Love you மற்றும் Bye!
வார்த்தை… வார்த்தையில் என்ன இருக்கிறது?
சொல்ல வந்ததையெல்லாம் சொல்லிவிட்டேன் என்று யாரேனும் சொல்ல முடியுமா?
சொல்லி முடிக்காமல், சொல்ல முடியாமல் முடித்த வாக்கியங்கள் தாம் அதிகம்.
யார் மனதில் என்ன நினைப்பு உதிக்கிறதோ, அது வார்த்தையாய்ப் பிரசவிக்கிறது.
அதைக் கொட்டத் தான், காட்டத்தான் ஆயிரம் வழித் தயக்கங்கள்.
கேட்ட வார்த்தைகளை விட, கேட்காத வார்த்தைகள் எப்போதும் மதிப்போடு இருக்கின்றன.
இன்னும் பிறக்காத வார்த்தைகள் தான் உயிரோடு இருக்கின்றன.
எழுதியவற்றை விட எழுதாதவை அழகாக இருக்கின்றன. வாசித்தவற்றை விட வாசிக்காதவை சுவாரசியமாக இருக்கின்றன.
எதிரில் யாருக்காகச் சொல்கிறோமோ, அந்தக் காதுகள் இருக்கிறதோ இல்லையோ, சொல்லுதல் ஒரு ஆசுவாசம்.
நேயர் விருப்பம் இல்லாத பாடல்கள் ஒலிப்பதில்லையா? ஒலிக்கின்றன, எல்லோர் வாழ்விலும்.
……
கல்லூரியின் வகுப்புகளுக்குக் கடைசி வாரம். எல்லோரும் மாய்ந்து மாய்ந்து, உருகி, நினைவுகளைக் கிள்ளி, கிளறி, வருடி… எழுதிப் பகிர்ந்துகொண்ட ஆட்டோகிராஃப் நோட்டுகள். கிட்டத்தட்ட இருநூறு பேருக்காவது (எல்லாத் துறை நண்பர்களுக்கும் சேர்த்து) நான் எழுதியிருப்பேன். முகம் தெரியாதவர்கள் கூடத் தேடி வந்து சந்தித்தார்கள். நான் மூன்று நோட்டுகள் வைத்திருந்தேன்.
கல்லூரி முதல்வர் முதல் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எழுதுவதற்கு ஒன்று. (கொஞ்சம் உயர்ந்த ரக… அதிக வண்ணத் தாள்கள்.)
மற்ற இரண்டு, இன்னும் அழகான தோற்றத்தில். நிறைய வெள்ளைப் பக்கங்களுடன். எழுதுவதற்கு முன்பே, எல்லோரும் கைகளில் வைத்து அழகு பார்த்தார்கள்.
எழுதக் கொடுத்தேன். காலையில் போன மற்ற இரண்டு நோட்டுகளும் வந்துவிட்டன.
ஜூனியர்களுக்கானது மட்டும் இரண்டு நாட்களாக வரவில்லை. ஒவ்வொரு கையாய் மாறி, மாறி… ஒருவழியாய் என் கைக்கு வந்து விட்டது.
வெள்ளை வெளேரென்று போன நோட்டில், அப்பழுக்கற்ற அன்பின் பழுப்பு படர்ந்திருந்தது. பக்கங்களைப் புரட்டினேன். நீல நீல மை…. பழகாதவர்களிடமிருந்து கூட நீள நீளப் பகிர்தல்கள். தமிழ், ஆங்கிலம், பாராட்டி, நன்றி சொல்லி, நெகிழ்ந்து எழுதி… எல்லோரின் கையொப்பங்கள்.
வரி விடாமல் முடித்துக்கொண்டிருக்கும்போது,
அதன் கடைசி ஆறு பக்கங்கள் மட்டும்… ஒரு கொத்தாக இருந்தது. மொத்தமாய் பத்து ஸ்டேப்ளர் பின்களால் தோரணம் போல் அடைக்கப்பட்டு…
இன்ப அதிர்ச்சி… யார் இப்படி? எந்த ஜூனியர்? உள்ளே ஒளிந்திருந்த எழுத்தெல்லாம் தடங்களாகத் தெரிந்தன. அத்தனை பக்கங்கள் எழுதிவிட்டு, என்னைத் தவிர யாரும் வாசித்துவிடக் கூடாது என்று பதுக்கி வைத்தது யார்?
சுவாரசியம் தாளாமல், ஒரு இடைவெளியில் விரலை வைத்து விரித்து, ஓரு எழுத்தையாவது இப்போது வாசித்துவிடலாம் என்று கண்களை நுழைத்தேன்….
