தொடர்கள்
கற்பனை
கடவுள் கொதித்தார்! -தில்லைக்கரசிசம்பத்

பூமியில் நடக்கும் அத்தனை களேபரங்கள், சண்டைகள், பாலியல் கொடுமைகள், இனமத சாதிப் படுகொலைகள் என பல்வேறு பிரச்சனைகளால் ஏற்கனவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்த கடவுள், “இந்த கொரோனா காலத்தில் கூட இப்படி அநியாயம் பண்றானுங்களே!” என்று வெறுப்பாகி, உலகில் வாழும் அத்தனை மக்களின் மூளையிலிருந்து மதம் என்கிற ஒரு கான்செப்ட்டை தடாலென்று அழித்து விட்டார்.

கொசுறாக புனித நூல்களையும், வேத புத்தகங்களையும் மத அடையாளங்களுக்கான அனைத்து சின்னங்களையும் ஒரு சொடுக்கு போட்டு மறைய வைத்தார்.

பூமியில் மக்கள் எப்போதும் போல காலையில் கண்விழித்தனர். எப்போதும் போல் பல் விளக்கி விளக்காமல், குளித்து குளிக்காமல் காலை உணவை உள்ளே தள்ளி விட்டு, அவரவர் வேலையை பார்க்க வீட்டை விட்டு வெளியே வந்தனர். ஐரோப்பிய நாடுகளில் கார்கள் ட்ராஃபிக்கில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்க... மக்கள் சாலை ஓரங்களில் இருந்த பிரமாண்டமான தேவலாயங்களை கண்டு “என்ன கட்டிடம் இது? எதற்காக இருக்கிறது..?” என யோசித்துக் கொண்டே சென்றனர். அதே போல மசூதிகளையும் கோயில்களையும் புத்த விஹாரங்களையும் அதிசயத்து பார்த்தனர்.

சிலர் உள்ளே என்ன‌ இருக்கிறது என்று ஆர்வமாக உள்ளே நுழைய ஆரம்பித்தனர். அந்தந்த வழிபாட்டு தலங்களில் இருந்த‌ பூசை போட்டவர்கள் எதற்காக இங்கே இருக்கிறோம் என்று குழம்பி அவரவர் இருப்பிடத்திற்கு சென்றனர்....

சிறிது நாட்களில் உலகின் அத்தனை வழிபாட்டு தலங்களையும் அவற்றின் பழமை தன்மைக்கேற்ப மியூசியங்களாக்கி, பாக்கியை கலை பொக்கிஷங்கள் என தொல்பொருள் ஆராய்ச்சி மையங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

புது வழபாட்டு தலங்களை, கோவிட் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாகவும், மீதியை பள்ளிகளாகவும் மாற்றியது அரசாங்கம்.

மத்திய கிழக்கு நாடுகளில் சியா - சன்னி என்று சண்டை இட்டுக் கொண்டிருந்தவர்கள், எதற்காக நாம் சண்டை போடுகிறோம் என திகைத்து, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு குடும்பம் மற்றும் பிள்ளைக் குட்டிகளை பார்க்கச் சென்றனர். நம் நாட்டில் மதங்கள் மறைந்ததால் சாதிகளும் மறைய... சாதி ரீதியாக பாலியல் வன்முறை செய்த தங்கள் மகன்களுக்கு ஆதரவாக “என் மகன் அந்த இனப் பெண்ணை ஏன் தொடப்போகிறான்” என வக்காலத்து வாங்கிக் கொண்டு இருந்த தாய்மார்கள் எல்லாம் “ஏண்டா இப்படி ஒரு பெண்ணை நாசம் செய்தீங்க..?” என்று தத்தம் மகன்களை தாங்களே செருப்பு, விளக்கமாற்றால் அடித்து போலீசிடம் வந்து தாமாகவே ஒப்படைத்தனர்.

தமிழகத்தின் ஒரு ஊரில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் என பஞ்சாயத்து மீட்டிங் நடக்கும் சமயம்... ஏனென்று தெரியாமலேயே தரையில் உட்கார்ந்த இன்னுமொரு பஞ்சாயத்து தலைவியை, “ஏம்மா கீழே உட்காருரீங்க..?” என அங்கிருந்தவர்கள் கேட்க... “தெரியலைங்க.. போன தடவ கீழ தானே உக்காந்தேன்” என்ற பெண்மணியிடம்... “எந்திரிச்சு எங்க பக்கத்துல சேர்ல உட்காருமா. மீட்டிங்க் முடிஞ்சோன நம்ம வீட்ல தான் எல்லாருக்கும் சாப்பாடு. மறக்காம வந்துருங்க.!” என அன்போடு அழைத்தனர்.

