தொடர்கள்
நவராத்திரி
கொலுவில் கொரோனா விழிப்புணர்வு... - மாலாஸ்ரீ

2020917002256737.jpg


நெல்லை மாவட்டம், தியாகராஜ நகர் 7-வது தெருவில் சிவா என்பவரின் இல்லத்தில், மரகதம்மாள் என்பவர் கடந்த 45 ஆண்டுகளாக வைதீக முறைப்படி, பிரமாண்ட கொலு வைத்து அசத்தி வருகிறார். இதற்காக நவராத்திரி பண்டிகையின்போது தனது வீட்டின் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருக்கும் அனைத்து அறைகளிலும் கொலு பொம்மைகளை வைத்து அழகுபடுத்தி வருவது இவர் வழக்கம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பொம்மைகள் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இவரது கொலுவில் தவறாமல் இடம் பெறும்..

ஒவ்வொரு ஆண்டும் அப்போதைய சூழலுக்கேற்ப, புதிய கொலு பொம்மைகளை மரகதம்மாள் தஞ்சாவூரில் ஆர்டர் செய்து வாங்குவது வழக்கம். கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் எழுந்தருளியதால், அந்த சிலையை ஆர்டர் செய்து வாங்கி நவராத்திரி கொலுவில் வைத்து அழகு படுத்தினார்.

இந்த வருட கொலுவில், இந்த ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை நினைவுகூறும் வகையில், தஞ்சை பெரிய கோவில் செட் மற்றும் உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு செட் பொம்மைகளை ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கி அழகுபட வைத்திருக்கிறார், மரகதம்மாள்.

மேலும், 18 சித்தர்களின் உருவ பொம்மைகளும் இந்த வருடம் புதிதாக இடம் பிடித்துள்ளன. அவர்கள் அருளிய மூலிகை மருந்து பொருட்களே, இன்று கொரோனா நோய்தொற்று வெல்வதை குறிக்கும் வகையில், நவதானியங்கள் உள்பட பல்வேறு தமிழ் மருந்து பொருட்கள் மற்றும் குறிப்புகளையும் மரகதம்மாள் நேர்த்தியாக வடிவமைத்து வைத்திருக்கிறார்.

இதுதவிர, ஆங்கில முறைப்படி வழங்கும் மருந்து மாத்திரைகள், முகக்கவசம், சுகாதார விழிப்புணர்வு போன்றவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

தவிர அஷ்ட பைரவர், வியாசர் பூஜை, ஆண்டாள் பிறப்பு, சூர்ய ரதம், ராமர் வனவாசம், திருநெல்வேலியில் திருவையாறு, மஞ்சள் நீராட்டு விழா, சக்கரத்தாழ்வார், வெளிநாட்டு தமிழர்கள் வழிபடும் தெய்வ பொம்மைகள், அரசின் விழிப்புணர்வு திட்டங்கள், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா பொம்மைகள் உள்ளிட்ட பலதும் இவர் கொலுவில் இடம் பெற்றிருக்கின்றன.

இவரது வீட்டில் நவராத்திரி கொலுவினை காண ஆண்டுதோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையாளராக வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக அனைவரையும் நேரில் வருவதை தவிர்க்கும்படி மரகதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

இவருடன் சேர்ந்து மகள் ராமலட்சுமி சுதாகர், மருமகள் சாந்தி மாரியப்பன், பேத்தி மரகத ஸ்வேதா ஆகியோர் கடந்த ஒரு மாதமாகவே கொலுவுக்கான ஏற்பாடுகள் செய்ததாக மரகதம்மாள் பெருமையுடன் கூறுகிறார். மேலும், கொலு துதிப்பாடலுடன் கொரோனா ஒழிவதற்கும் சேர்த்து இறைவனை வேண்டி ஒரு பாடலை இம்முறை தான் பாடவிருப்பதாகவும் மரகதம்மாள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.