“ஷ்………. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…..” - நான் எதிர்பாராத திசையிலிருந்து அந்தக் குரல், ஜூனியர் பெண்.
“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்…. இப்போ வாசிக்காதீங்க. பின்னைப் பிரிக்காதீங்க. காலேஜ் எக்ஸாம் முடிஞ்சதும் படிங்க… போதும்….”
அவளது அன்றைய காஸ்ட்யூம்… பாவாடை தாவணியில் ஒரே ஓட்டமாய் ஓடிப் போனாள். மூடி வைத்துவிட்டேன்.
இன்னும் சில நாட்கள் தான். அவள் எதிர்ப்படும்போதெல்லாம் என்ன எழுதியிருக்கிறாள் என்று தெரியாமல் எப்படி முகத்தை வைத்துக்கொள்வது?
அதில், நான் சந்தோஷப்படும்படி இருக்குமா? …….குழம்பும்படி இருக்குமா? தெரியவில்லையே!
……..
கல்லூரி முடிந்து நண்பர்களின் சைக்கிளில் உட்கார்ந்து சுற்றும்போது, வண்ண நோட்டைத் தவிர, மற்ற இரண்டு ஆட்டோகிராஃப் நோட்டுகளை நண்பனின் பையில் வைத்தேன். தேர்வுகள் முடிந்தபிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பத்து நாட்கள் முடிந்தது, நண்பனிடம் ஞாபகமாய்க் கேட்டேன். வீடு மாற்றிக்கொண்டிருந்தார்கள். அவனுக்கும் நினைவில்லை. பதறிப்போய்த் தேடினான். மூன்று நாட்கள் கழித்து வந்தான். “மன்னிச்சிருடா! எங்கேயும் காணல.” கலங்கிப் போனான்.
எல்லா நண்பர்களின் வார்த்தைகளும் (ஒரே முறை… அவசர கதியில் வாசித்ததோடு சரி!) தொலைந்து போய்விட்டன (அவன் எழுதிய புரட்சிகரமான ஆங்கில வாழ்த்து உட்பட!).
ஏனோ, எனக்குப் பெரிய வருத்தம் தோன்றவில்லை. பேருந்து நிலையத்தில் என்னை அவன் இறக்கிவிட்டு இருபது முறை மன்னிப்பு கேட்டுவிட்டுப் போனான்.
வீடு செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். சட்டென்று ஒரு அதிர்ச்சி….
ஓ… அந்த ஆறு பக்கங்கள்……!!!!!! இன்னும் பின்களைப் பிரிக்கவேயில்லையே… படிக்கவேயில்லையே…. அதுவும் சேர்ந்து போய் விட்டதே! முதன் முதலாக ஒரு இழப்பின் வலி.
அதன் பிறகு, அந்த நோட்டையும், அந்தப் பெண்ணையும் பார்க்கவேயில்லை. இரவெல்லாம் வைத்து, வைத்து… என்ன எழுதி, எதை நிரப்பிக் கொடுத்தாளோ?அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்காக ஒருத்தி தாள்களில் பரிமாறிய அன்புணவு. அன்புணர்வு. நான் புசிக்காமல் தவறவிட்டேன்.
நான் படிக்காமலேயே தொலைத்துவிட்டேன் என்று தெரிந்தால் அவளுக்கு(ம்) எவ்வளவு வலிக்கும்!
அதில், நான் சந்தோஷப்படும்படி இருக்குமா? …….குழம்பும்படி இருக்குமா? ….இன்னமும் குழம்பிக்கொண்டிருக்கிறேன்.
வார்த்தையில் என்ன இருக்கிறது? …வார்த்தையில் தான் ஏதோ இருக்கிறது!
…….
வாழ்க்கையின் அபரிமிதங்களில் ஒன்றாக நான் அடைந்த நண்பர், அகவையிலும், அன்பிலும் பெரியவர், வி.கே.புரம். சு. கன்னையா அவர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்.
“கடலாக இருப்பது, உலகில் சேர்ந்த புண்ணிய நதிகளும், சாக்கடைகளும் கலந்த கலவை தான் என்று புரிந்துகொண்டேன். அவற்றில் அழகுள்ள மிகக் குட்டி மீன்களும் இருக்கின்றன. மிகப் பயங்கரமான சுறாக்களும் வாழ்கின்றன. இதன் மத்தியில், அந்த வண்ண வண்ண குட்டி மீன்களை இரசிக்கக் கூடிய ஒரு பக்குவமும், அத்தனை சுறாக்களுக்கும் மத்தியிலும் இவைகள் தங்களைக் காத்துக்கொண்டு வாழ்கின்றது என்று பார்க்கிற பார்வையும் அவசியம்.”