இன்னொரு கிராமத்தில்....

“ஏம்ப்பா..! ஆடு வயல்ல மேயரது சகஜம்... இதுக்கு போயி இப்படி என் கால்ல விழுவலாமா..? வயசுல மூத்தவரு நீங்க..!” என விழ வந்தவரை, கட்டி அணைத்து பக்கத்தில் அமர வைத்தார் ஒரு கிராமத்து‌ பெரியவர். சுற்றி நின்ற மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கைதட்டினர்.

வரும் தேர்தலுக்காக வேட்பாளர் தேர்வுக்காக நேர்முக இன்டெர்வ்யூ நடத்திக் கொண்டிருந்த நம்மூர் அரசியல்வாதிகள்... ‘எதுக்கு தகுதி இல்லாத இவரை கூப்பிட்டோம்??!!’ என சாதி ஓட்டுக்களுக்காகவே சீட் கொடுக்க அழைக்கப்பட்ட அரசியல்வாதியை எதிரில் உட்கார வைத்து தலையை சொறிந்து முழித்துக் கொண்டு இருந்தனர்.

மனதில் இருந்த மிருகவெறி மறைந்ததால், மதம் மாற்ற வெளிநாடுகளிலிருந்து வந்த கோடிக்கணக்கான பணம், புதிதாக தேவாலயங்கள், புத்த விஹாரங்கள், கோயில்கள், மசூதி, தர்க்கா என வழிப்பாட்டு தலங்களை கட்டுவதற்காக வந்த நிதி என எல்லாவற்றையும் வெறித்து பார்த்த மதவாதிகள்... “எதற்கு இவ்வளவு பணம்..?” என்று குழம்பி, சரி.. இல்லாத ஏழை மக்களுக்கு வீடு, ஏழைக் குழந்தைகளின் படிப்பு என செலவு செய்வோம் என்று அத்தனை பணத்தையும் சமுதாயத் தொண்டிற்கு ரீடைரக்ட் செய்ய ஆரம்பித்தனர்.

மதங்கள் மறைந்ததால் “ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் பெண்”, “ஆணுக்கு பெண் அடங்கியவள்...” “பெண் என்பவள் உரிமை பெற்ற ஆணுக்கு விளைநிலம் போன்றவள்” என பெண்ணை சொத்து போன்று ஆணின் உரிமையாக்கிய டுபாக்கூர் வசனங்களும் மறைந்ததால், பெண்ணடிமைத்தனமும் நீங்கி கட்டுப்பெட்டித்தனம் அகன்று பெண்கள் அனைவரும் சந்தோஷமாக சுதந்திரக்காற்றை சுவாசித்தனர்.
சிறிது நாட்களுக்கு எந்த சண்டைகளும் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ ஆரம்பித்தனர்.

மறுநாள் அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்ற ஒரு கறுப்பரை காரில் வந்த வெள்ளையன் துப்பாக்கியால் சுட்டு “you black..! You don't deserve to be here.!” என கூறி, அவன் ரத்தவெள்ளத்தில் வீழ்வதை பார்த்துக் கொண்டே புன்னகைத்து காரோட்டிச் சென்றான்.

கடவுள் கடுப்பானார். “மதவெறியை ஒழிச்சாலும் நிறவெறியா காமிக்கிற? நானும் அதே கலர் தாண்டா முட்டாப் பசங்களா..! இருடா உங்க எல்லாரையும் கருப்பா மாத்துறேன் பாரு” என சொல்லி கண்ணை மூடி முணுமுணுத்தார்.

மறுநாள் காலையில் தூங்கி விழித்த மக்கள் எல்லாம் தங்கள் நிறம் கருப்பாக இருந்தாலும், எப்போதும் போல தான் இருக்கிறோம் என்று சகஜமாக நினைத்து அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். இதில் அமெரிக்க ஐரோப்ப சைனா நாட்டு பெண்கள் ஆப்பிரிக்கா நாட்டு பெண்களின் அழகிய கண்களும் பெரிய உதடுகளும் நமக்கு இல்லையே என ஏக்கமாக பார்த்து கடந்தனர்.

