போர்டிகோவில் ஒரு மாருதி ஆல்டோ அலுங்காமல் குலுங்காமல் வந்து நின்றது. முன்னிருக்கைக் கதவைத் திறந்து கொண்டு ஒரு ஐம்பது வயது மனிதர் வெளிப்பட்டார். வெள்ளைநிற மேற்சட்டையும் வெள்ளைநிற காற்சட்டையும் அணிந்திருந்தார். கால்களில் ரீபோக் ஷு இடது கையில் லேப்டாப் கம்யூட்டர் வைத்திருந்தார்.
காரிலிருந்து இறங்கிய அவரை வரவேற்றபடி ஓடி வந்தான் இறந்து போன குத்புதீனின் முதல் மனைவியின் மூத்தமகன்.
“அஸ்ஸலாமு அலைக்கும் வக்கீல் ஸாப்!”
“அலைக்கும் ஸலாம். எல்லாரும் வந்திட்டாங்களா?”
“வந்திட்டாங்க. உங்களுக்காக அனைவரும் வரவேற்பறையில் காத்திருக்காங்க!”
“நல்லது. நாம் அங்கே போவோம்!”
வரவேற்பறை....
இறந்துபோன தொழிலதிபர் குத்புதீனின் முதல்மனைவியும் (வயது 58) அவரது இரு மகன்களும் (வயது38, வயது 27).
குத்புதீனின் இரண்டாவது மனைவியும் (வயது50) அவரது இரு மகன்களும் வயது 23, 21).
மூன்றாவது மனைவியும் (வயது 30) அவரது மூன்று குழந்தைகளும் (இரு ஆண் 9, 7. ஒரு பெண்5).
நான்காவது மனைவியும் (வயது25) அவரது கைக்குழந்தையும் (பெண்).
வக்கீலைக் கண்டதும் அவரவர் தலைமுக்காட்டை சரி செய்து கொண்டனர். இத்தா காலம் முடிந்திருந்தது. எனிலும் வக்கீலுக்கும் நான்கு பெண்மணிகளுக்கும் இடையே ஒரு திரை வைக்கப்பட்டது.
வக்கீல் அஜீஸ் தனது லேப்டாப் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தார். “ஜனாப் முகமது குத்புதீன் 22.03.2019 வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு மௌத்தானார். அவரது சொத்துகளின் மொத்தமதிப்பு 75 கோடி. அவர் தனது சொத்துகள் அனைத்தையும் சுயசம்பாத்தியமாக கருதி, தனது நான்காவது மனைவிக்கு தானமாக எழுதி வைத்துள்ளார். குத்புதீன் எழுதி வைத்துள்ள மரணசாசனம் இன்று 03.08.2019 செயல்படுத்தப்பட வேண்டும். எனவும் கூறியுள்ளார்!”
“தானமா நான்காவது பொண்டாட்டிக்கு எல்லாத்தையும் எழுதி வச்சிட்டு போய்ட்டான் அந்த படுபாவி! அவனுக்கு மண்ணறைல ஆயிரம் சித்திரவதைகள் நடக்கும். அவனுக்கு மறுமைநாளில் மிக நிச்சயம் கொடிய நரகம்தான்!” முதல் மனைவி கூச்சலிட்டாள்.
தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது மனைவிகளும், அவர்களது மகன், மகள்களும் கூச்சலிட ஆரம்பித்தனர். முதல்மனைவியின் இரண்டாவது மகன் தந்தையின் நான்காவது மனைவியை தாக்கப் பாய்ந்தான். இரண்டாவது மனைவியின் ஒரு மகன் வக்கீலை தாக்க முற்பட்டான்.
“யோவ் வக்கீலு! நீ வக்கீல் புத்தியக் காண்பிச்சிட்டியே... இந்த மாதிரி உயில் எழுத எங்கப்பன் கிட்ட எவ்ளவு காசு வாங்கின? இப்படி ஒரு உயில் இருக்கிறதையே சொல்லாம நாலுமாசம் பத்துநாள் கடத்திட்டியேய்யா. எங்கப்பன் சொத்துல பூர்வீக சொத்தும் இருக்கறது உனக்கு தெரியாது? அவன்தான் புத்தி கெட்டு ஒரு அநியாய உயில் எழுதினான்னா உனக்கெங்கய்யா புத்தி போச்சுது? அவனுக்கு உரிய அறிவுரை சொல்லி அவனை நீ தடுத்திருக்க வேண்டாம்? உலகத்ல ஒரு நேர்மையான வக்கீல் கூட இல்லை!”
அஜீஸ் முறுவலித்தார். “நீ கோபப்படுவதில் நியாயமிருக்கிறது. தானபத்திரம் எழுதுவதின் சாதக பாதகங்களை உன் தந்தைக்கு நான் தெளிவாக எடுத்துரைத்தேன். அவர் கேக்கவில்லை, நீ சொல்வது போல் உனது தகப்பனார் சொத்தில் உனது பாட்டனார் சொத்தும் கலந்திருப்பது உண்மைதான். அதனை நீ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தான் ரூஜுபடுத்த முடியும்!”
