"யானை வழித்தடத்தை மறைத்து கட்டப்பட்டிருக்கும் சுற்றுலா காட்டேஜுகளை இடிக்க தடையில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தடையை, ரத்து செய்ய முடியாது" என்று திட்டவட்டமாக அறிவித்ததது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பு ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்களின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்கரா, மாயார் பகுதிகளில் மேலும் குன்னூர் அருகே உள்ள பர்லியார், கல்லார், குறும்பாடி, கோத்தகிரி, சோலூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் பெரிய பெரிய ஜாம்பவான்களால் கட்டப்பட்டு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாக்கள் இந்த வனப்பகுதியில் வருடம் முழுவதும் வந்தவண்ணம் இருக்க... இதனால் தேசிய வன பூங்காவில் வசிக்கும் அறிய வகை மிருகங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன...
முக்கியமாக யானைகள் காலசூழ்நிலைகேற்ப மாநிலம் விட்டு பயணிக்கும். அவைகளின் வழித்தடம் முற்றிலுமாக இந்த விடுதிகளால் தடை பட்டுப் போக... அவை தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதை இயற்கை ஆர்வலர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்து, யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் விடுதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நீலகிரியில் யானை வழித்தடங்களை மீட்கக்கோரி 2008 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் வக்கீல் யானை ராஜேந்திரன். அவர் நேரடியாக பொக்காபுரம், மசினகுடி பகுதிகளுக்கு விசிட் செய்த போது.. வனத்தையும், யானை வழித்தடத்தையும் மறித்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகளை பார்த்து அதிர்ந்து போனாராம்... பின்னர் உடனடியாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விடுதிகளை அப்புறப்படுத்த வழக்கு தொடர்ந்தார்... “நீலகிரி வனப்பகுதிகள், யானை வழித்தடங்களில் மிக முக்கியமானவை. ஈரோடு, சத்தியமங்கலம், கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் இப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டடங்களால், யானைகள் வழி மாறி... கிராமங்கள், விளைநிலங்களுள் புகுவதால் மனித - விலங்கு மோதல் ஏற்படுகிறது.... இதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த அரசும், நீதிமன்றமும் தான் யானைகளுக்கு உதவிட முடியும்” என்று வழக்கை தொடுத்தார்...
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், சுற்றுலா விடுதிகள் அகற்றப்பட வேண்டும்” என்ற தடை உத்தரவை கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பித்தனர்.
யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலம், விடுதிகளின் உரிமையாளர்கள், தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அரசாணையும் அப்போதே பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை கேட்டது... நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தபோது, யானை வலசை பாதைகளை மறித்து குடியிருப்பு, விடுதிகள் என 840 கட்டுமானங்கள் இருப்பதை ஆய்வில் உறுதி செய்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்தது.
அதனை தொடர்ந்து, விசரணையை தீவிரப்படுத்திய சுப்ரீம் கோர்ட்... முதல் கட்டமாக 39 சுற்றுலா விடுதிகளை உள்ளடக்கிய 309 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது... அந்த உத்தரவின் பேரில்.. மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா தலைமையில், யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் சுற்றுலா விடுதிகளை வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நடவடிக்கை, தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... இந்த சுற்றுலா விடுதிகள், நாட்டில் உள்ள மிக முக்கிய விவிஐபி-க்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது. சில முக்கிய அரசியல் புள்ளிகளும் இதில் உள்ளடக்கம்... மாவட்ட கலெக்டர், எந்த ஒரு முக்கிய நபருக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் தன் கடமையை சரியாக செய்து முடித்தார்.
இந்த அதிரடி உத்தரவுக்கு எதிராக சில முக்கிய விடுதி உரிமையாளர்கள், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து காத்திருந்தனர்... இந்த வழக்கு ஜனவரி மாதமே முடிவுக்கு வந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அந்த அதிரடி தீர்ப்பினை 14-10-2020 அன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகள், உணவகங்கள் விவகாரத்தில்... சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடையை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளான அப்துல்நசிர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
‘தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது... வனவிலங்குகளுக்கும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும் கிடைத்த வரப்பிரசாதம்’ என்று கூறியுள்ளார் வக்கீல் யானை ராஜேந்திரன்.
ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சார்லஸ் கார்பீல்டை தொடர்பு கொண்டு கேட்டோம்...
“பாம்பை அடிச்சாச்சு... பாம்பு சாகல” இது தான். இந்த வழக்கின் தீர்ப்பை இப்படித்தான் நான் கூற முடியும். இந்த தீர்ப்பின் சரத்துகள் நாற்பத்தி நாலு பக்கம். எங்கேயும் கட்டிடங்கள் இடிக்கப்படவேண்டும் என்று கூறவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதிகள் இரண்டு பேர் இந்த காரிடோர் சம்பந்தமாக கண்காணித்து, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே மேலும் நான்கு மாதங்களுக்கு இந்த விஷயம் தொடரும்... அதற்குள் எந்த முடிவையும் யாரும் சொல்ல முடியாது. ஒரு விஷயம்...இந்த சீல் செய்யப்பட்ட விடுதிகளில், பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் விடுதி மற்றும் ஜங்கிள் ஹண்ட் என்ற விடுதி மட்டும் தப்பித்தது எப்படி? இதை கண்காணிப்புக் குழு கண்டு கொண்டால் நல்லது” என்று முடித்தார்.
வன விலங்கு இயற்கை ஆர்வலர் மோகன்ராஜை தொடர்பு கொண்டு பேசினோம்... “இந்தத் தீர்ப்பு உலகிலே எங்கும் கொடுக்கப்படாத தீர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். யானை பாதை ஆக்கிரமிப்பு குறித்து ஒரு திடமான முடிவை எடுக்க கடந்த 44 வருடமாக, பல வன விலங்கு ஆர்வலர்கள் ஆர்வத்துடன் போராடியதற்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆணித்தரமான தீர்ப்பு இது... நீலகிரி வன உயிரின சங்கத்தின் பழைய உறுப்பினர் ரிச்சர்ட் ராட் கிளிப் தான் முதன் முதலில் இந்த யானை பாதையை கண்டறிந்து சரிசெய்ய முயன்றவர். இவரின் முயற்ச்சியால் International Union for Conservation of Nature என்ற அமைப்பு, இந்த யானை மற்றும் மிருகங்களின் பாதைகளை கண்டறிய உதவிக்கரம் நீட்டியது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இதற்கான அனைத்து பணிகளையும் செய்தது. ரிச்சர்ட் ராட் கிளிப் இறந்த பின், இந்தப் பணியை Nilgiri Wild Life Association செய்து வந்தனர். இந்த யானை பாதையை கண்டறிவது மிகவும் சிக்கலான ஒன்று என்பதால் குறிப்பிட்ட சில யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி, யானையின் பாதைகளை கண்டறிந்த பின் யானை பாதைகள் வரையறுக்கப்பட்டன...
இந்த யானை பாதையில் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள்... அரசு நிலத்தில் அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா கூட வழங்கப்பட்டுள்ளது. அதில் மைசூர் ராஜாவும் அடக்கம்...! Wild Life International of India மற்றும் Nilgiri Wild Life Association இணைந்து தமிழ் நாடு அரசு இந்த நிலங்களை பணம் கொடுத்து வாங்கியது. வனத்தை பாதுகாக்க ஆரம்பத்தில் 5, 6 விடுதிகள் தான் இருந்தன. பின்னர் நூறுக்கும் மேல் கட்டப்பட்டு, சுற்றுலாக்களின் வருகை, இயற்கை சுற்றுலா என்ற பெயரில் யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டது தான் வேதனையான விஷயம். இந்த முதுமலை, பண்டிபூர், தற்போது உள்ள புலிகள் காப்பகம் முழுவதும் உலகத்தில் சிறந்த சீதோஷண நிலையை கொண்டது. அதனால் தான், உலகிலே எங்கும் இல்லாத அளவுக்கு புலிகளும், மான்களும், யானைகளும் வாழும் பகுதி.... சத்தியமங்கலம், ஈரோடு, பண்டிபூர், முதுமலை வயநாடு காடுகள் தான் சிறந்த இயற்கை சூழலை கொண்டது.
