சிக் குவியல்கள் சங்கமிக்கும் பொன்னேடுகள்.

காலத்தால் சிதைந்தாலும் கடிதம் எழுதிய அனுபவமும் அது கட்டிப் போட்ட உறவுகளும் நினைக்கும் போதே இனிப்பவை.

இன்றோ

தகவல் தொடர்புக் கருவிகள் தடையின்றி..! ஆனால் அவற்றில் உறவுப் பாலம் அமைக்கும் உணர்வுகள்? இன்று தமிழ் கேள்வித் தாளில் மட்டுமே இருக்கும்
கடிதம்! அது விட்டுச் சென்ற இடம் என்றென்றும் வெற்றிடமே!...