இந்தியாவில் கடந்த 12 வருடங்களாக ஏப்ரல் தொடங்கி மே மாதம் வரைக்கும் 20-20 ஐபிஎல் தொழில்முறை கிரிக்கெட்டை ஸ்டேடியங்களில் ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வந்தனர்.
உலகெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தொலைகாட்சிகளில் லைவ்வாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசித்து வந்தனர்.
ஐசிசி கிரிக்கெட் வாரியம் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் வேறு எந்த பன்னாட்டு போட்டிகளையும் நடத்துவதில்லை.
2010ம் ஆண்டு யூடியூப் சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பட்ட முதல் விளையாட்டு நிகழ்வு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிதான்.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த விளையாட்டுப் போட்டித் தொடர் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 6.3 பில்லியன் அமெரிக்க டாலராக சென்ற 2018ம் ஆண்டில் இருந்தது. 2019ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் பிராண்ட் மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2015ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 பில்லியன் ருபாய் அளவிற்கு பங்களித்திருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
2008ம் வருடம் முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இந்தியாவின் சோனி டிவி நிறுவனம் மற்றும் வோர்ல்ட் ஸ்போர்ட் நிறுவனம், சிங்கப்பூர் கூட்டாக இணைந்து பத்து வருடங்களுக்கான ஒப்பந்த உரிமையை 1,026 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்தி நேரடி ஒளிபரப்பு செய்து வந்தனர்.
2018ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் டிவி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் 2.55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்தி ஐந்து வருடங்களுக்கு ஒளிப்பரப்பு உரிமையை பெற்றது. இது சோனி டிவி மற்றும் வோர்ல்ட் ஸ்போர்ட் நிறுவனம் செலுத்திய ஒப்பந்த உரிமை தொகையை விட 158 சதவீதம் அதிகமாகும். ஐபிஎல் கிரிக்கெட்டை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஹாட்ஸ்டார் என்ற செயலி மூலமாகவும் பார்க்கும் வசதியும் தற்போது உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் என்பது சிலருக்கு பணம் கொழிக்கும் மரமாக இருந்தாலும் இந்தியா மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டாக உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏல முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
13-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவது நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் நேரடியாக ஸ்டேடியங்களில் பார்வையிட தடை விதிக்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, பாதுகாப்பு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டில் போட்டிகள் நடத்த முடிவாகி தற்போது அங்கு போட்டிகள் நடைபெறுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறுவதால் வீரர்கள் களையிழந்து தான் ஆடுகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சிக்சருக்கும், நான்கு ரன்களுக்கு பிறகும் அழகிகள் நடனமாடும் போது, ரசிகர்கள் எழுப்பும் கரவொலி தான் முந்தைய ஐபிஎல் போட்டியின் ஹைலைட், தற்போது அவையெல்லம் இன்றி ஆட்டம் முழவதும் உற்சாகமின்றி நடைபெறுகிறது.
இருப்பினும் ஐபிஎல் போட்டிகளை டிவி நேரலையில் பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இன்றளவும் மவுசு குறையாமல் பார்த்து வருகின்றனர்.
தற்போது நடைபெறும் போட்டிகளில் நடப்பு ஐபிஎல் சாம்பியன் மும்பை அணியின் கையே ஒங்கி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வயதாகி விட்டது என்ற தோற்றம் தற்போது தென்படுவதால் ஆட்டத்தில் இன்னும் போதிய சூடு பிடிக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னாவும் மும்பை அணியின் மேஜிக் பவுலர் லசித் மலிங்கா ஆகிய இரு வீரர்களும் இடம்பெறாதது இரு அணிகளுக்கும் சம அளவில் பின்னடைவாக உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரிடையர் ஆகியுள்ள மகேந்திர சிங் தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எப்படியாவது 2020 ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தினை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு விளையாடி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை நடந்த 7 ஆட்டங்களில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே-ஆப் சுற்றிற்கு செல்ல கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது.
கடந்த புதன்கிழமையன்று சன் ரைஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது, சன்ரைஸர்ஸ் அணிக்கு எதிரான 18 வது ஒவரில் 2வது பந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர் ஷர்துல் தாகூர் ஸ்டிம்பிற்கு வெளியே ஒயிடாக வீசினார். எதிர்முனையில் இருந்த அம்பயர் பால் ரேஃபில் wide சிக்னல் கொடுக்க தனது கைகளை தூக்க முயல...அப்போது களத்தில் நின்று விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி, கோபத்துடன் அந்த அம்பயரை பார்த்து முறைக்க... தோனியின் கோபமான பார்வையை பார்த்து, வைட் பால் சிக்னல் கொடுக்காமல்... தனது முடிவினை மாற்றிக் கொண்டு அடுத்த பந்து வீசுவதற்கான சிக்னலை தந்தார், அம்பயர்.
இப்படி தோனியின் கோபப் பார்வையால் அம்பயர் தனது முடிவினை அறிவிக்காமல் திரும்ப பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
“அம்பயர்களின் பணி மிக கடினமானது என்பதால் அவர்கள் மீது எனக்கு எப்போதுமே இரக்கப் பார்வை உண்டு . பந்து வைடு என்று தெரிந்தும், தோனியின் கோபப் பார்வையை பார்த்த பின்னர் அம்பயர் தன் முடிவை மாற்றியது தவறு” என்று கிரிக்கெட் வர்ணணை செய்து கொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப் தனது கருத்தினை பதிவு செய்தார்.
கொரனா காரணமாக ஐபிஎல் வெளி நாட்டில் நடைபெற்றாலும் இறுதிப் போட்டியில் மும்பை அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுவதைத்தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே தோனி ஜி...! சற்று கோபம் அடக்கி வெற்றியை நோக்கி முறையாக முன்னேறுங்க ஜி!
Leave a comment
Upload