வாஞ்சையாய், இதுவரை இலட்சம் வார்த்தைகள் பகிர்ந்திருப்பார். இருப்பினும், இந்த வார்த்தைகள் என்னைக் கடல் ஆழம் கூட்டிச் சென்றன.
வார்த்தையில் என்ன இருக்கிறது? …வார்த்தையில் தான் பாதை இருக்கிறது!
…….
ஒருமுறை, பாரதி எழுதிய கதைக் காகிதம் தொலைந்தது. மறதியாய் எங்கோ வைத்து விட்டார். வீடு முழுக்க வியர்க்க வியர்க்கத் தேடி, கிடைக்காமல் துடித்துப்போனார்.
“அட விடுங்க பாரதி! எவ்வளவோ எழுதிட்டீங்க. வேற எழுதிக்கலாம். இதையே வேற மாதிரி எழுதுங்களேன்!” என்று சொல்லியிருந்தால் சும்மா விட்டிருப்பாரா? அவர் சிந்தை… அவர் பிரசவம்… அவர் அவஸ்தை…
அவரைத் தவிர மற்றவர்களுக்கு வேடிக்கை!
… ஒரு வார்த்தைக்கு நிகரான இன்னொரு வார்த்தை இருக்கலாம். ஆனால், அதே வார்த்தையா? …இல்லையே! அறிவைக் குடைந்து குடைந்து தேடினாலும், கடந்து போன – தொலைந்து போன வார்த்தையின் உயிர்ப்பு இருக்குமா?
அர்த்தம் கூட ஒரே சாயலில் அமைந்து விடலாம். போன வார்த்தை வேறு இரத்தம். வந்த வார்த்தை வேறு இரத்தம் அல்லவா?
பாரதி தமது கடைசி நாட்களிலும் (கடைசி நாளென்று தெரியாமல்…) எழுதிக் கொண்டிருந்தார். ‘சந்திரிகையின் கதை’ பத்தாம் அத்தியாயம்… முற்றுப் பெறவில்லை. ‘இந்த’ …என்ற ஒரு வார்த்தையோடு நிற்கிறது.
‘இந்த’-க்குப் பிறகு எந்த வார்த்தை எழுத நினைத்தார்? மிச்சம் என்னென்ன சொல்ல நினைத்தார்? தெரியவில்லையே… பார்க்கும்போதெல்லாம் மனசு துடிக்கிறது. அந்தரத்தில் நிற்கிறதே… ஒரு கவிராஜனின் இலக்கியத் தேர்.
ஆனாலும், அது ஓர் அடையாளம்…. பாரதி முற்றுப் பெறாதவர் என்பதைக் கூட அந்த ஒற்றை வார்த்தை காட்டுகிறது.
வார்த்தையில் என்ன இருக்கிறது? …வார்த்தையில் தான் மிச்சம் இருக்கிறது!
…….
எப்போதும், என் உரையாடலை முடித்துவைக்கும் வார்த்தையாய், “Love you” என்று தான் வருகிறது. குழந்தைகள், சக வயதினர், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், திருநங்கையர், தகுதி, புது அறிமுகம், நெடு நாள் உறவு… எந்தப் பேதமுமின்றி…. “Love you” என்று சொல்ல வருகிறது.
வார்த்தையைக் கேட்டவுடன் மலர்ந்து போகிறார்கள். மனம் திறந்து வாங்கிக்கொள்கிறார்கள். அது ஆங்கில வார்த்தை. ஆனால், “உங்களை அன்பு செய்கிறேன்” எனும் தமிழ் நேசம் தோய்ந்து தான் இருக்கிறது. பழக்கமாகிவிட்டது.
ஒரு முறை, துறை ரீதியான சந்திப்பு முடிந்து, எல்லோரிடமும் விடைபெறும்போது, “Love you” கொட்டிவிட்டு, கிளம்பிவிட்டேன். திரும்பும் வழியில் உடனிருந்த இருபது வயது மூத்த ஒளிப்பதிவாளர், நண்பர் கேட்டார்.
“காலைல பார்க்கும்போது என்கிட்ட சொன்னீங்க. என்கிட்ட மட்டும் சொன்னீங்கன்னு நினைச்சேன், குமார். இப்போ, எல்லார்கிட்டயும் சொல்றீங்க. அது ரொம்ப ரேர் வார்த்தை தானே. அதை நீங்க எல்லார்ட்டயும் சொன்னீங்க… எனக்குப் புரியல!” – அவரிடமிருந்து ஒருவித ‘பொஸஸிவ்’ வருத்தம் தொனித்தது.
