எனது ஐந்து வயதில், என் பெற்றோருடன், விமானத்தில் பறந்த அனுபவத்திற்கு பிறகு, இந்த எழுபது வயதில்தான், “விமானப்பயண யோகம் பிராப்திரஸ்து” கிடைத்தது. காரணம், சென்னையிலிருக்கும் என் மகனின் அவசர அழைப்பு. ஃபிளைட் டிராவலின் போது ஏற்படும் சுகதுக்கங்களை தெரிந்து கொள்வதற்காக, விமானப்பயண அனுபவங்கள் நிறைந்த, என் நண்பன் ‘உலகம் சுற்றும் கிழவனான’ சிவகங்கை-வெங்கிடுவிற்கு பயணத்திற்கு முதல் நாள் ஃபோன் போட்டு பேசிக்கொண்டிருந்தேன்.
“ஏண்டா வெங்கிடு, ஏரோப்பிளேன்ல போறது, அப்படி ஒண்ணும் டேஞ்சர் இல்லையேடா” என்று அவனிடம் என் ‘ஃபிளைட்-ஃபோபியா’ கிளப்பிவிட்ட சந்தேகத்தைக் கேட்டேன்.
“டேய் மடையா, அருமையான சாப்பாடு, தேவைப்பட்டா சோமபானம், எல்லாம் பிளேன்லேயே அழகான ஏர்ஹோஸ்டர்ஸ், நம்ப ஸீட்டுக்கே வந்து தருவாங்க. நீதான் திருச்சியில ஏறி சென்னையிலே இறங்கிடுவியே. அதுக்குள்ளே அப்படி ஒண்ணும் பெரிய அளவில ஆக்ஸிடென்ட்ஸ் ஆயிடாது. ஒருவேளை, சென்னையிலே இறங்கும் போது, மழையும் காத்தும் ஜாஸ்தியா இருந்தாமட்டும், ஏரோப்பிளேன் ‘டிரிஃப்ட்’ ஆகும். அப்போ மட்டும்தான் லேசா வாந்தி வரும்” என்று என் “வயிற்றில் புளியைக்கரைத்தான்” வெங்கிடு.
அடுத்த நாள், திருச்சி ஏர்ப்போர்ட்டின், டிராவலர்ஸ்-லவுஞ்சில் காத்திருந்தேன். என் பெற்றோர்களுடன், இதே ஏர்ப்போர்ட்டில், என் ஐந்து வயதில் விமானத்தில் பறந்தது, எண்ணத்தில் நிழலாடியது.
“உனக்கு எத்தனை வயசாச்சுன்னு யாராவது கேட்டா, அச்சு பிச்சுன்னு உளராம, ஐஞ்சு முடிஞ்சு ஆறு நடக்குதுன்னு சொல்லணும்” என்று எனக்கு உபதேசித்தபடியே, ஒரு காகிதத்தில், பத்து ரவாலாடு உருண்டைகளை வைத்து பொட்டலம் கட்டி, புடவையில் முடிந்து வைத்துக்கொண்டு, “எங்கேடா உன் அப்பாவைக் காணோம்?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என் அம்மா.
‘ஏண்டி மீனா, உனக்குத்தான் நம்ப ஊர் டவுன் பஸ்ல போனாலே வாந்தி வருமே. ஏரோப்பிளேன்ல எப்படிப் போகப் போறே?’ என்றபடி, வாசலில் வந்தாள் எதிர் வீட்டில் குடியிருக்கும் அம்மாவின் தோழி.
“அதான் எனக்கும் ஒரே விசனமா இருக்குடி. என் ஆத்துக்காரர்கிட்டே புளிப்பு மிட்டாய் வாங்கிண்டு வரச்சொல்லியிருக்கேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, வாசலில் சைக்கிள் டயர்களுக்கு காத்து பிடித்துக் கொண்டு, தயாராக வந்தார் அப்பா. “மணி ஒம்பதாச்சு, பத்து மணிக்கெல்லாம் ஃப்ளைட்டை எடுத்திடுவான். இன்னும் கிளம்பலையா? சீக்கரண்டி, வாசல் கதவை பூட்டு” என்றபடி கர்ஜித்துக்கொண்டிருந்தார் அப்பா.
திரும்பி என்னைப் பார்த்தவர் ”டேய், அங்க வந்து மூச்சா-கீச்சா வரதுன்னு சொன்னே, தொலைச்சுபுடுவேன். எல்லா கண்றாவியையும் இங்கேயே விட்டுட்டு வா” என்று மிரட்டியதும் அரண்டு போனதில் என் டிராயர் லேசாக நனைந்தது.
வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலிருக்கும், திருச்சி விமான நிலையத்துக்கு, என் அப்பா, சைக்கிளில் பறந்து கொண்டிருந்தார். பின்னால் கேரியரில் அம்மாவும், முன்னாலிருந்த பார்-கம்பியில் இரண்டு பக்கமும் கால் போட்டுக் கொண்டு நானும் உயிரைக் கையில் பிடித்தபடியே, பிராணாவஸ்தையுடன் ஒட்டிக் கொண்டிருந்தோம்.
“ஏன்னா, பிளேனை எடுத்துட மாட்டாளே?” என்ற அம்மாவிடம்,
“அதெல்லாம் ஏர்ப்போர்ட்ல இருக்கிற நம்ப சங்கரன், என் தலையை பார்க்காம, வண்டியை எடுக்க விடமாட்டான். பிளேனை போகவிட்டான்னா அவ்வளவுதான், பழைய கடன் இருபது ரூபாயை குடுடான்னு கேட்பேன்னு அவனுக்கு பயமிருக்கும்” என்று சொல்லியபடியே குறுக்குப்பாதையில் சைக்கிளை பாயவிட்டார். அந்த சிறுவயது சைக்கிள்-டிராவல்தான், எனக்கு பின் நாளில் ஏற்பட்ட ‘பைல்ஸ்’ பிரச்சனைகளுக்கு ‘மூல காரணமானதோ’ என்னவோ.
விமான நிலையத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த ஏர்ப்போர்ட்-வாச்மேன் சங்கரனோ, அப்பாவைப் பார்த்ததும், ‘வாங்கோண்ணா’ என்று வரவேற்றார்.
“பைலட், ஏர் ஹோஸ்டர்ஸ் எல்லோரும் ரெடி. அதோ அந்த டிக்கட் கவுண்டர்லே சொல்லி வைச்சிருக்கேன். உங்களுக்கும் மாமிக்கும் சேர்த்து டிக்கட் விலை முப்பது ரூபாய். மாமிக்கு பின் சீட்டு வேண்டாம், தூக்கிப்போடும், அதனால ஃப்ரெண்டுல, ஜன்னலோரத்து சீட்டை, கொடுக்கச் சொல்லியிருக்கேன்” என்றார்.
“சங்கரா, ஏர்ப்போர்ட் வாசல்ல, சைக்கிளை பூட்டாம நிறுத்தியிருக்கேன். பத்திரமா பார்த்துக்கோ” என்ற அப்பா ‘திருச்சி எஞ்ஜாய்மென்ட் டிரிப்’ என்று எழுதியிருந்த டிக்கட் கவுண்டருக்கு போய்க் கொண்டிருந்தார்.
பக்கத்தில், குரோட்டன்ஸ் செடி வைத்திருந்த தொட்டிக்குள் அவசர வேலையை முடித்துக்கொண்டிருந்த என்னை,“அம்பி, அதுலேயெல்லாம் மூச்சா போப்பிடாது” என்ற சங்கரனை பார்த்து, என் அம்மா...
“குழந்தைதானே, அவனுக்கு எதாவது செடிக்கு அடியிலே போய்தான் பழக்கம்” என்று சமாதானம் சொல்லிவிட்டு, என்னை தரதரவென இழுத்துக் கொண்டு அப்பாவின் பின்னாலேயே போய், அங்கே நின்றுகொண்டிருந்த, அந்த சின்ன விமானத்தில் ஏறினாள்.
அந்த விமானம் மொத்தம் இருபது ஆட்களை ஏற்றிக்கொண்டு, திருச்சியை மூன்று முறை சுற்றி வந்து இறக்கிவிடும். வாராவாரம், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே, அந்த ‘பப்ளிக் என்டர்டெயின்மென்ட் சர்வீஸ்’ நடந்தது.
“கடங்காரா ஜன்னல் பக்கமா கீழே என்ன வேடிக்கை? தலைசுத்தப் போறது. பேசாமா கண்ணை மூடிண்டு கிருஷ்ணா, ராமான்னு சொல்லிண்டே வந்து தொலை” என்று என்னை அர்ச்சனை செய்தபடி, தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு, தனக்கு ஏற்பட்டிருந்த பயம் போக, கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்தபடியே டிராவல் பண்ணிக் கொண்டிருந்தாள் என் அம்மா.
“கீழே, மலைக்கோட்டையை பாருங்கள்” என்று ஏர் ஹோஸ்டர்ஸ் சொன்னதும், கண்களை திறந்த என் அம்மா ‘விராலிமலை முருகனுக்கு அரோஹரா’ என்று கோஷமிட்டதும், மொத்த விமான பயணிகளும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
நானோ, “அம்மா, அது வேணும்” என்று அவளது மடியில் கட்டி வைத்திருந்த ரவாலாடுகளை கேட்கவும், “மூதேவி, தின்னிப் பண்டாரமே” என்று வசைபாடியபடியே இரண்டு லாடு-உருண்டைகளை தானமளித்தாள் என் அம்மா.