யானை ராஜேந்திரன் என்ற வக்கீல் 2008 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் இந்த யானை பாதையை மறைத்திருக்கும் அனைத்து விடுதிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று தொடுத்த வழக்கின் துவக்கம், இன்று உச்ச நீதிமன்றம் அதற்கான நல்ல தீர்ப்பை கூறியிருப்பது வரவேற்கக்கூடியது.
இந்த யானை பாதைக்கான மேப்பை, 40 இயற்கை விஞ்ஞானிகள் ஒன்றாக ஆராய்ந்து வரைந்து கொடுத்துள்ளார்கள். சீகூர் பள்ளத்தாக்கு மற்றும் நீலகிரி உயர்ந்த மலையில் யானைகளால் பயணிக்க முடியாது. இதற்கு இடையில் உள்ள அழகான சமவெளி வனத்தில் தான் இந்த யானைகளின் சுதந்திர பயணம் தொடரும்... இங்கு தான் அவைகளுக்கு வேண்டிய மூங்கில் போன்ற இயற்கை உணவும் கிடைக்கும்.
அவை நடந்த செல்ல 22 கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமான பாதை இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவற்றுக்கு வாழ்வாதாரம் சுலபமாக கிடைக்கும். உலகத்தில் சிறந்த மூலிகை உணவு யானைகளுக்கு கிடைப்பது இந்த வனத்தில் தான். இதை மனிதன் ஆக்கிரமித்து அழித்தால் என்னவாகும்? 1956 ஆம் ஆண்டு, சிங்கார மின்சார திட்டம்... மயார் மின்சார திட்டம் வந்ததால், யானை பாதை தடைபட்டது... இந்த மின்சார பணிக்கு வந்த கூலித் தொழிலாளர்கள், இந்த வனத்திலேயே செட்டில் ஆகி விவசாயம் செய்ததும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
Nilgiri Wild Life Association சேர்ந்த ரங்கராஜன் என்பவர் 1998 ஆம் ஆண்டு பைக்காரா மின் திட்டத்தால் யானை பாதை பாதிக்கப்படுகிறது என்று பொது நல வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பும் விரைவில் வர இருக்கிறது...
அதற்குள் யானை பாதையின் ஆக்கரமிப்புகள் அப்புறப்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, உலகத்தில் வனவிலங்குகளின் சுதந்திரத்திற்கு முன்னுதாரணமாகி விட்டது என்பது மகிழ்ச்சியான ஒன்று. இந்த தீர்ப்பை கம்போடியா, ஆப்பிரிக்கா நாடுகள் உதாரணமாக எடுத்துக் கொண்டு போராடுவார்கள். நம் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் முயற்ச்சி இந்த தீர்ப்பின் முக்கிய காரணம்” என்று முடித்தார்.
மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா இந்த யானை வழித்தடத்தை மீட்டு எடுக்க எடுத்த முயற்ச்சியால் தான் உச்ச நீதிமன்றத்தால் இன்னும் மாவட்ட கலெக்டராக தொடர்கிறார்.... இந்த தீர்ப்பு வந்த பின் அவரின் பொறுப்பு மேலும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பை பற்றி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா கூறும் போது...
“சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது... உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவினர், நீலகிரி மாவட்டத்திற்கு வந்த பின் தான் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப்பது தொடர்பான முழு விவரங்களும் தெரிய வரும். அந்தப் பகுதியில் வாழும் பொது மக்கள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை” என்று கூறினார்.
இந்த தீர்ப்பை நிறைவேற்ற நான்கு பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது... இந்தக் குழு விரைவில் நீலகிரிக்கு வந்து, இந்த வனப் பகுதியில் தங்களின் விசாரணையை மேற்கொள்ளும்.. அதற்கு பின் தான் மசினகுடி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் எவை எவை இடிக்கப்படும் என்பது தெரியவரும்... யானை வழித்தடத்தில் அமைந்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு பாதிப்பு வருமா என்பது அப்பொழுது தான் தெரியும்.... இந்த குழுவில், நீலகிரி மாவட்ட ஆட்சியரும் ஒரு முக்கிய அங்கம் வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.....
Leave a comment
Upload