தொடர்கள்
தொடர்கள்
புவியை அசைத்த தத்துவங்கள் - 40 - மரியா சிவானந்தம்

2020916155238350.jpg

‘உலக ஆசிரியன் - ஜே கிருஷ்ணமூர்த்தி’

ஏதென்ஸ் நகரத்து சாக்ரடிஸ் உடன் தொடங்கிய பயணம் இத்தொடர்…

இக்குறுகிய பயணத்தில் அயல்நாட்டு மேதைகள், கீழ் நாட்டு அறிஞர்கள், மதங்கள் போற்றும் மகான்கள் என்று பலரைச் சந்தித்தோம். அரிஸ்டாட்டில், புத்தர், கன்பூசியஸ், வால்டேர், மார்க்ஸ், நீட்ஸே, காந்தி, லாட்சு, சாணக்கியர், விவேகானந்தர் என்று இப்புவியில் ஞான விதை விதைத்து உலக வரலாற்றில் தடம் பதித்தவர்களுடன் உரையாடினோம். இவர்களின் வரிசையில் இன்று நாம் இறுதியாய் சந்திக்க இருப்பவர் ஜே.கே. என்றும் ஜே .கிருஷ்ணமூர்த்தி என்றும் அழைக்கப்படும் ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’. இந்திய மண்ணின் பெருமைக்குரிய மைந்தர். திரைகடலோடி, மனித மனங்களில் புதிய ஒளியை ஏற்றியவர்.

ஜே .கிருஷ்ணமூர்த்தி 11-5-1895 அன்று ஆந்திராவில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்தார். இவரது தந்தை ஜிட்டு நாராயணய்யா, தியசாபிகல் கழகத்தில் பணி செய்து வந்தார். இளமையில் இருந்தே கிருஷ்ணமூர்த்தி ஆன்மிக தேடலைக் கொண்டவராக இருந்தார். தனிமை விரும்பியாகவும், எப்போதும் சிந்தனை செய்து கொண்டே இருப்பவராவும் இருந்தார். 18 வயதில் அவருக்கு ஓர் அபூர்வ காட்சி தோன்றியது. அக்காட்சியில் அவரது இறந்துபோன அக்காவும், அம்மாவும் தோன்றினார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இளம் கிருஷ்ணமூர்த்தி ஆன்மிகத்தின் ஆழ, அகலங்களை உணரத் தொடங்கினார்.

1915 ஆம் ஆண்டு நாராயணய்யா தியசாபிகல் கழகத்தில் இருந்து ஒய்வு பெற்ற பின், கிருஷ்ணமூர்த்தியையும், அவரது தம்பி நித்யானந்தாவையும் அங்கு சேர்த்தார். உள்ளொளி முகத்தில் சுடர் விட அடையாறு நதிக்கரையில் நின்று கொண்டு இருந்த கிருஷ்ணமூர்த்தியைச் சுற்றி நிலவும் ஒளிவட்டத்தை தம் கண்களால் கண்ட அக்கழக நிர்வாகி சார்லஸ் வெப்ஸ்டர் லீட்பீட்டர், அவரின் அபூர்வ ஞானத்தை அறிந்து கொண்டார். கிருஷ்ணமூர்த்திக்கு கழகத்தில் சிறப்பான கல்வியும், யோக ,தியான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. அன்னி பெசன்ட் அம்மையாரின் அன்புக்குரிய மகனாக ஜே.கே. நடத்தப்பட்டார்.

தியசாபிகல் கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட ஜேகே, பின்னர் உலகம் முழுதும் சுற்றி ஆன்மிக உரைகளை தரத் தொடங்கினார். அவரது பெயர் தத்துவ உலகத்தில் சிறப்பு மிக்க பெயராக நிலைபெற்றது. அவர் தன்னை சாதி, மதம், நாடு, இனம், மொழி என்னும் எல்லைகளுக்குள் அடக்கிக்கொள்ளாமல் எல்லோருக்கும் உரியவராக, எல்லா மதத்தவரும் தேடுபவராகவும் இருந்தார். கிழக்கின் விண்மீன் (Order of the star in the east) OSE என்ற அமைப்பை கழகம் நிறுவியபோது, அவர் அதில் முக்கிய அங்கம் வகித்தார். சில ஆண்டுகளுக்கு பின் அக்கழகத்தில் இருந்து மனச்சோர்வுடன் ஜேகே விலகினார்.

அதன் பின் ஜேகே எல்லைகள் அற்ற விரிந்த வானம் போல பரந்து விரிந்து, மனித சமூகத்தின் காயங்களை ஆற்றினார். உள்மனக்காயம் ஆற்றும் ஓர் ஆன்மிகப் புரட்சியை அவர் தொடங்கி வைத்தார். ‘வெளியில் இருந்து வருபவை நம்மை பாதிப்பதில்லை. நம் மனமே நம் காயங்களுக்கும், துன்பங்களுக்கும் காரணம்’ என்றார். மனித உறவுகளின் ஆழத்தையும், அழகையும் ரசித்தார். மதக்கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பேருண்மைகளை, எளிய மொழியில் விளக்கினார். சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆண்டாண்டு காலமாக நாம் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்களை வினா எழுப்பினார். எளிய, அமைதியான வாழ்க்கை வாழ நெறிகளைக் கற்பித்தார்.