இனி நிம்மதியாக இருக்கலாம் என கடவுள் பெருமூச்சு விட்டு முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே மதங்கள் இல்லாமை, நிற பேதமின்மை போன்றவற்றால் முதலில் குழம்பி, சிறிது நாட்களுக்கு தங்களுடைய சுரண்டல் வேலைகளை நிறுத்தி வைத்திருந்த பலம் பொருந்திய அரசியல்வாதிகள், ஆயுத வியாபாரிகள், மருந்து வியாபாரிகள், கார்ப்பரேட்கள் பின் சுதாரித்து எப்பவும் போல தாம் வாழ ஏழை மக்களை சுரண்டி நடுத்தெருவில் நிற்க வைக்கும் நடவடிக்கைகளை ஜரூராக நடத்த ஆரம்பித்தனர்.

தீவிரவாத இயக்கங்களும், மதங்களை மறந்தாலும், மக்களை கொல்வதை மட்டும் மறக்காமல், மறுபடியும் அதே வேலைகளை செய்து தங்களின் பலத்தை காண்பிக்க ஆரம்பித்தனர்.

பலம் குறைந்த நாடுகளில் உள்ள வளங்களை திருடுவதற்காக, எப்பவும் போல் அமைதியை நிலைநாட்டுவதாக கூறிக்கொண்டு, உள்ளே நுழைந்து அப்பாவி மக்களை கொத்து குண்டுகள் போட்டு கொல்ல ஆரம்பித்தன வல்லரசு நாடுகள்.

கடவுளுக்கு வெறி ஏறியது. கூட இருந்த அஸிஸ்டெண்ட்டை அழைத்தார் “இந்த நாசமா போனவங்களை திருத்தலாம்னு நினைச்சு சில விஷயங்களை பண்ணேன்.. ஆனா தோத்து போய்ட்டேன். இப்ப அனுப்புனோமே யாரவன் கோவிட் 19 தான அவன் பேரு...?”

“ஆமாம் இறைவா..!”

“சரி...! இப்ப zovid 20 ஐ அனுப்பிடு..!”

“இறைவா..!!!!!!!!!! ஐயோ..!!!! வேண்டாம்..!!!! இவன் தாக்கினால் மனிதர்கள் zombie களாக மாறிவிடுவார்கள்.. தயவு செய்து சிறிது கருணை காட்டுங்கள்..!”

“ஏன்..? ஒருத்தனை ஒருத்தன் கடிச்சு எல்லா பயலுகளும் அழிஞ்சிருவான்னு பயப்படுறியா? போகட்டும்.. திருந்தாத பிறவிகள்.. இது ஒன்னும் அவங்களுக்கு புதுசு இல்லையே.. ஏற்கனவே இவனுங்க நாகரிகம் என்ற போர்வையில் மறைஞ்சிக்கிட்டு ஒருத்தன் இரத்தத்தை இன்னொருத்தன் குடிச்சு அழிச்சிக்கிட்டு தானே இருக்கானுங்க. அதையே இப்ப வெளிப்படையாக செய்ங்கடானு நான் “ஜோவிட்”டை அனுப்புறேன். இனி அடிச்சிக்கிட்டு மட்டுமில்ல.. கடிச்சிக்கிட்டும் சாவட்டும்” என்று கடவுள் முழங்க அண்ட சராசரங்கள் அதிர்ந்து நடுங்கின.

மறுநாள் காலையில் சீனாவின் வூஹான் நகரத்தின் இறைச்சி விற்பனை கூடத்தில் இறைச்சி வாங்க எப்போதும் போல் மக்கள் முண்டியடித்து உள்ளே நுழைய... அங்கே குவிந்து கிடந்த பூனைகளின் இறைச்சிகளில் “ஜோவிட் 20” ஒரு கணம் ஃப்ளோரோசென்ட் பச்சையாக ஒளிர்ந்து அடங்கியது.

“ 给我一公斤..!” (ஒரு கிலோ கொடு) என்ற வாடிக்கையாளரிடம்

“拿去 !” (எடுத்து கொள்ளுங்கள்) என கூறியபடி இறைச்சியை தொட்டு பொட்டலம் கட்டிக் கொடுத்தார் விற்பவர்.

அந்த நொடியில் கடவுள் சிரித்த அட்டகாசமான சிரிப்பொலியால் பூமி முழுவதும் ஒரு கணம் அந்தகார இருள் சூழ, காதை செவிடாக்கும் வண்ணம் பயங்கர சப்தத்துடன் மிக பிரமாண்டமான ஒரு இடி, பூமி முழுக்க ஒரே நேரத்தில் இடித்ததை கண்டு மனிதர்கள் பயந்து, பின் வியந்து, வானை நோக்க ஆரம்பித்த போது... காரணம் தெரியாமலேயே அவர்களின் உடல்கள் சில நொடிகள் நடுங்கின.