தொடர்கள்
சோகம்
அண்ணன் என்னடா?.. தம்பி என்னடா அவசரமான உலகத்திலே?! - பாலநாகராஜன்

2020917002809451.jpg

சேலம் மாவட்டம், கந்தம்பட்டி தாலுகாவில் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் 70 வயது சரவணன். இவர் தனது அண்ணன் பாலசுப்பிரமணியகுமார் (74), தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ (50), கீதா (48) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அக்டோபர் 12-ம் தேதி மாலை ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள தனியார் ஃபிரீசர் பாக்ஸ் நிறுவனத்துக்கு சரவணன் போன் செய்திருக்கிறார்.

அவர்களிடம் ‘எனது அண்ணன் இறந்துவிட்டார். அவரது சடலத்தை வைக்க ஃபிரீசர் பாக்ஸ் அனுப்புங்கள்’ என சரவணன் கூறியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த ஃபிரீசர் பாக்ஸ் நிறுவன ஊழியர்களிடம் ‘எனது அண்ணனின் உடல் மருத்துவமனையில் இருந்து இனிமேல்தான் வரப் போகிறது. நீங்கள் பாக்ஸை இறக்கிவிட்டு செல்லுங்கள். நாளை வந்து பாக்ஸை திரும்பப் பெற்றுச் செல்லுங்கள்’ என சரவணன் அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் மதியம் ஊழியர்கள் அங்கு வந்த போது ஃபிரீசர் பாக்சில் ஒரு முதியவர் கை கால் கட்டுடன் உயிருடன் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். சரவணனிடம் அவர்கள் வாய்த் தகறாறில் ஈடுபட்டு அதனை காட்சிப்படுத்தி வாட்ஸப்பில் வைரலும் ஆக்கினர்.

சடலமாகக் கருதி வாயிலில் தூக்கிப் போடப்பட்டவரை ஊழியர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயன்றபோது, வீட்டிலிருந்த சரவணனும் ஜெயஸ்ரீயும் முதலில் தடுத்திருக்கின்றனர். ஆனால் ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கும் காவல் நிலையத்திற்கும் போன் செய்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சூரமங்கலம் போலீசார் விரைந்து வந்து, சரவணனிடம் விசாரித்தனர்.

விசாரணையில், “எனது அண்ணன் இறந்துவிட்டார் என்பதே உண்மை. அவரது ஆன்மா பிரியவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் அவரை ஃபிரீசரில் வைத்திருக்கிறோம். இறந்ததற்கான டாக்டர் சான்றிதழ் கூட வைத்திருக்கிறோம்’ என சொல்லி சரவணன் சான்றிதழை காண்பித்திருக்கிறார். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

2020917002840675.jpg

இதையடுத்து சரவணன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஃபிரீசரில் பல மணி நேரமாக வைக்கப் பட்டிருந்த பாலசுப்பிரமணியகுமாரை போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (16-ம் தேதி) அதிகாலை பாலசுப்பிரமணியகுமார் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து சரவணனிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து தற்போது 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருப்பது: கடந்த 11-ம் தேதியே பாலசுப்பிரமணியகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அன்றே அவரை ஆம்புலன்சில் ஏற்றி, அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சரவணன் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு பாலசுப்பிரமணியகுமாருக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதையடுத்து சரவணன் தனது அண்ணனை ஆம்புலன்சில் ஏற்றி திரும்ப வீட்டுக்கே கொண்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து, மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு சரவணன் மாத்திரம் வந்திருக்கிறார். அங்கிருந்த டாக்டரிடம் ‘எனது அண்ணன் இறந்துவிட்டார். அவரது உடலை எரிப்பதற்கு இறப்பு சான்றிதழ் கேட்கின்றனர்’ என சரவணன் பரிதாபமாக கூறியுள்ளார். இதையடுத்து பாலசுப்பிரமணியகுமார் இறந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்யாமல் தனியார் மருத்துவமனை டாக்டரும் இறப்பு சான்றிதழை உடனடியாக வழங்கியுள்ளார்.

அந்த சான்றிதழுடன், தனது அண்ணன் உயிருடன் இருக்கும்போதே அவரை ஃபிரீசர் பாக்சில் வைத்து கை, கால்களை கட்டிப் போட்டு பல மணி நேரங்களுக்கு துடிக்க வைத்திருக்கிறார் சரவணன். பின்னர் போலீசார் வீட்டுக்கு வந்து விசாரித்தபோது, டாக்டரிடம் தான் ஏற்கனவே சாமர்த்தியமாக வாங்கி வைத்திருந்த தன் அண்ணனின் இறப்பு சான்றிதழை காட்டி போலீசாரையே கதிகலங்க வைத்திருக்கிறார்’ எனத் தெரியவந்துள்ளது

இதையடுத்து சொந்த அண்ணன் விஷயத்தில் துளியும் மனிதாபிமானமின்றி நடந்து கொண்ட 70 வயது சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என சோதிக்காமலே அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த டாக்டரை கைது செய்யவும், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் உரிமத்தையே ரத்து செய்யவும் சேலம் மாவட்ட காவல்துறை மும்முரமாக களமிறங்கியுள்ளது.