(‘உங்களை அன்பு செய்கிறேன்!’ – எப்போதாவது சொல்லவேண்டிய அரிய வார்த்தைகளா?)
பெரிய வயதின் குழந்தைச் சந்தேகம். அவருக்கு எப்படி விளக்குவது? இன்னொரு தருணத்தில் அவரே புரிந்துகொள்வார் என்று விட்டு விட்டேன்.
பல வருடங்களுக்குப் பிறகு, என் குழுவில் அவரும் இடம் பெற்றிருந்தார். ஒரு வார வெளியூர்ப் படப்பிடிப்பு. மிக மகிழ்ச்சியாக நிறைவுற்றது. இரவு, எல்லோரும் அவரவர் வாகனங்களில் கிளம்பும்போது, சிரித்து, கதை பேசி, கைகுலுக்கி, அணைத்து, “Love you” தெளித்து அனுப்பி வைத்தேன். பதிலுக்கு என்னையும் நனைத்தது.
நான் இன்னும் சில வேலைகளை முடித்துவிட்டு, மறுநாள் காலை தான் கிளம்ப வேண்டும். ரெசார்ட் அறைக்கு, நானும் துணை இயக்குனர் மகாவும் ஓய்வெடுக்க வந்தோம்.
அந்த ஒளிப்பதிவாளரிடமிருந்து அழைப்பு வந்தது. இப்போது தானே கிளம்பினார். இரயில் நிலையம் கூட வந்திருக்காதே! எடுத்துப் பேசினேன்.
“சொல்லுங்க சார்…”
“ நல்லா இருந்தது குமார், ஷூட்டிங்… ரொம்ப திருப்தி!”
“தேங்க்யூ சார்… உங்க வொர்க் எப்பவும் போல… க்ரேட்!”
“….”
“சொல்லுங்க சார்!”
சொன்னார்… சிரித்தேன்.
சொன்னேன்… “Love you, sir!”
நன்றி சொல்லி வைத்துவிட்டார்.
மகா விசாரித்தார்… “என்ன சார் ஆச்சு?”
“ஒரு தடவை, என்கிட்ட மட்டும் தான் “Love you” சொன்னீங்கன்னு நினைச்சேன். எல்லார்ட்டயும் சொல்றீங்களே, குமார்!”-னு குறையாச் சொன்னார்… “இப்போ, எல்லார்கிட்டயும் சொல்லி வழியனுப்பினீங்க…என்கிட்ட மட்டும் சொல்லலியே! ...ஒரு தடவை சொல்லிடுங்க… நிம்மதியா டிராவல் பண்ணுவேன்”-னு சொன்னார். அதான், விட்டுப் போன, “Love you”-வை இப்போ சொன்னேன், மகா!”
மகா சொன்னார், “கிடைக்கும்போது தனக்கு மட்டும் தான் வேணும்னு தோணும், சார். மத்தவங்களுக்குக் கிடைச்சு, தனக்குக் கிடைக்காட்டா, மத்தவங்களோட சேர்த்து, தனக்கும் வேணும்னு ஏங்கும்!”
வார்த்தையில் என்ன இருக்கிறது?… வார்த்தையில் தான் அர்த்தம் இருக்கிறது!
……
ஒவ்வொருவரின் எண்ணங்களின் வடிகால்களாக… அவரவர் மனவாகு போல் வார்த்தைகள்.
“Love you”, “Great”, “Oyeee…”, “கண்ணம்மா…..!” மற்றும் “Bye”… என்னிடமிருந்து வழியும்.
நெகிழப் பழகிவிட்டு, சட்டென்று, “Bye” சொல்லிவிட்டு, பட்டாம்பூச்சி போல் பறந்துவிட்டு (மறந்து விட்டு…அல்ல!), மறுபடியும், சில வருடங்களோ, அடுத்த வாரமோ, மறுகணமோ… எந்தப் பிரிவும் நடவாதது போல், மீண்டும் வந்து மிருதுவாய் அமர்ந்து, …விட்ட இடத்திலிருந்து அன்பு செய்வது…. சுபாவம்.
“உங்க Bye-யைத் தூக்கிக் குப்பைல போடுங்க… சாதாரணமா சொல்லிட்டுப் போயிட்டீங்க… அவ்ளோ கஷ்டமா இருந்தது.”
“கண்ணம்மா…ன்னு பேச்சு வாக்கில சொன்னீங்க… ஏதோ பத்து உடம்பு பூத்த மாதிரி உற்சாகம் வந்துச்சு. இன்னும் ஒரு தடவை சொல்லுங்களேன்!”