“இப்ப எதுக்கு வந்தீங்க? எங்கப்பனின் மரணசாசனத்தை படித்துக் காட்டி முதல் மூன்று மனைவிகளையும் அவர்களது குழந்தைகளையும் நடுத்தெருவுக்கு விரட்டியடிக்க வந்தீர்களா?”
“இல்லை...”
“பின்ன?”
“கொஞ்சம் பொறுத்திருந்தது பார். முதலில் பொறுமையாக உட்கார்!”
“எல்லோரும் பொறுமையாக இருக்கிறீர்களா? நான் பேச ஆரம்பிக்கலாமா?”
“பேசலாம்!”
“குத்புதீனின் நான்காவது மனைவிக்கு எனது கேள்வி. ‘நீங்க ஓதி படித்திருக்கிறீர்களா? தினம் ஐந்து வேளை தொழுகிறீர்களா? மறுமைநாளில் நம்பிக்கையுண்டா?”
“ஓதி படித்திருக்கிறேன். தினம் ஐந்து வேளை தொழுகிறேன். மறுமைநாளில் முழு நம்பிக்கையுண்டு!”
“உங்களது போழகில் மயங்கித்தானே குத்புதீன் உங்களை நான்காவதாக மணந்து கொண்டார்?”
“ஆம்!”
“குத்புதீன் உயிரோட இருக்கும் போது சொத்துகளை பற்றி எதாவது பேசியிருக்கிறீர்களா?”
“இல்லை!”
“சொத்துகளை எல்லாம் எனக்கே தானமாக எழுதி வைத்து விடுங்கள் என நீங்கள் தூபம் போட்டது உண்டா?”
“இல்லை!”
“சொத்துகள் விஷயமாக நீங்கள் ரகசியமாக வக்கீல்களை அணுகியது உண்டா?”
“இல்லவே இல்லை!”
“சரி. நேரடியாக பிரதான கேள்விக்கு வருகிறேன். குத்புதீன் தனது அனைத்து சொத்துகளையும் உங்களுக்கு தானமாக எழுதி வைத்துள்ளாரே. அது உங்களுக்கு உடன்பாடா?”
“உடன்பாடு இல்லை. ஆனால் சட்டரீதியான மரணசாசனம் என்னை கட்டுப்படுத்துமே!”
“நான் உங்களுக்கு திருக்குர்ஆனின் 2 : 181, 182 வசனங்களை படித்துக் காட்டுகிறேன், உன்னிப்பாய் கேளுங்க எல்லோரும்!”
அனைவரும் கூர்ப்பாகினர்.
“மரணசாசனமாகிய அதனைக் கேட்டதற்கு பின்னர் எவரேனும் அதனை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் மரணிப்பவர் கூறும் சாசனத்தை செவியுறுபவனாகவும் அதனை மாற்றும் பாவிகளின் செயலை அறிந்தவனுமாயிருக்கிறான்.
ஆனால் மரணசாசனம் கூறியவரின் சாசனத்தில் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து அந்த சாசனப்பொருளை அடையக் கூடியவர்களிடையே சமாதானம் செய்து அதனை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் அவர் மீது மிக மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கிறான்!”
திருக்குர்ஆன் வசனத்தை வாசிக்கக் கேட்டு அனைவரும் மௌனித்தனர்.
“இப்ப புரியுதா நான் ஏன் வந்திருக்கேன்னு. ஒரு நியாயமில்லாத மரண சாசனத்தை குத்புதீன் எழுதினார். நான் தடுத்தேன். அவர் கேக்கல. இப்ப நான் திருக்குர்ஆன் வசனப்படி உங்களிடம் முறையிட வந்திருக்கேன். நாம இந்த உலகத்ல அதிகபட்சம் நூறு வருஷம் உயிரோட இருப்போமா? நமது நிலையான வாழ்க்கை மறுமைநாளில் பரிசளிக்கப்படும் சொர்க்கம் அல்லது நரகத்தில் தானே? ‘குத்புதீனின் மரண சாசனத்தை மதிக்கிறேன். தானமாய் கொடுக்கபட்ட சொத்துகளுடன் நான் சுதந்திரமாக வாழப் போகிறேன். நான் வேறெந்த சமாதான பேச்சும் விரும்பவில்லை.’- என குத்புதீனின் நான்காவது மனைவி கூறலாம். ‘எங்களின் புருஷனின் சொத்தை புதுசா வந்தவ எப்படி அனுபவிக்க விடுவோம்? நீதிமன்றத்தில் முறையிடப் போகிறோம்’- என மீதி மூன்று மனைவிகள் பொங்கி எழலாம். மீதி வாழ்நாள் முழுக்க நீதிமன்றம் வழக்கு, கீழ்கோர்ட் தீர்ப்பு, முறையீடு, வாய்தா, அடிதடி, வெட்டுக்குத்து, பழிக்குபழி, இரத்தத்துக்கு இரத்தம் என நான்கு குடும்பங்களும் ஆயுளுக்கும் அல்லாடலாம். இவை அனைத்தும் வேண்டாமென்றால் எனது சமாதான உடன்படிக்கைக்கு நீங்கள் நால்வரும் உடன்படலாம்!’