அன்பு, கருணை, இரக்கம் போன்ற பண்புகள் இன்றி மனித வாழ்வு உருக்குலைந்து போவதை அவர் விமர்சித்தார். “உங்கள் வாழ்க்கையை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?... வாழ்க்கை எனும் அசாதாரணமான ஒன்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதில், துன்பம், இன்பம், அச்சம், குற்றவுணர்வு, சித்திரவதை, தனிமைப்படுதல், நிராசை முதலியவையுடன், வாழ்க்கையின் அழகும் அடங்கும். இவையெல்லாவற்றையும் நீங்கள் பெற்றீர்கள். அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் இக்கேள்வியை கேட்டுக்கொள்ளும்போது, துயரத்துடன் உறங்கப் போகாதீர். ஏனெனில், நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. ஒரு வாழ்க்கை உங்களுக்கு தரப்பட்டிருக்கிறது, அது இந்த உலகத்தின் விலைமதிப்பற்ற ஒன்று. இருந்தும், நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார் ஜேகே. ஆம், வாழ்க்கை நமக்கு நிறைய தந்துள்ளது, வாழ்க்கைக்கு நாம் என்ன செய்கிறோம்?

சமூகத்தில் ஏற்படும் பிளவுகள், நெருக்கடிகள், துன்பங்கள் எல்லாவற்றுக்கும் மனித சிந்தையை காரணமாக காட்டுகிறார் ஜேகே. ‘ஆழ்மன அமைதி பெற்ற மனிதன் சமூகத்தில் மாற்றங்களை, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறான். சமூகத்தில் நிலவும் வெறுப்புணர்ச்சி, பகைமை, வன்முறை இவை யாவும் மனித மனத்தின் ஆங்கார வெளிப்பாடுகளே’ என்று அவர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். காருண்யம் நிரம்பிய உள்ளத்தை கொண்டவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

“எது நித்தியமான, களங்கமற்ற, புனிதமானதாக இருக்கிறதோ, அதை ஒருவன் கண்டறிய வேண்டும். காருண்யம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அதாவது, “துயரத்தில் – உங்கள் துயரத்தை மட்டுமின்றி, உலகத்தின் துயரத்தின் முக்கியத்துவத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான் அதை கடந்துபோக முடியும். துயரத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தை புரிந்துகொள்ளும்போது மட்டுமே காருண்யம் உதயமாகும். காருண்யமுள்ள மனதினால் மட்டுமே தியானிக்கவும், நித்தியமான புனிதத்தை கண்டறியவும் முடியும்” என்கிறார் ஜேகே.

நாம் எப்போதும், யாருக்கேனும் நம்மை நிரூபித்துக் கொண்டே இருக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். இது தேவையற்ற வீண் வேலை என்பார் அவர். நாம் நாமாக, நம் குற்றங்குறைகளுடன், பலவீனங்களுடன் நம்மையே ஏற்றுக் கொள்வதும், நம்மை நேசிப்பதும் மிக முக்கியமான தேவை. சடங்குகள், பாசாங்குகள் இவை இல்லாத ஆழ்மனதில் அமைதி கொண்டு வாழும் மனிதத்தை அவர் விரும்பினார். ‘நம் சிந்தனைகள் தெளிவாக வேண்டும், சிந்தனைகளை உற்று நோக்குங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார் அவர்.

“நீ உன்னை இந்தியன் என்றோ, கிறிஸ்தவன் என்றோ, இஸ்லாமியன் என்றோ உன்னை அழைத்துக் கொள்ளும் போதே வன்முறையாளன் ஆகிறாய். உன்னை நீ இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கையில், மனித சமுதாயத்தில் இருந்து உன்னைத் துண்டித்துக் கொள்கிறாய். நாடு, பாரம்பரியம், நம்பிக்கை என்று உன்னை நீ வேறுபடுத்திக் கொள்கையில் வன்முறையாளனாக உருவாகிறாய்” என்னும் ஜேகே மனுக்குலத்துக்கே சொந்தமானவர்.

ஜெ. கிருஷ்ணமூர்த்தி ‘உலக ஆசிரியன்’ என்று கொண்டாடப்பட்டவர். அவரது நூல்கள், அளவற்ற மன அமைதியைத் தரக்கூடியவை. ஆனால் அவரோ “அமைதி, நூல்களில் இல்லை உன்னில் உள்ளது” என்பவர். The first and last freedom, The only revolution, Krishnamurthi note book என்னும் நூல்களை இவர் எழுதி உள்ளார். இவரது உரைகள் பல புத்தகங்களாக வடிக்கப்பட்டு, இந்திய தத்துவத்தின் மேன்மையை உலகுக்கு பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் 80)

என்னும் குறள் நெறி நின்று அன்பு, விடுதலை. உலக அமைதி மற்றும் சமத்துவத்தை கற்பித்தார் ஜேகே. இம்மண்ணில் தொன்னூறு ஆண்டுகள் வாழ்ந்து, ஞானப்பழமாக கனிந்து பின் உடல் துறந்தார்.

இத்தொடர் வழியாக பல்வேறு தத்துவங்களை, சித்தாந்தங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். ‘ஸ்டிபன் லா’ எழுதிய “The great philosophers” என்னும் ஆங்கில புத்தகமும், இணையமும் எனக்கு இத்தொடரினை எழுத மிகவும் உறுதுணையாக இருந்தன.

மீண்டும் மற்றொரு தொடரில், வேறொரு ‘பொருளுடன்’, விகடகவி வாசகர்களான உங்களை விரைவில் சந்திக்கிறேன். நன்றியும் மகிழ்ச்சியும்.

The moment you have in your heart this extraordinary thing called love and feel the depth, the delight, the ecstasy of it, you will discover that for you the world is transformed.

J.Krishnamurthi

- உள்ளம் நிறைந்தது.