சைக்கிளை மிதித்து ஓட்டி வந்த களைப்பினால், பிளேனுக்குள் ஏறியதும், லேசாக கோழித்தூக்கம் போட்டு, அசதி குறட்டை விட்டுக்கொண்டிருந்த அப்பாவை எழுப்பி, “சீமெண்ணை நாத்தம் குடலை பிரட்டறது, எனக்கு வாந்தி வரது. வண்டியை ஒரு ஓரமா நிறுத்தச் சொல்லுங்கோ” என்றாள் அம்மா.
“பொறுத்துக்கோடி, பிளேனை விட்டு எறங்கினதும், அந்த சங்கரன் கடங்காரனை தொலைச்சுடறேன்” என்று சம்பந்தமே இல்லாமல், என் அப்பா, வீர சபதம் எடுத்துக் கொண்டிருந்தார்.
“அம்மா, மூச்சா வறது” என்ற என்னிடம், கொஞ்சம் பொறுத்துக்கோ, ஆகாசத்திலே செடி-கொடியே கிடையாது. கீழே எறங்கினதும் ஏதாவது தொட்டி வைச்சிருப்பா, அதிலே போலாம்” என்ற, அம்மாவின் வார்த்தைகளை வாங்கிக்கொண்டே, “அடக்கு… அடக்கு” என்ற, கட்டபொம்மன்-வசனத்தை, மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டே, அம்மா கொடுத்த “வரி, வட்டி, கிஸ்திகளான” ரவாலாடுகளை, கபளிகரம் செய்து கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக “அந்த உல்லாச விமானப் பயணம்” அன்று இருபது நிமிடங்களில் முடிந்தது.
ஏரோபிளேனில் பறந்ததைப் பற்றி, எல்லோரிடமும், அன்று மாலையிலேயே, பூவும், குங்குமமும், சுண்டலும் கொடுத்து, அம்மா பீத்திக்கொண்டது, என் மனதில் நிழலாடிக்கொண்டிருந்த போது, “ஸார் எழுந்திருங்க” என்ற குரல் கேட்டதும் விழித்துக் கொண்டேன்.
“சார் கைப்பையில என்ன வைச்சிருக்கீங்க” என்றார், ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி. எனது ஹான்ட் லக்கேஜை சோதனை செய்த பிறகு, ஏதோ பயங்கரமான ஆயுதக்கடத்தலை கண்டு பிடித்ததுபோல, “ஸாரி சார், இந்தமாதிரி ஷார்ப்பான ஆயுதங்களை எல்லாம் விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை” என்று சொல்லிவிட்டு, என் நெயில்-கட்டரை பறிமுதல் செய்து கொண்டு, என்னை விடுவித்து விட்டார்.
ஏதோ திருச்சி பஸ்டாண்டில் ஆம்னி பஸ்காரர்கள் கூவுவது போல், “சென்னை பாஸஞ்சர்ஸ் எல்லோரும் வாங்க” என்றதும், கிடுகிடுவென கிளம்பி, அங்கிருந்த வரிசையில் நுழைந்து கொண்ட எனக்கு, பேரதிர்ச்சியாக இருந்தது. காரணம், வெளியே வந்து நின்ற பேருந்தில் எல்லோரையும் ஏறச்சொன்னார்கள்.
அந்த பேருந்தில் ஏறுபவர்களிடம், டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தபடி, ஒரு நேம்லிஸ்டில் டிக்கடித்துக் கொண்டிருந்தவரிடம் போனேன். “ஸார், என் பையன், நான் சென்னைக்குப் போக விமான டிக்கட் வாங்கியிருப்பதாகத்தான் சொன்னான். நீங்க என்னடான்னா, பஸ்ல ஏறச்சொல்றீங்க. சென்னை வரைக்கும் பஸ் டிராவல் எனக்கு ஒத்துக்காது’ என்றேன்,
அவரோ சிரித்துக்கொண்டே, “ஸார் முதல் தடவையா இப்போதான் பிளேன்ல போறீங்களா” என்றபடியே, “அதோ அங்கே நிற்கும் அந்த பிளேன் வரையில் இந்த பஸ்ஸிலேயே போகலாம்” என்றதும்தான் எனக்கு மூச்சு திரும்பி வந்தது.
அந்த விமானம் கிளம்பி, கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் ஆனதும், அருகே இருந்த ஜன்னல் வழியாக கீழே பார்த்தேன். வங்காள விரிகுடாவின் பரந்த கடல் நீர் பரப்பு கண்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில், எனக்கு கடல்-நீச்சல் தெரியாதே என்ற பயமும் தொற்றிக் கொண்டது.