கிசுகிசுப்பாய் அனைவரும் குழுமம் குழுமமாய் பேசிக்கொண்டனர்.
நான்காவது மனைவி மெதுவாக குரலுயர்த்தினாள். “உங்க சமாதான உடன்படிக்கை என்ன? இறந்தவரின் மரணசாசனத்தை அமுல்படுத்தாமல் ரத்து செய்து இஸ்லாமிய சொத்துரிமை சட்டப்படி நான்கு மனைவிமார் மற்றும் குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுத்து விடலாம் என்கிறீர்கள். அப்படித்தானே?”
“ஆம்!”
“இறந்துபோன என் கணவரை மற்ற மூன்று மனைவியருக்கு சமமாக நானும் நேசிக்கிறேன். வாழ்க்கைக்கு பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கையல்ல. நியாயமாயும் நீதமாயும் பிரித்துக் கொடுக்கப்படும் பங்கு எனக்கும் எனது மகளுக்கும் போதுமானதே. எனது கணவரின் மனைவிமார்கள் எனக்கு மூத்தசகோதரிகள் போல. எனது கணவரின் முதல் மூன்று மனைவியருக்கு பிறந்த குழந்தைகள் எனக்கும் பிறந்த மூத்தகுழந்தைகள் போல. உடன்பிறவா சகோதரிகளுக்கும் பெறாமல் பெத்த மகன் மகளுக்கும் விட்டுத்தராமல் நான் வேறு யாருக்கு விட்டுத் தரப்போகிறேன்?”
முதல் மூன்று மனைவிகளும் நான்காவது மனைவியை பாய்ந்து கட்டிக் கொண்டனர். “உன்னைப் போய் தவறாய் எடை போட்டு விட்டோமே! எங்களை ஆண்டவன் மன்னிக்கட்டும். உன்இடத்தில் நாங்கள் இருந்தால் இந்த சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துவருவோமா என்பது சந்தேகமே!” ஆனந்தகண்ணீர் உகுத்தனர்.
இஸ்லாமிய சொத்துரிமை சட்டப்படி அவரவருக்கு சேரும் பங்குகளை வழக்கறிஞர் அஜீஸ் அறிவித்தார்.
அனைவரும் ஆமோதித்தனர்.
குத்புதீனின் தானபத்திரத்தை ரத்து செய்து விட்டு, புதியபத்திரத்தை தயாரித்தார். அனைவரும் தாங்கள் பெற்ற பங்குகளை ஆமோதித்து கையெழுத்திட்டனர். “முறைப்படி புதிய பத்திரத்தை பத்திர அலுவலகத்தில் பதிந்து ஆளுக்கொரு நகலை தந்து விடுகிறேன்!” அறிவித்தார்.
வரவேற்பறையில் குதூகலம் பொங்கியது.
- வந்த அலுவலை மங்களகரமாய் முடித்துவிட்டு கிளம்பும் அஜீஸ் ஒரு ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து முதல் மனைவியின் மூத்த மகனிடம் கொடுத்தார். “உங்கத்தாவிடம் ஒரு பந்தயம் கட்டி ஆயிரம் ரூபா தோற்றுவிட்டேன். இதனையும் முறைப்படி விகிதாச்சாரப்படி பங்கு பிரித்துக்கொள்ளுங்கள்!”
“என்ன பந்தயம்?”
“எல்லா சொத்துகளையும் நான்காவது மனைவிமேல் தானமாய் உங்கத்தா எழுதி வைத்தார். இது அநியாயம் என்றேன். அத்துடன் நான்காவது மனைவிகள் எப்போதுமே பணத்தாசை பிடித்தவர்கள் என்றேன். தான் எழுதும் தானபத்திரத்தை ரத்து செய்ய தனது நான்காவது மனைவி உடன்படுவாள்- அவள் நல்லவள்- பேராசை இல்லாதவள் என்றார் உங்கத்தா. தானபத்திரத்தை ரத்து செய்ய நான்காவது மனைவி ஒத்துக் கொள்ளமாட்டார். ஆயிரம் ரூபாய் பந்தயம் என்றேன்.. அவரிடம் பந்தயத்தில் தோற்று விட்டேன்!”
“பந்தயத்தில் தோற்றாலும் ஈமானால் ஜெயித்துவிட்டீர்கள் அஜீஸ். நல்ல வக்கீல்கள் நல்ல மூமீன்களாக திகழ்வது மிகமிக அரிதான விஷயம். உங்களைப் போன்றோர் இறைவன் இஸ்லாமிய சமுதாயத்துக்கு அளித்த நன்கொடை!”
“என் தந்தையின் தானபத்திரத்தால் நடுத்தெருவுக்கு நானும் எனது தாயாரும் வந்தோம். அந்த நிலை வேறு யாருக்கும் வர விடுவேனா?”
அஜீஸ் மனத்திற்குள் முணுமுணுத்தார்.
Leave a comment
Upload