என் வார்த்தைகளைக் கேட்டவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
என் வார்த்தைகள், பட்டாம்பூச்சிகள்! வரும். போகும். வரும். சிற்சில சமயங்களில், வராமலும் போகும்.
அது, கண்ணம்மாவோ, Love you-வோ, Bye-யோ…. நான் சொன்னதெல்லாம் ஒரே உணர்வில் தான். அன்பில் தான். அன்பில் மட்டும் தான். அதெப்படி, வித விதமாய் நிறமெடுக்கிறது?
புரிகிறது…
வார்த்தையில் என்ன இருக்கிறது? வார்த்தையில் என் நாக்கு மட்டும் இல்லை. வார்த்தையில் தான் கேட்பவரின் மனதும் இருக்கிறது.
……..
எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம்… என்றால் எனக்கு ஒரு கிறக்கம். நீங்களும் வாசித்திருப்பீர்களே!
‘அபிதா’, பாற்கடல்’, ‘ஜனனி’, ‘சிந்தா நதி’, ‘புத்ர’, ‘கங்கா’, ‘விளிம்பில்’, ‘கல் சிரிக்கிறது’, … இன்னும் எத்தனை எத்தனை வார்ப்புகள், சொற்பிரபஞ்சங்கள்.
அவர் எழுதினாரா? எழுத்து அவரை எழுதியதா? என்ற பரவசக்கேள்வி எழும். கண்கள் வாசிக்கும்போதே காதுகளில் அவர் குரல் கேட்கும். எழுத்துக்கெல்லாம் கற்பூர வாசம் கொடுத்தவர்.
91 வயது… பிறந்த நாளன்றே மறைந்தவர் (அக்டோபர் 29, 1916-2007).
“இன்னும் இருக்கிறேன்…” என்று தமது படைப்புகளின் மூலம் பேசிக்கொண்டிருக்கும், லா.ச.ரா.வின் வார்த்தைகள் இவை…
“நான் எனக்காகத் தான் எழுதிக்கொள்கிறேன். என்னில் ஓடும் ஆதார சுருதியைக் கணித்துக்கொள்ள, அதில் நேரும் இன்பத்தை என்னால் சொல்ல முடிந்தவரை வாசகனுடன் பங்கிட்டுக்கொள்வதில் இன்னொரு இன்பம் அடைகிறேன்.
கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், எல்லாம் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவனவல்ல எனும் பாதுகாப்புப் பட்டைக்குள் நான் ஒளிந்துகொள்ளப் போவதில்லை. பெயர்கள் வெவ்வேறாயிருக்கலாம். பெயர் என்பது என்ன, சலவைத்துணியின் குறி தானே!
என் பத்திரத்துக்காக, என் கதைகளின் பாத்திரங்களை மறுக்க முடியுமா? ஏன் மறுக்க வேண்டும்? நீயும் நானும் கூட இல்லாவிட்டால், பூமியில் என்னதானிருக்கிறது?
ஏற்கனவே யாரும் அறியாததை அல்லது யாருக்கும் நேராததை நான் சொல்லிவிடவில்லை. ஆனால், எனக்கு அலுக்காதவரை, சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பேன். எதை?
உலகத்தையே ஒன்றாய்ப் பிணைக்கும் ஒரே தொப்புள்கொடியின் ஆச்சரியத்தை, புதுமையை, பெருமையைப் பாடிக்கொண்டிருப்பேன்.”
லா.ச.ரா., வார்த்தைகளைப் பரப்பி ஒளிர்ந்த ஜோதி!
…. வார்த்தையில் என்ன இருக்கிறது? …. வார்த்தையில் தான் தரிசனம் இருக்கிறது.
…….
‘காலமே போதி மரம்’… என் வார்த்தைகளா? உங்கள் வார்த்தைகளா? நம் வார்த்தைகள்…
இத்தனை வாரங்களும், நான் உணர்ந்ததை இயன்றவரை பகிர்ந்து விட்டேன். விடைபெறும் வாசலுக்கு வந்துவிட்டேன். வாசித்த நீங்கள், வழியனுப்ப வாசல் வரை வந்திருப்பதைப் பார்க்கிறேன்.
…. இப்போது உங்களிடம்,
“Bye….” என்ற வார்த்தை சொல்ல வேண்டிய நேரம். ஆனால்,
“Love you!” சொல்லி அணைத்துக்கொள்ளட்டுமா? அந்தக் குளிர்வோடு கிளம்பட்டுமா?
வார்த்தையில் என்ன இருக்கிறது? …வார்த்தையில் தான் நாம் இருக்கிறோம்.
Love you………………………………………!
Leave a comment
Upload