அங்கே ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அழகு பொம்மையிடம் (மன்னிக்கவும்; அது ஒரு ஏர்ஹோஸ்டர்ஸ்), ‘பிளேன் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது’ என்று கேட்டேன்
“டிவன்டி ஃபைவ் தௌஸன்ட் கிலோ மீட்டர்” என்ற அவளின் பதிலைக் கேட்டதும் தலைசுற்றிப் போனேன். அட ஞானசூன்யமே என்று மனதுக்குள்ளேயே அவளை சபித்துக் கொண்டேன்.
“அட் வாட் ஹைட் வீ ஆர்?” என்று ஒரு பேப்பரில், ஆங்கிலத்தில் எழுதி, அவள் கையில் கொடுத்து, கோ-பைலட்டிடம் கொடுக்கச் சொன்னேன். அந்த பேப்பரை வாங்கி தன் கோட்-பைக்குள் சொருகியபடியே சென்றுவிட்டாள்.
அப்போது துணை-விமானியே, “நாம் இப்போது, பதினைந்தாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்; சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கிவிடும்” என்று அறிவித்தார்.
ஏதோ “ஃபார்முலா-ஒன் ரேசில்” மோட்டர் பைக்குகள், ஓடுவது போல், விமானம் இரண்டு பக்கங்களிலும் மாறிமாறி சாய்ந்து, வளைந்து, கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. எனக்கோ, அடிவயிறு கலங்கி, ஆதிகாலத்தில் அம்மாவிடம் குடித்த பாலோடு, மொத்தமும் தொண்டைக்கு வந்து, வெளியேறத் தயாராக நின்றது
சற்று நேரத்தில் பஞ்சரான-கார், கரடு முரடான சாலையில் போவது போன்ற சத்தத்துடன் ‘ரன் வேயில்’ விமானம் இறங்கி, யூ-டர்ன் போட்டு, ஃபிளைட் பார்க் ஏரியாவில் நின்றதும், அப்பாடா என்று எனக்கு உயிர் வந்தது.
காலுக்கடியில் சிக்கிக் கொண்டிருந்த என் பையை, குனிந்து எடுக்கும் முன்பே, எல்லோரும் கீழே இறங்கியிருந்தார்கள். ‘அந்த ஞானசூன்யமான’ அழகு ஏர்ஹோஸ்டர்ஸ், என் அருகே வந்து, “இன்னா பெரிசு, பை சிக்கிகிச்சா, நவுறு, நான் வலிக்கிறேன்’ என்றதும் ஆடிப்போனேன். அதிசயமாக அவளைப் பார்த்ததும், ‘இன்னா, உத்து பாக்கிறே, கஸ்மாலம். காலாவதியான காலத்திலே, உனக்கெல்லாம் ஃபிளைட் வேண்டிக் கிடக்குதா? எனக்கே இங்கிலீஸில, லவ்லெட்டர் குடுத்து மெர்சலாக்கிறயா? என் புருசனாண்ட சொன்னேன், உன்னை அப்படியே வளிச்சு வாயிலே போட்டுக்குவான். எறங்கு, சாவுகிறாக்கி” என்று அன்பாக சொன்னதும், “அகத்தின் அழகு முகத்தில் தெரியாது” என்ற புது மொழியைக் கற்றுக் கொண்டேன்.
ஒரு கால்டாக்ஸியை, பிடித்து, மகனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்.
“என்னப்பா பிளேன் டிராவல் எப்படியிருந்தது? எஞ்ஜாய் பண்ணினியா?” என்றான் மகன்.
“அத்த ஏம்பா கேக்கிறே? படா ஜோராவும் டமாஸாவும்கீது. ஏரோப்பிளேன்ல முட்டாய்தர பொம்பளை, சும்மா குஜாலா, குன்ஸாவா கடலை போட்டுகிணே வந்தாப்பா. என்கே ஃபீலாயி, செவிளு டகிளு வாங்கிகிச்சு” என்று உளறிக் கொண்டிருந்தேன்.
“வாழ்க்கையில் முதல் தடவையா ஏரோப்பிளேன்ல வந்ததால, அவருக்கு மூளை பிசகியிருக்குண்டா. எதுக்கும், சாய்ங்காலமா, கீழ்பாக்கத்துக்கு அழைச்சுண்டு போய், டாக்டர்கிட்டே காமிச்சு, ‘ஃபிளைட்-ஃபோபியா’ அப்படின்னு சொல்லி, வைத்தியம் பண்ணிண்டு வா” என்ற என் மனைவியைப் பார்த்து, ‘சரிம்மா கண்ணு, கரீக்டா சொல்லிக்கின’ என்று நான் சொல்லவும், என் மொத்த குடும்பமும் பேஜாரானது.
Leave a comment
Upload